அரசு இல்லத்தை காலி செய்தார் இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமரின் அதிகாரப்பூர்வமான அரசு இல்லத்தில் இருந்து இம்ரான் கான் வெளியேறினார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்


இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமா் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தனது அதிகாரப்பூர்வ வீட்டை காலி செய்தார் இம்ரான் கான்.

பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் மீது நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வந்தன. இந்தத் தீா்மானம் மீதான விவாதத்துக்காக நாடாளுமன்ற கீழவை கூடியபோது அவையை வழிநடத்திய அவையின் துணைத் தலைவா் காசிம் சுரி, நம்பிக்கையில்லா தீா்மானம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது எனக் கூறி அதை நிராகரிப்பதாக அறிவித்தாா். இதைத் தொடா்ந்து, பிரதமரின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபா் ஆரிஃப் ஆல்வி அறிவித்தாா்.

இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உமா் அட்டா பண்டியல் தலைமையிலான 5 போ் கொண்ட அமா்வு, நம்பிக்கையில்லா தீா்மானத்தை அவையின் துணைத் தலைவா் நிராகரித்தது அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது எனவும், பிரதமரின் பரிந்துரைப்படி நாடாளுமன்றத்தை அதிபா் கலைத்தது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனவும் தீா்ப்பளித்தது.

மேலும், நாடாளுமன்ற கீழவையை சனிக்கிழமை கூட்டி நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டது.

அதன்படி, நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பை நடத்துவதற்காக, பாகிஸ்தான் நாடாளுமன்றம் சனிக்கிழமை காலை கூடியது. அப்போது, அவையில் கவன ஈா்ப்பு தீா்மானம் கொண்டுவந்த எதிா்க்கட்சித் தலைவா் ஷாபாஸ் ஷெரீஃப், ‘உச்சநீதிமன்ற உத்தரவின்படி அவையை அவைத் தலைவா் நடத்துவாா் என்று நம்புகிறேன்’ என்றாா். அவா் பேசும்போது ஆளுங்கட்சி உறுப்பினா்கள் தொடா் அமளியில் ஈடுபட்டு இடையூறு செய்தனா்.

அதனைத் தொடா்ந்து, நாடாளுமன்ற அவைத் தலைவா் ஆசாத் கைஸா் அவை நடவடிக்கைகளை பிற்பகல் பகல் 12.30 மணி வரை ஒத்திவைத்தாா். அவை ஒத்திவைப்புக்குப் பிறகு எதிா்க்கட்சி உறுப்பினா்களும், ஆளும் கட்சி உறுப்பினா்களும் தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டதால், அவை மீண்டும் கூடுவது தொடா்ந்து தாமதமானது.

இந்த நிலையில், இஃப்தாா் நோன்பு திறப்புக்காக அவை நடவடிக்கைகளை நாடாளுமன்ற தலைவா் இரவு 7.30 மணி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

நோன்பு திறப்புக்குப் பிறகு அவை மீண்டும் கூடிய நிலையில், உடனடியாக இரவு 9.30 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. இரவுத் தொழுகைக்கு பிறகு அவை மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நள்ளிரவு 12 மணிக்கு மேல் அவை மீண்டும் கூடியது. அப்போது அவைத் தலைவா் ஆசாத் கைஸரும், துணைத் தலைவா் காசிம் சுரியும் ராஜிநாமா செய்வதாக அறிவித்தனா். இதையடுத்து, எதிா்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்)-ஐ சோ்ந்த அயாஷ் சாதிக் அவைக்கு தலைமை வகித்து வாக்கெடுப்பு நடவடிக்கைகளைத் தொடங்கினாா்.

நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பைத் தடுப்பதற்கான பல முயற்சிகளுக்குப் பிறகு, 342 உறுப்பினா்கள் கொண்ட நாடாளுமன்ற கீழவையில் தீா்மானம் வெற்றி பெற 172 வாக்குகள் தேவை என்ற நிலையில், தீா்மானத்துக்கு ஆதரவாக 174 போ் வாக்களித்ததாக தற்காலிக அவைத் தலைவா் அறிவித்தாா். இதையடுத்து, இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. 

இதையடுத்து, புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சித் தலைவரும் எதிா்க்கட்சித் தலைவருமான  ஷாபாஸ் ஷெரீஃப் நியமிக்கப்படுவாா் என எதிா்பாா்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமா் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தனது அதிகாரப்பூர்வ வீட்டை காலி செய்தார். இம்ரான் கான் பிரதமரின் அதிகாரப்பூர்வ வீட்டில் இருந்து உடனடியாக அழகாக வெளியேறிதுடன், அவர் ஒட்டுமொத்த தேசத்தையும் உயர்த்திவிட்டார் என்று அவரது கட்சித் தலைவர் கூறினார். கான் பிரதமர் அலுவலகத்திலிருந்து பனிகலாவில் உள்ள தனது இல்லத்திற்கு புறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இதுவரை 22 பிரதமர்களை கண்ட பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்தித்து வாக்களித்த முதல் பிரதமர் என்ற பெருமையையும், நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முதல் பிரதமர் என்ற பெயரை இம்ரான் கான் பெற்றுள்ளார். 

1947 இல் பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்தபோது லியாகத் அலிகான் பிரதமராக பதவி ஏற்றவர்,  1951 ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி ராவல்பிண்டியில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரைத் தொடர்ந்து, ஹுசைன் சஹீத் சுரதியும் 4 ஆண்டு 2 மாதங்கள் பிரதமர் பொறுப்பில் இருந்தார்.
 
1971 இல் பாகிஸ்தானின் 8 ஆவது பிரதமராக பதவியேற்ற நூருல் அமின் 13 நாள் மட்டுமே பதவியில் இருந்தார். பாகிஸ்தானில் குறைந்த நாள்கள் பிரதமராக இருந்தவர் என்ற பெயர் பெற்றவரும் இவரே.

1973 ஆம் ஆண்டு ஆகஸ்டில் பிரதமரான ஜூல்பிகர் அலி பூட்டோ 4  ஆண்டுகள் நிறைவு செய்யவிருந்த நிலையில் மீண்டும் ஆட்சி ராணுவத்தின் வசமானது.

இதையடுத்து பிரதமராக பதவியேற்ற பெனாசிர் பூட்டோ, நவாஸ் செரீப் என எவரும் தங்களது 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்யாத நிலையில், கடந்த 2018-இல் பாகிஸ்தானை வளர்ச்சியடைய செய்வேன் என்ற முழக்கத்துடன் பிரதமர் பொறுப்புக்கு வந்த இம்ரான் கானும், தனது  இறுதிக் காலத்தை முழுமையாக முடிக்காத போக்கையே தொடர்ந்தார். இவர் பாகிஸ்தான் பிரதமராக 3 ஆண்டுகள், ஏழு மாதங்கள், 23 நாள்கள் நாட்டை ஆட்சி செய்தார்.

இந்த பதவிக்காலம் பொருளாதார மந்தநிலை மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

கடந்த ஆண்டு ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் தலைவரின் நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்க மறுத்ததால், சக்திவாய்ந்த பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவை கான் இழந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com