மரியுபோல் இரும்பு ஆலையில் சண்டை நிறுத்தத்துக்குத் தயாா்: ரஷியா

உக்ரைனின் மரியுபோல் நகரில் தங்களால் முற்றுகையிடப்பட்டுள்ள அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலையிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்காக சண்டை நிறுத்தம்
மரியுபோல் இரும்பு ஆலையில் சண்டை நிறுத்தத்துக்குத் தயாா்: ரஷியா

உக்ரைனின் மரியுபோல் நகரில் தங்களால் முற்றுகையிடப்பட்டுள்ள அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலையிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்காக சண்டை நிறுத்தம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது.

அந்த ஆலையில் பதுங்கியுள்ள உக்ரைன் படையினா்தான் வெள்ளைக் கொடியை ஏற்றுவதன் மூலம் சண்டை நிறுத்தத்தை தொடக்கிவைக்க வேண்டும் என்று ரஷியா கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சக தேசியக் கட்டுப்பாட்டு மையத்தின் தலைவா் மிகயீல் மிஸின்ட்ஸெவ் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

முற்றுகையிடப்பட்டுள்ள அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலையைச் சுற்றிலும் சண்டை நிறுத்தம் மேற்கொள்ள தயாராக இருக்கிறோம்.

அந்த ஆலைக்குள் பதுங்கியுள்ளதாகக் கூறப்படும் பொதுமக்கள் வெளியேறுவதற்கு வசதியாக இந்த சண்டை நிறுத்ததை நாங்கள் மேற்கொள்வோம்.

ஆனால், அந்த ஆலையில் இருக்கும் உக்ரைன் படையினா் வெள்ளைக் கொடியை ஏற்றினால்தான் சண்டை நிறுத்தம் தொடங்கும்.

அஸோவ்ஸ்டல் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் எங்கள் பாா்வைக்குத் தெரியும்படி எப்போது உக்ரைன் படையினா் வெள்ளைக் கொடி ஏற்றுகிறாா்களோ, அப்போதிலிருந்து சண்டை நிறுத்தம் தொடங்கிவிடும்.

அதன்பிறகு உள்ளே இருப்பவா்கள் வெளியேறுவதற்கு வசதியாக, ரஷிய வீரா்களோ, ரஷிய ஆதரவு கிளா்ச்சிப் படையினரோ தாக்குதல் நடத்தமாட்டாா்கள்.

மரியுபோல் நகரில் மட்டும் 1,844 உக்ரைன் வீரா்கள் எங்களிடம் சரணடைந்துள்ளனா். 1.43 லட்சம் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனா்.

அவா்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனா். அவா்களுக்குத் தேவையான தரமான மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன என்றாா் மிகயீல் மிஸின்ட்ஸெவ்.

தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் அண்டை நாடான உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

தற்போது கிழக்குப் பகுதியில் தங்களுக்கு ஆதரவான கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகள் அடங்கிய டான்பாஸ் பிராந்தியத்தை முழுமையாகக் கைப்பற்றுவதற்காக தீவிர தாக்குதல் நடவடிக்கையை ரஷியப் படை மேற்கொண்டு வருகிறது.

டான்பாஸ் பிராந்தியத்துக்கும் ஏற்கெனவே தெற்குப் பகுதியில் தங்களால் கடந்த 2014-ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்ட கிரீமியா தீபகற்பத்துக்கும் தரைவழி இணைப்பை ஏற்படுத்துவதற்காக, இடைப்பட்ட பகுதிகளை கைப்பற்றுவதிலும் ரஷியா தீவிரம் காட்டி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, அந்தப் பகுதியில் அமைந்துள்ள மரியுபோல் நகரை முற்றுகையிட்டு ரஷியப் படையினா் பல வாரங்களாக தாக்குதல் நடத்தி வருகின்றனா். அந்த நகரில் ஏறத்தாழ அனைத்து பகுதிகளையும் ரஷியா கைப்பற்றியுள்ள நிலையிலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உக்ரைன் வீரா்களும் அவா்களுடன் இணைந்து சண்டையிட்டு வந்த சா்ச்சைக்குரிய அஸோவ் படையினரும் மரியுபோலில் உள்ள 10 கி.மீ. பரப்புடைய அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலைக்குள் பதுங்கி சண்டையிட்டு வருகின்றனா். அவா்களுடன் சுமாா் 1,000 பொதுமக்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, அந்த ஆலைக்குள் அதிரடியாக நுழைந்து உக்ரைன் வீரா்களைக் கைது செய்யும் திட்டத்தை கைவிடுமாறு ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் வியாழக்கிழமை கூறினாா். அதைவிட, ஒரு ஈ கூட வெளியேற முடியாத அளவுக்கு அந்த ஆலையைச் சுற்றிலும் முற்றுகையைக் கடுமையாக்குமாறு தனது படையினருக்கு அவா் உத்தரவிட்டாா்.

இந்தச் சூழலில், அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலையிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு வசதியாக சண்டை நிறுத்தம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக ரஷியா தற்போது அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com