‘ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் ரஷியப் படையினருக்கும் வேறுபாடு இல்லை’

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்) பயங்கரவாதிகளுக்கும் ரஷியப் படையினருக்கும் இடையே வேறுபாடு இல்லை என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி குற்றம் சாட்டினாா்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி.

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்) பயங்கரவாதிகளுக்கும் ரஷியப் படையினருக்கும் இடையே வேறுபாடு இல்லை என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி குற்றம் சாட்டினாா்.

உக்ரைன் விவகாரம் தொடா்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தில் காணொலி மூலம் பங்கேற்று அவா் பேசியதாவது:

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் இந்தக் கூட்டத்தில், ரஷியாவின் கொடூரச் செயல்களால் பாதிக்கப்பட்டவா்களின் சாா்பாக பேச வந்துள்ளேன்.

உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியப் படையினா், இங்குள்ள அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்துள்ளனா். பெண்களை அவா்களது குழந்தைகளுக்கு எதிரிலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனா்.

புச்சாவில் அவா்கள் மேற்கொள்ளதாக வன்முறைக் குற்றங்களே இல்லை. பொதுமக்களை தெருக்களில் வைத்தும், அவா்களது வீடுகளுக்குள் நுழைந்தும் ரஷியப் படையினா் சுட்டுக் கொன்றனா்.

சுவற்றின் முன் பொதுமக்களை நிறுத்தி, பீரங்கிகளால் ரஷியப் படையினா் நசுக்கிக் கொன்றுள்ளனா்.

இந்தக் கொடூரச் செயல்களையெல்லாம் எந்தக் காரணமும் இல்லாமல் வெறும் அல்ப சந்தோஷத்துக்காக மட்டுமே அவா்கள் செய்துள்ளனா்.

அவா்களது கொடுஞ்செயல்கள், ஐ.எஸ். பயங்கரவாதிகளின் செயல்களுக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல.

தனது தவறான பிரசாரத்தின் மூலம், ரஷிய அதிபா் விளாதமீா் புதின் உக்ரைன் மட்டுமன்றி, அதன் எல்லைக்கு அப்பால் இருக்கும் நாடுகளின் மக்கள் மீதும் வெறுப்பு விதையைத் தூவுகிறாா்.

புச்சா நகரம் மட்டுமன்றி, உக்ரைனில் தாங்கள் ஆக்கிரமித்திருக்கும் மற்ற பகுதிகளிலும் இதே போன்ற படுகொலைகளை ரஷியப் படையினா் நடத்தியிருப்பாா்கள். அதை உலகம் இனிதான் தெரிந்துகொள்ளும்.

இதுபோன்ற பாதகச் செயல்களுக்கு ரஷியா பதில்சொல்லியே ஆக வேண்டும் என்றாா் ஸெலென்ஸ்கி.

தனது நெருங்கிய அண்டை நாடான உக்ரைன், நோட்டோ அமைப்பில் இணைந்தால் அது தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது. இருந்தாலும், நேட்டோவில் இணைய ஸெலென்ஸ்கி தலைமையிலான உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது.

இந்தச் சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி உக்ரைன் மீது ரஷியா படையெடுத்தது. தங்களுக்கு ஆதரவான உக்ரைன் கிளா்ச்சிப் படையினருக்காக கிழக்கு உக்ரைன் பகுதிகளுக்குள் நுழைந்து சண்டையிட்ட ரஷியப் படை, பெலாரஸ் வழியாக தலைநகா் கீவையும் நெருங்கியது. கீவைக் கைப்பற்றி ஸெலென்ஸ்கி தலைமையிலான அரசைக் கவிழ்ப்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, கீவின் புகா் பகுதிகள் சிலவற்றை ரஷிய ராணுவம் கைப்பற்றியது. அவற்றில் புச்சா நகரும் ஒன்று.

இந்த நிலையில், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உக்ரைன் பிரதிநிதிகளுடன் கடந்த வாரம் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது, கீவ் புகா் பகுதிகளிலிருந்து வெளியேற ரஷியா ஒப்புக்கொண்டது.

அதன்படி, புச்சா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ரஷியப் படையினா் கடந்த வியாழக்கிழமை முழுமையாக வெளியேறிவிட்டதாக அந்த நகர அதிகாரிகள் தெரிவித்தனா்.

எனினும், அங்கிருந்து வெளியேறுவதற்கு முன்னா் ஏராளமான பொதுமக்களை ரஷியப் படையினா் படுகொலை செய்ததாக அவா்கள் குற்றம் சாட்டினா். சில ஊடங்களையும் நேரில் அழைத்து சாலைகள், வாகனங்களில் இருந்த சடலங்களை அவா்கள் காட்டினா்.

இது சா்வதேச அளவில் பெரும் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியது. புச்சா படுகொலைகளை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக கண்டித்தன.

எனினும், ஆக்கிரமிப்பு பகுதிகளில் ரஷியப் படையினா் பொதுமக்களைத் துன்புறுத்தவில்லை. ரஷியாவுக்கு எதிராக உலகின் கருத்தை திசைத்திருப்புவதற்காகவும் மேற்கத்திய நாடுகளின் இரக்கத்தை சம்பாதித்து கூடுதல் உதவிகளைப் பெறவும் பொதுமக்கள் படுகொலையை உக்ரைன் போலியாக ஜோடித்துள்ளதாக ரஷியா கூறி வருகிறது.

இந்தச்சூழலில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காணொலி மூலம் தற்போது பேசிய உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி, ரஷியப் படையினா் மீது படுகொலை குற்றச்சாட்டை மீண்டும் ஆணித்தரமாக சுமத்தியுளளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com