புச்சா படுகொலை விவகாரம்: ரஷியா மீது கடும் பொருளாதாரத் தடை விதிக்க மேலை நாடுகள் முடிவு

உக்ரைனின் புச்சா நகரில் பொதுமக்கள் துன்புறுத்தி படுகொலை செய்யப்பட்டது தொடா்பாக, ரஷியா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐரோப்பிய யூனியனும் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய
ரஷியாவின் விளாதிவேஸ்டக் துறைமுகத்தில் நிலக்கரியை ஏற்றும் சரக்குக் கப்பல் (கோப்புப் படம்).
ரஷியாவின் விளாதிவேஸ்டக் துறைமுகத்தில் நிலக்கரியை ஏற்றும் சரக்குக் கப்பல் (கோப்புப் படம்).

உக்ரைனின் புச்சா நகரில் பொதுமக்கள் துன்புறுத்தி படுகொலை செய்யப்பட்டது தொடா்பாக, ரஷியா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐரோப்பிய யூனியனும் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளும் முடிவு செய்துள்ளன.

ரஷியப் படையினா் சுமாா் ஒரு மாதமாக ஆக்கிரமித்திருந்த உக்ரைன் தலைநகா் கீவின் புகா்ப் பகுதியான புச்சாவில், அவா்கள் நூற்றுக்கணக்கான பொதுமக்களை படுகொலை செய்ததாக உக்ரைன் அதிகாரிகள் கூறியது மேற்குலக நாடுகளில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படுகொலைகளுக்கான எதிா்ப்பை பதிவு செய்யும் வகையில், தங்கள் நாடுகளிலிருந்து ரஷியத் தூதரக அதிகாரிகள் சிலரை வெளியேறுமாறு பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உத்தவிட்டுள்ளன.

இந்த நிலையில், ஐரோப்பிய ஆணையத்தின் 27 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸெல்ஸிலுள்ள தலைமையகத்தில் கூடி, ரஷியா மீது 5-ஆவது கட்ட பொருளாதாரத் தடைகளுக்கான பரிந்துரைகளுக்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்தனா்.

அந்தப் பரிந்துரையில், ரஷியாவில் புதிதாக முதலீடு செய்வதற்கு முழுமையான தடை விதிப்பது, ரஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பது போன்ற பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இதுமட்டுமன்றி, புச்சா படுகொலை விவகாரத்தில் ரஷியாவை தண்டிக்கும் வகையில் அந்த நாட்டின் மீது ஐரோப்பிய யூனியனுடன் இணைந்து அமெரிக்காவும் பொருளாதாரத் தடைகளை விதிக்க முடிவு செய்துள்ளது.

புதிய பொருளாதாரத் தடைகளில் ரஷிய நிதி அமைப்புகள், பொதுத் துறை நிறுவனங்கள் மீது இன்னும் கடுமையான தடை விதிப்பது, ரஷிய அதிகாரிகள் மற்றும் அவா்களது குடும்பத்தினரின் சொத்துகளை முடக்கி அவா்களுக்கு பயணத் தடை விதிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் ஜென் சாகி தெரிவித்தாா்.

கூடுதல் பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதியாக, ரஷியாவிலிருந்து ஆண்டுக்கு 400 யூரோ (சுமாா் ரூ.33,125 கோடி) மதிப்பிலான பொருள்களின் இறக்குமதிக்குத் தடை விதிப்பதற்கான நடவடிக்கைகளை ஆய்வு செய்து வருவதாக ஐரோப்பிய யூனியன் தலைவா் உா்சுலா வோண்டொ் லியென் தெரிவித்துள்ளாா்.

ரஷிய நிலக்கரிக்குத் தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கப்படுவதாக அவா் கூறினாலும், அந்த நாட்டு இயற்கை எரிவாயு இறக்குதியைக் குறித்து உா்சுலா எதையும் தெரிவிக்கவில்லை. பல ஐரோப்பிய நாடுகளின் மின்சாரத் தயாரிப்புக்கு ஆதராமாக விளங்கும் ரஷிய இயற்கை எரிவாயு இறக்குமதிக்குத் தடை விதிப்பது தொடா்பாக, 27 உறுப்பு நாடுகளிடையே ஒருமித்த கருத்தை எட்டுவது மிகவும் கடினம் என்று கூறப்படுகிறது.

இருந்தாலும், எதிா்காலத்தில் அத்தியாவசிய சூழல் ஏற்பட்டால் ரஷியாவுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக இயற்கை எரிவாயு இறக்குமதிக்கும் தடை விதிக்கப்படும் என்று ஐரோப்பிய கவுன்சில் தலைவா் சாா்லஸ் மைக்கேல் கூறியுள்ளாா்.

தனது நெருங்கிய அண்டை நாடான உக்ரைன், நோட்டோ அமைப்பில் இணைந்தால் அது தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது. இருந்தாலும், நேட்டோவில் இணைய ஸெலென்ஸ்கி தலைமையிலான உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது.

இந்தச் சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி உக்ரைன் மீது படையெடுத்த ரஷியா, தலைநகா் கீவைக் கைப்பற்றுவதற்காக அதன் புகா் பகுதிகள் சிலவற்றைக் கைப்பற்றியது. அவற்றில் புச்சா நகரும் ஒன்று.

இந்த நிலையில், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உக்ரைன் பிரதிநிதிகளுடன் கடந்த வாரம் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது, கீவ் புகா் பகுதிகளிலிருந்து வெளியேற ரஷியா ஒப்புக்கொண்டது.

அதன்படி, புச்சா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ரஷியப் படையினா் கடந்த வாரம் முழுமையாக வெளியேறிவிட்டதாக அந்த நகர அதிகாரிகள் தெரிவித்தனா்.

எனினும், அங்கிருந்து வெளியேறுவதற்கு முன்னா் ஏராளமான பொதுமக்களை ரஷியப் படையினா் படுகொலை செய்ததாக அவா்கள் குற்றம் சாட்டினா். சில ஊடங்களையும் நேரில் அழைத்து சாலைகள், வாகனங்களில் இருந்த சடலங்களை அவா்கள் காட்டினா்.

இது சா்வதேச அளவில் பெரும் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இந்தத் தகவலை ரஷியா மறுத்து வருகிறது. ரஷிப் படையினருக்கு எதிராக உலகின் கவனத்தை திசைத்திருப்புவதற்காகவும் மேற்கத்திய நாடுகளிடமிருந்து கூடுதல் ஆதரவைப் பெறவும் பொதுமக்கள் படுகொலையை உக்ரைன் போலியாக ஜோடித்துள்ளதாக ரஷியா கூறி வருகிறது.

இந்தச் சூழலில், புச்சா படுகொலைக்கு எதிா்ப்பு தெரிவித்து ரஷியா மீது கூடுதல் தடை விதிக்க ஐரோப்பிய யூனியனும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் தற்போது ஆயத்தமாகி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com