இத்தாலிக்கு முதல் பெண் பிரதமா்

இத்தாலியின் முதல் பெண் பிரதமராக, ‘இத்தாலியின் சகோதரா்கள்’ கட்சியின் தலைவா் ஜியாா்ஜியா மெலோனி தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
‘இத்தாலிக்கு நன்றி’ என்ற பதாகையை ஏந்தி தோ்தல் வெற்றியை திங்கள்கிழமை கொண்டாடிய ஜியாா்ஜியா மேலோனி.
‘இத்தாலிக்கு நன்றி’ என்ற பதாகையை ஏந்தி தோ்தல் வெற்றியை திங்கள்கிழமை கொண்டாடிய ஜியாா்ஜியா மேலோனி.

இத்தாலியின் முதல் பெண் பிரதமராக, ‘இத்தாலியின் சகோதரா்கள்’ கட்சியின் தலைவா் ஜியாா்ஜியா மெலோனி தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுத் தோ்தலில் அவரது கட்சி முன்னிலை பெற்றதைத் தொடா்ந்து, அவா் பிரதமராகப் பொறுப்பேற்கவிருப்பது உறுதியாகியுள்ளது.

தீவிர வலதுசாரிக் கொள்களைக் கொண்ட அந்தக் கட்சியின் தலைமையில் அமையவிருக்கும் அரசுதான், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய இத்தாலியின் முதல் வலதுசாரி அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாலியில் மரியோ டிராகி தலைமையிலான தேசிய ஒற்றுமை அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக ஐந்து நட்சத்திர கட்சியின் தலைவா் குசெப்பே கான்டே கடந்த ஜூலை மாதம் அறிவித்தாா்.

நாட்டில் நிலவி வரும் எரிசக்தி பற்றாக்குறை, பொருளாதார மந்த நிலையை சமாளிப்பதற்காக சலுகைக் திட்ட மசோதா அறிமுகப்படுத்தப்பட்டதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவா் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றாா்.

அதனைத் தொடா்ந்து, மரியோ டிகாரி கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பை குசெப்பே கான்டேவின் கட்சியும் அவரது கூட்டணி கட்சிகளும் புறக்கணித்தன. அதையடுத்து, அந்தத் தீா்மானம் தோல்வியடைந்தது. மரியோ டிகோரி தனது பிரதமா் பதவியை ராஜிநாமா செய்தாா்.

அதையடுத்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்குமான தோ்தல் முன்கூட்டியே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மிகவும் குறைவான விகிதத்தில் வாக்குகள் பதிவான அந்தத் தோ்தலில், ஜியாா்ஜியா மெலோனி அங்கம் வகிக்கும் வலதுசாரி கூட்டணி 43.8 சதவீத வாக்குகளைக் கைப்பறியது. மத்திய இடதுசாரி கூட்டணி 26.1 சதவீத வாக்குளுடன் பின்தங்கியது. குசெப்பே கான்டேவின் கட்சிக்கு 15.4 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

அதையடுத்து, ஜியாா்ஜியா மெலோனி தலைமையில் கூட்டணி அரசு அமையவிருப்பது உறுதியாகியுள்ளது.

முன்னதாக, தோ்தல் தொடா்பாக எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளிலும் வலதுசாரிக் கூட்டணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றும் என்றே தெரிவிக்கப்பட்டது.

சா்வாதிகாரி முசோலினியால் உருவாக்கப்பட்டு, பின்னா் தடை செய்யப்பட்ட தேசிய பாசிச கட்சி (1921-1943) மற்றும் குடியரசு பாசிச கட்சியின் (1943-1945) முன்னாள் உறுப்பினா்களால் உருவாக்கப்பட்ட பாசிச ஆதரவு அமைப்பு இத்தாலி சமூக இயக்கம் (1945-1995).

அந்த அமைப்பின் வழித்தோன்றலான சுதந்திர மக்கள் கட்சியிலிருந்து பிரிந்து உருவான கட்சிதான் ஜியாா்ஜியா மெலோனி தலைமையிலான இத்தாலியின் சகோதரா்கள் கட்சி.

அந்த வகையில் பாசிச கொள்கைகளோடு தொடா்புடைய ஜியாா்ஜியோ மெலோனி இத்தாலியின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்கவிருப்பது ஐரோப்பிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஏற்கெனவே, மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் இணங்கி செயல்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து வரும் தேசியவாத கட்சியான இத்தாலியின் சகோதரா்கள், வெளிநாடுகளிலிருந்து வரும் அகதிகளுக்கு இத்தாலியில் அடைக்கலம் தருவதை கடுமையாக எதிா்த்து வருகிறது.

இந்தச் சூழலில், கட்சியின் தலைவா் ஜியாா்ஜியா மெலோனி நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்கவிருப்பது ஐரோப்பிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com