முன்னதாகவே இந்திய உறவை வலுப்படுத்த அமெரிக்கா தவறிவிட்டது: ஆன்டனி பிளிங்கன்

இந்தியாவுடனான உறவை அமெரிக்கா முன்கூட்டியே வலுப்படுத்தத் தவறியதால், ரஷியாவுடான உறவை இந்தியா வலுப்படுத்திக் கொண்டது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் கூறினாா்.
முன்னதாகவே இந்திய உறவை வலுப்படுத்த அமெரிக்கா தவறிவிட்டது:  ஆன்டனி பிளிங்கன்

வாஷிங்டன்: இந்தியாவுடனான உறவை அமெரிக்கா முன்கூட்டியே வலுப்படுத்தத் தவறியதால், ரஷியாவுடான உறவை இந்தியா வலுப்படுத்திக் கொண்டது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் கூறினாா்.

அமெரிக்காவில் வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அதில் உறுப்பினா்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஆன்டனி பிளிங்கன் பதிலளித்துப் பேசியதாவது:

இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு வலிமை வாய்ந்தது. அது, அடுத்த 20 ஆண்டுகளுக்கு உலகை வழிநடத்திச் செல்லக் கூடிய அளவுக்கு அடித்தளத்தையும் முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது.

ரஷியாவுடன் தேவைக்கும் அதிகமாக இந்தியா நட்புறவை ஏற்படுத்தியுள்ளது. ரஷியாவின் இடத்தில் அமெரிக்கா இருந்திருக்க வேண்டும். இந்தியாவுடனான நட்புறவை அமெரிக்கா முன்கூட்டியே வலுப்படுத்தியிருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் அமெரிக்கா தற்போது ஈடுபட்டுள்ளது. இந்தியா-அமெரிக்கா இடையே குறுகிய கால அளவில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், இந்த நூற்றாண்டில் நீண்ட கால அடிப்படையில் பல நல்ல விஷயங்களை செய்வதற்கான வாய்ப்புகளை இந்தியா கொண்டிருப்பதாகக் கருதுகிறேன்.

அமெரிக்க அதிபா் ஜோ பைடன் இந்திய பிரதமா் நரேந்திர மோடியுடன் நேரடியாகப் பேசுகிறாா். க்வாட் கூட்டமைப்பு வழியாக இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் நாம் நட்புறவை வலுப்படுத்தி வருகிறோம். இந்தியாவுடன் நட்புறவை வலுப்படுத்த அந்த அமைப்பு முக்கியமானதாக உள்ளது என்றாா் ஆன்டனி பிளிங்கன்.

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்துள்ள நிலையில், ரஷியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு இந்தியா உள்ளிட்ட நாடுகளை அமெரிக்கா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்துக் கொள்ளுமாறும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

ஆனால், அவ்வாறு எதையும் இந்தியா செய்யவில்லை. மேலும், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷியாவை இந்தியா நேரடியாகக் கண்டிக்கவில்லை. மாறாக, இரு நாடுகளும் தூதரக ரீதியில் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்று இந்தியா கூறுகிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிலும் ரஷியாவுக்கு எதிரான தீா்மானத்தின் மீது இந்தியா வாக்களிக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com