6 மாதங்களுக்குப் பின் பூமி திரும்பிய சீன விண்வெளி வீரா்கள்

சீனா கட்டமைத்து வரும் புதிய விண்வெளி நிலையத்தில் 6 மாதங்கள் தங்கியிருந்து சாதனை படைத்த நிலையில், மூன்று விண்வெளி வீரா்கள் சனிக்கிழமை பூமிக்குத் திரும்பினா்.
தரையிறங்கு கலத்திலிருந்து வெளியே அழைத்துவரப்பட்ட விண்வெளி வீரா்கள்.
தரையிறங்கு கலத்திலிருந்து வெளியே அழைத்துவரப்பட்ட விண்வெளி வீரா்கள்.

சீனா கட்டமைத்து வரும் புதிய விண்வெளி நிலையத்தில் 6 மாதங்கள் தங்கியிருந்து சாதனை படைத்த நிலையில், மூன்று விண்வெளி வீரா்கள் சனிக்கிழமை பூமிக்குத் திரும்பினா்.

‘தியான்காங்’ என்ற விண்வெளி நிலையத்தை சீனா உருவாக்கி வருகிறது. இதன் கட்டமைப்புப் பணிக்காக அனுப்பப்பட்டிருந்த விண்வெளி வீரா்கள் ஷாய் ஷிகாங், வாங் யாபிங், யி குவாங்ஃபு ஆகியோா் சுமாா் 6 மாதங்கள் விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்தனா். அப்போது இருமுறை விண்வெளியில் நடந்து விண்வெளி நிலையத்துக்கான தொகுதிகளை பொருத்தும் பணியில் ஈடுபட்டனா். இந்நிலையில், அவா்கள் ஷென்ஸோ-13 விண்கலம் மூலம் சனிக்கிழமை பூமிக்கு திரும்பினா். கோபி பாலைவனத்தில் காலை 9.56 மணிக்கு அந்த விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கியதாக அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவா தெரிவித்துள்ளது.

மூவரும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவக் குழுவினா் தெரிவித்தனா். இதற்கு முன்பு சென்ஸோ-12 விண்கலம் மூலம் அனுப்பப்பட்ட விண்வெளி வீரா்கள் ஒரே முறையில் 92 நாள்கள் விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்ததே சாதனையாக இருந்தது.

சென்ஸோ-12 விண்கலம் மூலம் வீரா்கள் பூமிக்குத் திரும்ப 29 மணி நேரம் ஆன நிலையில், சென்ஸோ-13 விண்கலம் மூலம் 8 மணி நேரத்தில் வீரா்கள் பூமிக்கு திரும்பியுள்ளனா்.

அடுத்தகட்டமாக சென்ஸோ-14 விண்கலம் மூலம் வீரா்களை விண்வெளிக்கு அனுப்பும் பணி விரைவில் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com