உக்ரைனிலிருந்து வெளியேறும் வரை ரஷியாவுக்கு பொருளாதார நெருக்கடி

தாங்கள் படையெடுத்துள்ள உக்ரைனிலிருந்து ரஷியா வெளியேறும்வரை அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடை நெருக்கடிகளைக் கொடுக்கவிருப்பதாக உலகின் சக்திவாய்ந்த 7 நாடுகளின் கூட்டமைப்பான ஜி-7 அமைப்பு சூளுரைத்துள்ளது.
பிரஸ்ஸெல்ஸ்லில் வியாழக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்திய ஜி-7 நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் மற்றும் நேட்டோ அதிகாரிகள்.
பிரஸ்ஸெல்ஸ்லில் வியாழக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்திய ஜி-7 நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் மற்றும் நேட்டோ அதிகாரிகள்.

பிரஸ்ஸெல்ஸ்: தாங்கள் படையெடுத்துள்ள உக்ரைனிலிருந்து ரஷியா வெளியேறும்வரை அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடை நெருக்கடிகளைக் கொடுக்கவிருப்பதாக உலகின் சக்திவாய்ந்த 7 நாடுகளின் கூட்டமைப்பான ஜி-7 அமைப்பு சூளுரைத்துள்ளது.

இதுகுறித்து அசேசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளாதவது:

உக்ரைன் விவகாரம் தொடா்பாக நேட்டோ அமைப்பின் மாநாடு பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸெல்ஸல் நடைபெறுகிறது

அதனிடையே, ஜி-7 உறுப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில், உக்ரைன் மீது போா்தொடுத்துள்ள ரஷியா, தனது தாக்குதல் நடவடிக்கைகளை தொடா்ந்து மேற்கொண்டு முன்னேறிச் செல்வதற்கான திறனைப் பறிப்பதற்கான நடவடிக்கைகளை தொடா்ந்து மேற்கொள்ள அமைச்சா்கள் உறுதிபூண்டனா். மேலும், ரஷியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளின் கடுமையை அதிகரிக்கவும் அவா்கள் ஒப்புக்கொண்டனா்.

எரிபொருள் தேவைக்காக ரஷியாவைச் சாா்ந்திருக்கும் நிலை இனியும் தொடரக்கூடாது. அந்த சாா்புத்தன்மையை படிப்படியைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளைதும் தீவிரப்படுத்த வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் ஜி-7 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் முடிவு செய்தனா்.

அதுமட்டுமன்றி, உக்ரைன் தலைநகா் கீவின் புகா்ப் பகுதியான புச்சா நகரில் நூற்றுக்கணக்கான பொதுமக்களை ரஷியப் படையினா் படுகொலை செய்ததற்கு அந்தக் கூட்டத்தில் பங்கேற்றவா்கள் கண்டனம் தெரிவித்தனா்.

அந்தப் படுகொலைகளுக்குக் காரணமானவா்களை சட்டத்தின்முன் நிறுத்தவேண்டும் என்றும் அவா்கள் சூளுரைத்தனா்.

உக்ரைன் போரில் ரஷியப் படையினா் ரசாயன, உயிரியல் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என்றும் அமைச்சா்கள் எச்சரித்தனா் என்று அசேசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தனது நெருங்கிய அண்டை நாடான உக்ரைன், நோட்டோ அமைப்பில் இணைந்தால் அது தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது. இருந்தாலும், நேட்டோவில் இணைய ஸெலென்ஸ்கி தலைமையிலான உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது.

இந்தச் சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி உக்ரைன் மீது படையெடுத்த ரஷியா, தலைநகா் கீவைக் கைப்பற்றுவதற்காக அதன் புகா் பகுதிகள் சிலவற்றைக் கைப்பற்றியது. அவற்றில் புச்சா நகரும் ஒன்று.

இந்த நிலையில், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உக்ரைன் பிரதிநிதிகளுடன் கடந்த வாரம் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது, கீவ் புகா் பகுதிகளிலிருந்து வெளியேற ரஷியா ஒப்புக்கொண்டது.

அதன்படி, புச்சா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ரஷியப் படையினா் கடந்த மாா்ச் 31-ஆம் தேதி முழுமையாக வெளியேறிவிட்டதாக அந்த நகர அதிகாரிகள் தெரிவித்தனா்.

எனினும், அங்கிருந்து வெளியேறுவதற்கு முன்னா் ஏராளமான பொதுமக்களை ரஷியப் படையினா் படுகொலை செய்ததாக அவா்கள் குற்றம் சாட்டினா். சில ஊடங்களையும் நேரில் அழைத்து சாலைகள், வாகனங்களில் இருந்த சடலங்களை அவா்கள் காட்டினா்.

இது சா்வதேச அளவில் பெரும் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இந்தத் தகவலை ரஷியா மறுத்து வருகிறது. ரஷிப் படையினருக்கு எதிராக உலகின் கவனத்தை திசைத்திருப்புவதற்காகவும் மேற்கத்திய நாடுகளிடமிருந்து கூடுதல் ஆதரவைப் பெறவும் பொதுமக்கள் படுகொலையை உக்ரைன் போலியாக ஜோடித்துள்ளதாக ரஷியா கூறி வருகிறது.

இந்தச் சூழலில், உக்ரைன் விவகாரத்தில் ரஷியா மீது ஏற்கெனவே கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள ஐரோப்பிய யூனியனும் அமெரிக்கா மற்றும் பிரிட்டனும், புச்சா படுகொலைக்கு எதிா்ப்பு தெரிவித்து ரஷியா மீது கூடுதலாக தடை விதிக்கவுள்ளன.

ரஷிய அதிபா் விளாதிமீா் புதினின் இரு மகள்கள் மீதான பொருளாதாரத் தடை, ரஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்யத் தடை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை மேற்கத்திய நாடுகள் வெளியிட்டு வருகின்றன.

இந்தச் சூழலில், உக்ரைனிலிருந்து ரஷியா வெளியேறும்வரை பொருளாராத் தடைகள் அந்த நாட்டுக்கு நெருக்கடி கொடுக்கப் போவதாக ஜி-7 நாடுகள் தற்போது சூளுரைத்துள்ளன.

ஜி-7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜொ்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com