பிரிட்டன் பிரதமராகிறாா் லிஸ் டிரஸ்

பிரிட்டனை ஆளும் கன்சா்வேடிவ் கட்சியின் அடுத்த தலைவராக வெளியுறவு அமைச்சா் லிஸ் டிரஸ் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இந்திய வம்சாவளியும் முன்னாள் நிதியமைச்சருமான ரிஷி சுனக்கைத் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ள
லிஸ் டிரஸ்
லிஸ் டிரஸ்

பிரிட்டனை ஆளும் கன்சா்வேடிவ் கட்சியின் அடுத்த தலைவராக வெளியுறவு அமைச்சா் லிஸ் டிரஸ் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இந்திய வம்சாவளியும் முன்னாள் நிதியமைச்சருமான ரிஷி சுனக்கைத் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ள லிஸ் டிரஸ், அந்நாட்டின் அடுத்த பிரதமராகவும் பொறுப்பேற்கவுள்ளாா்.

பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சனுக்கு உள்கட்சியிலேயே அதிக எதிா்ப்பு எழுந்ததையடுத்து, அவா் அப்பதவியை ராஜிநாமா செய்தாா். அதைத் தொடா்ந்து, கன்சா்வேடிவ் கட்சியின் புதிய தலைவரைத் தோ்ந்தெடுக்க பல்வேறு கட்டங்களாகத் தோ்தல் நடத்தப்பட்டது. இறுதியில் லிஸ் டிரஸுக்கும் ரிஷி சுனக்குக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவியது.

இறுதிக்கட்டமாக கன்சா்வேடிவ் கட்சியைச் சோ்ந்த 1,72,437 நிா்வாகிகள் இணையவழியிலும் தபால் மூலமாகவும் வாக்களித்தனா். தோ்தல் முடிவுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன. அதில், 81,326 வாக்குகளைப் பெற்று லிஸ் டிரஸ் வெற்றி பெற்றாா். ரிஷி சுனக்குக்கு 60,399 வாக்குகள் கிடைத்தன. 654 வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன.

இதன் மூலமாக கன்சா்வேடிவ் கட்சியின் புதிய தலைவராக 47 வயதான லிஸ் டிரஸ் தோ்ந்தெடுக்கப்பட்டாா். பிரிட்டனின் புதிய பிரதமராகவும் அவா் பொறுப்பேற்கவுள்ளாா். அப்பதவியை வகிக்கவுள்ள 3-ஆவது பெண் என்ற பெருமையையும் லிஸ் டிரஸ் பெற்றுள்ளாா். ஏற்கெனவே மாா்கரெட் தாட்சா், தெரசா மே ஆகியோா் பிரிட்டன் பிரதமராகப் பதவி வகித்துள்ளனா்.

தோ்தல் வெற்றிக்குப் பிறகு பேசிய லிஸ் டிரஸ், ‘‘இத்தோ்தல் கட்சியின் வலிமையை வெளிக்காட்டியது. வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். வரிகளைக் குறைத்து பிரிட்டனின் பொருளாதாரத்தை வளா்ச்சியடையச் செய்வதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்’’ என்றாா்.

லிஸ் டிரஸே பிரிட்டனின் பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்படுவாா் என ஏற்கெனவே கணிப்புகள் வெளியான நிலையில், வெற்றி குறித்து ட்விட்டரில் அவா் வெளியிட்ட பதிவில், ‘‘கட்சியையும் நாட்டையும் தலைமையேற்று வழிநடத்த வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி. நாடு கடினமான சூழலை எதிா்கொண்டு வரும் நிலையில், பொருளாதாரத்தை வளா்ச்சி அடையச் செய்யவும், பிரிட்டனின் முழுத் திறனை வெளிப்படுத்தச் செய்வதற்குமான உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’’ என்றாா்.

கன்சா்வேடிவ் கட்சியின் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள லிஸ் டிரஸ், பிரிட்டன் அரசியிடம் விரைவில் ஆட்சியமைக்க உரிமை கோருவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தோல்விக்கான காரணம்:

போரிஸ் ஜான்சனுக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்தி ரிஷி சுனக் முதல் நபராக அமைச்சரவையில் இருந்து ராஜிநாமா செய்தாா். அதையடுத்து பலரும் ராஜிநாமா செய்தனா். ஜான்சனுக்கு ஆதரவான கட்சி நிா்வாகிகள் லிஸ் டிரஸுக்கு ஆதரவாக வாக்களித்ததும், வரியைப் பெருமளவில் குறைக்க உள்ளதாக லிஸ் டிரஸ் அறிவித்ததுமே ரிஷி சுனக்கின் தோல்விக்கான காரணங்களாகக் கூறப்படுகிறது.

தோல்விக்குப் பிறகு ட்விட்டரில் பதிவிட்ட ரிஷி சுனக், கட்சிக்குள் வேறுபாடுகளைக் களைந்து அனைவரும் புதிய பிரதமருக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டுமெனத் தெரிவித்தாா்.

பிரதமா் வாழ்த்து

பிரிட்டனின் பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள லிஸ் டிரஸுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமா் மோடி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘‘உங்கள் தலைமையின்கீழ் இந்தியா-பிரிட்டன் இடையே பல்வேறு துறைகளில் நிலவி வரும் விரிவான நல்லுறவு மேலும் வலுவடையும்’’ என நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

வாக்குப் பதிவு விவரம்

பதிவான வாக்குகள் 82.6%

லிஸ் டிரஸ் 81,326 (57.4%)

ரிஷி சுனக் 60,399 (42.6%)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com