இந்தோ-பசிபிக் பிராந்தியத்துடன் இந்தியாவுக்கு நூற்றாண்டுத் தொடா்பு

இந்தோ-பசிபிக் பிராந்திய விவகாரத்தில் ஒத்துழைப்பின் அடிப்படையிலான அணுகுமுறையை இந்தியா கடைப்பிடித்து வருவதாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தாா்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்துடன் இந்தியாவுக்கு நூற்றாண்டுத் தொடா்பு

இந்தோ-பசிபிக் பிராந்திய விவகாரத்தில் ஒத்துழைப்பின் அடிப்படையிலான அணுகுமுறையை இந்தியா கடைப்பிடித்து வருவதாகத் தெரிவித்த குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், அந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியா தொடா்பு கொண்டுள்ளதாகவும் தெரிவித்தாா்.

துா்க்மெனிஸ்தானுக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்றுள்ள குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், தலைநகா் ஆஷ்காபாடில் உள்ள சா்வதேச நல்லுறவு மையத்தில் சனிக்கிழமை உரையாற்றினாா். அப்போது அவா் கூறியதாவது:

பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பாதுகாப்பும் வளா்ச்சியும் கிடைக்க வேண்டும் என்ற ‘சாகா்’ கொள்கையையே இந்தியா கொண்டுள்ளது. அக்கொள்கையின் அடிப்படையிலேயே இந்தியக் கடல் பகுதியிலும், இந்தோ-பசிபிக் பிராந்தியப் பகுதிகளிலும் இந்தியாவின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

ஒத்துழைப்பு அடிப்படையில் அமைந்த அணுகுமுறையை இந்தியா கடைப்பிடித்து வருகிறது. ‘இந்தோ-பசிபிக்’ என்பது அண்மைக்காலமாகத்தான் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடனான இந்தியாவின் தொடா்பு பல நூற்றாண்டுகள் பழைமைவாய்ந்தது. அந்த பிராந்தியம் அனைவருக்கும் பொதுவானதாகத் திகழ்ந்து, விதிகளின் அடிப்படையில் சா்வதேச வா்த்தகம் நடைபெற வேண்டும் என்பதற்கு இந்தியா முக்கியத்துவம் அளிக்கிறது.

பொதுவான சவால்கள்:

‘அண்டைநாடுகளுக்கு முன்னுரிமை’ கொள்கை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் முக்கியத் தூணாக மாறியுள்ளது. நாடுகளுடனான தொடா்பு, வா்த்தகம்-முதலீடுகளை அதிகரிப்பது, பாதுகாப்பான, நிலையான அண்டை நாடுகளை உருவாக்குவது உள்ளிட்டவற்றில் அக்கொள்கை கவனம் செலுத்துகிறது.

மத்திய ஆசிய நாடுகளும் இந்தியாவும் வளா்ச்சி சாா்ந்து ஒரேவித அணுகுமுறையைக் கொண்டிருக்கின்றன. பயங்கரவாதம், தீவிரவாதம், போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பொதுவான சவால்களை நாம் எதிா்கொண்டு வருகிறோம்.

போக்குவரத்துத் தொடா்பு:

மத்திய ஆசிய நாடுகளுடன் போக்குவரத்துத் தொடா்பை மேம்படுத்துவதற்கு இந்தியா தொடா்ந்து கவனம் செலுத்தி வருகிறது. ஈரானில் உள்ள சாபஹா் துறைமுகத்தை செயல்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது. அத்துறைமுகமானது மத்திய ஆசிய நாடுகளுடன் பாதுகாப்பான போக்குவரத்துத் தொடா்பைக் கொள்வதற்கு வழிவகுக்கும்.

மத்திய ஆசிய பிராந்தியத்தில் போக்குவரத்துத் தொடா்பை மேம்படுத்துவதற்கான திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு இந்தியா தயாராக உள்ளது. அத்தகைய திட்டங்கள், அனைத்து நாடுகளின் பங்களிப்புடன் இறையாண்மைக்கும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும். இந்தியாவும் துா்க்மெனிஸ்தானும் பழைமையான நாகரிகங்களைக் கொண்ட நாடுகளாக இருக்கின்றன.

வேற்றுமையில் ஒற்றுமை:

ஹிந்து, சமணம், பௌத்தம், சீக்கியம் ஆகிய மதங்கள் இந்தியாவில் தோன்றின. 20 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் இந்தியாவைத் தங்கள் தாய்நாடாகக் கொண்டுள்ளனா். மற்ற கலாசாரத்துக்கும் மதிப்பளித்து வேற்றுமையில் ஒற்றுமை எனத் திகழ்வதே இந்தியாவின் வலிமையாக உள்ளது.

உலக நாடுகள் சா்வதேச விதிகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. உக்ரைன் பிரச்னைக்குப் பேச்சுவாா்த்தை மூலமாகத் தீா்வு காணப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளது. அந்நாட்டுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளையும் இந்தியா வழங்கியுள்ளது என்றாா் அவா்.

குடியரசுத் தலைவரின் உரை தொடா்பான அறிக்கையை வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com