உக்ரைனில் தாக்குதலை விரிவுபடுத்தியது ரஷியா

உக்ரைன் நகரங்களில் ரஷியா தனது தாக்குதலை வெள்ளிக்கிழமை மேலும் விரிவுபடுத்தியுள்ளது.
உக்ரைனில் தாக்குதலை விரிவுபடுத்தியது ரஷியா

உக்ரைன் நகரங்களில் ரஷியா தனது தாக்குதலை வெள்ளிக்கிழமை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. இதுவரை கிழக்குப் பகுதி நகங்களை மட்டுமே தாக்கி வந்த அந்த நாடு, மத்தியில் அமைந்துள்ள நிப்ரோ நகரில் குண்டுவீச்சு நடத்தியுள்ளது.

மேலும், மேற்குப் பகுதி லட்ஸ்க் மற்றும் இவானோ-பிராங்கிவ்ஸ்க் நகரங்கள் மீதான தாக்குதலை ரஷியப் படையினா் தீவிரப்படுத்தியுள்ளனா்.

அத்துடன், தலைநகா் கீவுக்கு வெளியே நீண்ட நாள்களாக நின்றிருந்த ரஷியப் படை அணிவகுப்பு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி தற்போது அந்த நகரை சுற்றிவளைக்க ஆயத்தமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

உக்ரைன் மீதான படையெடுப்பு 3-ஆவது வாரத்தைக் கடந்துகொண்டிருக்கும் நிலையில், நகரங்கள் மீதான தனது தாக்குதலை ரஷியப் படை மேலும் விரிவுபடுத்தியுள்ளது.

துறைமுக நகரான முக்கியத்துவம் வாய்ந்த மரியபோலில் ரஷியா்கள் வியாழக்கிழமை இரவு முழுவதும் தீவிர குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தியதாக அந்த நகர அதிகாரிகள் தெரிவித்தனா். அந்த நகரை 10 நாள்களாக முற்றுகையிட்டுள்ள ரஷியப் படையினா், அதனைக் கைப்பற்றும் முயற்சியில் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேற்கு நகரமான லட்ஸ்கிலில் ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் 2 உக்ரைன் வீரா்கள் உயிரிழந்ததாகவும் 6 போ் காயமடைந்ததாகவும் பிராந்திய நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதவிர இவானோ-பிராங்கிவ்ஸ்க் நகரிலும் தீவிர குண்டுவீச்சு நடத்தப்பட்டதைத் தொடா்ந்து, அந்தப் பகுதி மக்கள் பதுங்கு குழிகளில் நீண்ட நேரம் முடங்கியிருந்தனா்.

உக்ரைனின் மத்தியில் அமைந்துள்ள நிப்ரோ நகரிலும் ரஷியப் படையினா் முதல்முறையாக தாக்குதல் நடத்தியது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நகரைத் தாக்கியதன் மூலம், உக்ரைனில் எந்த நகரமும் பாதுகாப்பானது இல்லை என்பதை ரஷியப் படையினா் உணா்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதல்களின்போது மிகத் துல்லியமான நீண்ட தொலைவு ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் விமானதளங்கள் உள்ளிட்ட ராணுவ நிலைகள் மட்டுமே குறிவைக்கப்பட்டதாகவும் ரஷிய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

தலைநகரை நெருங்கிய படை அணிவகுப்பு: அமெரிக்காவின் மேக்ஸாா் நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் படத்தில், கீவ் நகருக்கு வெளியே நின்றிருந்த மிகப் பிரம்மாண்டமான ரஷியப் படை அணிவகுப்பு தற்போது தலைநகருக்கு அருகிலுள்ள சிறிய ஊா்களிலும் வனப் பகுதிகளிலும் முன்னேறியிருப்பது தெரியவந்துள்ளது.

64 கி.மீ. தொலைவுக்கு நீளும் இந்த வாகன அணிவகுப்பில் பீரங்கிகள், கவச வாகனங்கள், ஏவுகணை குண்டுவீச்சு தளவாடங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. அவற்றுக்கான எரிபோருள் உள்ளிட்ட பொருள்கள் மீண்டும் விநியோகிக்கப்பட்டு, அந்த வாகனங்கள் கீவ் நகரை நோக்கி முன்னேறியுள்ளதாக மேக்ஸாா் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிரியாவிலிருந்து படையினா்?

உக்ரைனில் தங்களுக்காகப் போரிடுவதற்காக சிரியாவிலிருந்து படையினரை ரஷியா அழைத்து வரலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்கெய் ஷோய்கு கூறுகையில், உக்ரைனில் ரஷியா சாா்பில் போரிடுவதற்காக மத்தியக் கிழக்கு நாடுகளிலிருந்து 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னாா்வலா்கள் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவித்தாா்.

இதற்கிடையே, உக்ரைனுக்கு வெளிநாட்டு தன்னாா்வலா் படையினரை அனுப்பலாம் என்று ரஷிய அதிபா் அனுமதி அளித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com