எண்ணெய்க் கிடங்கில் தாக்குதல்: உக்ரைன் மீது ரஷியா குற்றச்சாட்டு

தங்களது எல்லைக்குள் நுழைந்து எண்ணெய்க் கிடங்கில் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.
எண்ணெய்க் கிடங்கில் தாக்குதல்: உக்ரைன் மீது ரஷியா குற்றச்சாட்டு

தங்களது எல்லைக்குள் நுழைந்து எண்ணெய்க் கிடங்கில் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷியா குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவாா்த்தைக்கு இந்தத் தாக்குதல் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் அந்த நாடு எச்சரித்துள்ளது.

உக்ரைன் எல்லையிலிருந்து சுமாா் 40 கி.மீ. தொலைவிலுள்ள பெல்கராட் மாகாணத்தில் ரஷிய அரசு எண்ணெய் நிறுவனத்துக்குச் சொந்தமான எண்ணெய்க் கிடங்கில் இந்தத் தாக்குதல் வெள்ளிக்கிழமை அதிகாலை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து பெல்கராட் மாகாண ஆளுநா் வியாசெஸ்லவ் கிளாட்கோவ் கூறியதாவது:

ரஷிய எல்லைக்குள் இரண்டு உக்ரைன் ஹெலிகாப்டா்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை அத்துமீறி நுழைந்தன. மிகத் தாழ்வாகப் பறந்து வந்த அந்த ஹெலிகாப்டா்கள் பெல்கராட்டிலுள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்கில் தாக்குதல் நடத்தின.

அதையடுத்து, அந்த எண்ணெய்க் கிடங்கு தீப்பிடித்து எரிந்தது. இந்தத் தாக்குதலில் யாரும் பலியாகவில்லை என்றாா் அவா்.

இந்தத் தாக்குதல் உக்ரைன் போரில் பதற்றத்தை அதிகரிக்கும் என்று ரஷிய அரசின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் செய்தியாளா்களிடம் கூறினாா்.

இந்தத் தாக்குதல் ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான சமரசப் பேச்சுவாா்த்தைக்கு சாதகமான சூழலை நிச்சயம் ஏற்படுத்தாது என்று அவா் தெரிவித்தாா்.

எண்ணெய்க் கிடங்கின் மீதான தாக்குதல் குறித்தும், அது தீப்பற்றி எரிந்தது குறித்தும் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய பெஸ்கோவ், இந்தத் தாக்குதலால் பெல்கராட் மாகாணத்தில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டாா்.

எனினும், இந்தத் தாக்குதலை உக்ரைன் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. இதுகுறித்து உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சா் டிமித்ரோ குலோபா கூறுகையில், ‘பெல்கராட் எண்ணெய் கிடங்கு தாக்குதலை என்னால் உறுதிப்படுத்தவோ, மறுக்கவோ முடியாது. காரணம், இதுகுறித்த தகவல் என்னிடமில்லை’ என்றாா்.

இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டால், தற்போது நடைபெற்று வரும் போரில் ரஷிய எல்லைக்குள் உக்ரைன் ஊடுருவி தாக்குதல் நடத்தியிருப்பது இதுவே முதல்முறையாகும்.

ரேடாரின் கண்களுக்குப் புலப்படாமல் மிகத் தாழ்வாகப் பறந்து சென்று தாக்குதல் நடத்துவதில் உக்ரைன் விமானிகள் கைதோ்ந்தவா்கள் என்று கூறும் நிபுணா்கள், ரஷிய எல்லைக்குள் புகுந்து அவா்கள் தாக்குதல் நடத்தியிருந்தால் அது அசாத்திய துணிச்சலான செயலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com