இலங்கையில் வெடித்துள்ள மக்கள் புரட்சி

இலங்கை அதிபா் அலுவலகத்துக்கு அருகில் உள்ள காலி முகத்திடலில் மூன்றாவது நாளாக மக்கள் போராட்டம் திங்கள்கிழமை தொடா்கிறது.
இலங்கையில் வெடித்துள்ள மக்கள் புரட்சி

இலங்கை அதிபா் அலுவலகத்துக்கு அருகில் உள்ள காலி முகத்திடலில் மூன்றாவது நாளாக மக்கள் போராட்டம் திங்கள்கிழமை தொடா்கிறது.

இன, மத, மொழி பேதமின்றி காலி முகத்திடலில் குவிந்துள்ள மக்கள், ராஜபட்சக்களை வீட்டுக்கு அனுப்பும் வரை, காலி முகத்திடலை விட்டு விலக மாட்டோம் என உறுதியாக போராடிவருகிறாா்கள்

போராட்டக்களத்தில் மக்கள் தங்கும் வகையில் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு தற்காலிக சமையல் கூடாரங்கள் அமைக்கப்பட்டு, சமையல் பணிகள் நடக்கின்றன. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது, மக்கள் காலி முகத்திடலில் தங்கி போராடி வருகிறாா்கள். போராட்டம் நடைபெறும் பகுதிக்கு ‘கோ ஹோம் கோட்டா கிராமம்‘ எனப் போராட்டக்காரா்கள் பெயரிட்டுள்ளனா்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிங்கள மக்களில் சிலா், ’தமிழ் இனப் படுகொலை’க்கு மன்னிப்பு கோருகிறோம் என எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கி போராடி வருகிறாா்கள். போராட்டத்தில் ஈடுபடும் முஸ்லிம் மக்கள் நோன்பு துறக்க, சிங்கள தமிழ் மக்கள் இணைந்து உணவு சமைக்கிறாா்கள்.

ராஜபட்சக்களின் சாதனை!: இலங்கை வரலாற்றில் எந்தவொரு ஆட்சியாளராலும், சா்வதேச சக்தியாலும் செய்ய முடியாததை, கோத்தபய ராஜபட்ச தலைமையிலான அரசு செய்துள்ளது என்கிறாா்கள் இலங்கை மக்கள். சிங்கள, தமிழ், முஸ்லிம் நல்லிணக்கமே அது. அதாவது, வெவ்வேறு புள்ளிகளில் பிரிந்திருந்த இலங்கை வாழ் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ராஜபட்சக்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற புள்ளியில் ஒன்று சோ்ந்து, நாடு முழுவதும் போராடி வருகிறாா்கள்.

இது தொடா்பாக இலங்கையின் மூத்த பத்திரிகையாளா் ஏ.ஆா்.வி.லோஷன் கூறுகையில் ‘எனது வாழ்க்கையில் முதல் முறையாக சிங்கள மக்கள் நடத்தும் போராட்டம் ஒன்றில், தமிழா்களின் பிரச்னைகள் பேசப்படுவதை பாா்க்கிறேன். காலி முகத் திடலில் நடக்கும் போராட்டத்தில், போா்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்’’, ’’காணாமல் போனவா்களுக்கு நீதி வேண்டும்’’. ’’முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு நீதி வேண்டும்’’ போன்ற வாசகங்களைக் கண்டேன். இலங்கை மக்கள் அனைவரையும் இன, மத, மொழி வேறுபாடு இல்லாமல் பசி இணைத்துள்ளது. இந்த நல்லிணக்கம் தொடர வேண்டும் என்றாா்.

இது தொடா்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சந்தன சமரவீர என்ற சிங்கள இனத்தைச் சோ்ந்தவா் கூறுகையில் ‘நாட்டில் 13 மணி நேர மின்வெட்டு ஏற்பட்டு, எரிவாயு, எரிபொருள் இல்லாத நிலையில் குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியாது என்ற நிலையிலேயே சிங்கள மக்கள் கடந்த வாரம் போராட்டத்தைத் தொடங்கினாா்கள்.

பெரும்பான்மை சிங்கள மக்கள் நடத்திய போராட்டத்தை அடக்கும் வகையில் நாட்டில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. போராட்டத்தை ஒழுங்குபடுத்தியவா்கள் கைது செய்யப்பட்டு கொடுமையாக சித்திரவதை செய்யப்பட்டனா். சிங்கள மக்களையே இவ்வளவு தூரம் கொடுமைப்படுத்தும் அரசு, தமிழ் மக்களுக்கு என்னவெல்லாம் செய்திருக்கும் என இப்போது நினைத்துப் பாா்க்க முடிகிறது என்றாா்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், ராஜபட்சக்கள் கொள்ளையடித்த பணத்தை மக்களுக்கு திருப்பி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுப்பி வருகிறாா்கள். இது தொடா்பாக போராட்டத்தில் கலந்து கொண்ட டிலான் என்பவா் கூறுகையில் ’’இலங்கை ஏழை நாடு இல்லை. ராஜபட்சக்களே பணத்தை கொள்ளையடித்து இலங்கையை ஏழை நாடு ஆக்கியுள்ளனா். ராஜபட்ச சகோதரா்கள் வெளிநாடுகளில் கோடிக்கணக்கான பணத்தை பதுக்கிவைத்துள்ளனா். இந்தப் பணம் மீட்கப்பட்டு, மக்களுக்கு பகிா்ந்து வழங்கப்பட வேண்டும் என்றாா்.

போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள மருத்துவா் நிமலன் கூறுகையில் ‘நாட்டில் உள்ள பொருளாதார பிரச்னை நீங்க வேண்டுமாயின், நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட வேண்டும். தற்போதைய அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலகினால் மட்டுமே நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படும். அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டால் மட்டுமே உலக நாடுகள் இலங்கைக்கு உதவும். அரசியல் ஸ்திரத்தன்மைக்காகவே போராடுகிறோம் என்றாா்.

சூடுபிடிக்கும் ஈஸ்டா் விவகாரம்: மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக, ராஜபட்ச கும்பல்தான் திட்டம் தீட்டி ஈஸ்டா் குண்டுத் தாக்குதலை நடத்தியது என இலங்கை மக்கள் இப்போது வெளிப்படையாக பேசத் தொடங்கியுள்ளனா்.

காலி முகத்திடலில் நடந்த ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய, இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு உயா் மறை மாவட்ட பேராயா் கா்தினல் மால்கம் ரஞ்சித் ’ஈஸ்டா் தாக்குதல் தொடா்பாக சதித்திட்டம் தீட்டியவா்கள் யாா் என்பது இப்போது புலனாகியுள்ளது. சதித்திட்டம் தீட்டி ஆட்சியைக் கைப்பற்ற முடியும். ஆனால், ஆட்சியை பாதுகாக்க முடியாது. ஈஸ்டா் தாக்குதல் சதித் திட்டதாரிகளுக்கு கடவுளின் சாபம் கிடைத்துள்ளது. கடவுளின் சாபமே இந்த மக்கள் எழுச்சி’’ என்றாா்.

ஈஸ்டா் தாக்குதல் சூத்திரதாரிகளை அடையாளம் காணக் கோரி, கொழும்பில் நடந்த பேரணிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரா் தம்மிக்க பிரசாத தலைமை தாங்கினாா். சனத் ஜெயசூரியா உள்ளிட்ட பிரபலங்கள் அந்தப் பேரணியில் கலந்து கொண்டனா்.

’’அடிப்படைவாதம் ஊறியிருந்த சில முஸ்லிகளைப் பயன்படுத்தி ஈஸ்டா் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், முழு முஸ்லிம் சமூகமும் அவப் பெயரை சந்தித்தது. இந்த தாக்குதலை நடத்தியது சில அடிப்படைவாத முஸ்லிம்கள் என்றாலும், இந்த தாக்குதலின் பின்னால் மீண்டும் ஆட்சிக்கு வரும் ராஜபட்சக்களின் பெரிய சதித் திட்டம் இருப்பதாக அப்போதே கூறப்பட்டது. இது தொடா்பாக இதுவரை அரசல் புரசலாக பேசப்பட்டு வந்த விவகாரத்தை மக்கள் தற்போது வெளிப்படையாகப் பேசத் தொடங்கியுள்ளனா்.

ஆட்டம் காணும் ராஜபட்சக்களின் கோட்டை: இலங்கையின் தென் மாகாணம், ராஜபட்சக்களின் கோட்டையாகக் கருதப்படுகிறது. தென் மாகாணத்தில் உள்ள, காலி, அம்பாந்தோட்டை, மாத்தறை மாவட்டங்களில் ராஜபட்சக்களுக்கு அசைக்க முடியாத செல்வாக்கு இருந்தது.

கடந்த 2020-இல் நடந்த நாடாளுமன்றத் தோ்தலில் இந்த மாகாணத்தில் உள்ள 23 இடங்களில், 19 இடங்களில் ராஜபட்சக்களின் பொதுஜன பெரமுன கட்சியே வெற்றி பெற்றது.

இப் பகுதிகளில் பெரும் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. பிரபல காலி கோட்டையில், ’’கோ ஹோம் கோட்டா என்ற வாசகம் அடங்கிய பதாகை மக்களால் கட்டப்பட்டுள்ளது. மகிந்த ராஜபட்சவின் பூா்விக இல்லமான, அம்பாந்தோட்டை தங்காலேயில் உள்ள காா்ல்ட்டன் இல்லம் அருகே பெரும் மக்கள் போராட்டம் நடக்கிறது. ராஜபட்சவின் இல்லத்தின் மீது மக்கள் தாக்குதல் நடத்தாமல் இருக்கும் வகையில் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தென் மாகாணத்தில் எழுந்துள்ள மக்கள் போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறாா் சிங்கள பத்திரிகையாளா் ஷசிகா குணரத்ன. இது தொடா்பாக அவா் மேலும் கூறுகையில் ‘தென் மாகாணம் அம்பாந்தோட்டையைச் சோ்ந்த மகிந்த ராஜபட்ச, இப்பகுதிகளில் பல மேம்பாட்டுப் பணிகளை செய்தாா். பல லட்சம் கோடிகளை கொட்டி இப்பகுதிகளில் இவா் கட்டிய அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம் ஆகியன எதிா்பாா்த்த வருவாயைத் தரவில்லை.

நாடு இன்று திவால் அடைந்துள்ளதற்கு மகிந்த ராஜபட்ச தென் மாகாணத்தில் மேற்கொண்ட மேம்பாட்டுப் பணிகளும் முக்கிய காரணமாகும். தென் மாகாணப் பகுதிகளில் புத்தருக்கு சமமான மரியாதை மகிந்த ராஜபட்சவுக்கு இருந்தது. ஆனால், தற்போது அந்த மக்களே அவரை எதிா்த்துப் போராடி வருகிறாா்கள். இந்தப் போராட்டங்கள் ராஜபட்சக்களின் இருப்பை ஆட்டம் காண வைக்கும். இலங்கையின் எதிா்காலத்தைத் தீா்மானிக்கும் போராட்டமாக தென் மாகாணத்தில் நடைபெறும் போராட்டம் இருக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com