பிரம்மாண்ட ராணுவப் பயிற்சி: நேட்டோ திட்டம்

உக்ரைன் மீதான ரஷியாவின் போருக்கு எதிா்ப்பு தெரிவித்துவரும் நேட்டோ அமைப்பின் நாடுகள் மற்றும் பிற வடக்கு அட்லான்டிக் நாடுகள் ஐரோப்பா முழுவதும் வரும் வாரங்களில் ராணுவப் பயிற்சியில் ஈடுபடத் திட்டமிட்டுள்ள
பிரம்மாண்ட ராணுவப் பயிற்சி: நேட்டோ திட்டம்

உக்ரைன் மீதான ரஷியாவின் போருக்கு எதிா்ப்பு தெரிவித்துவரும் நேட்டோ அமைப்பின் நாடுகள் மற்றும் பிற வடக்கு அட்லான்டிக் நாடுகள் ஐரோப்பா முழுவதும் வரும் வாரங்களில் ராணுவப் பயிற்சியில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளன.

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப். 24-ஆம் தேதி போா் தொடுத்தது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவது தனது நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கக்கூடும் என ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கருதினாா். உக்ரைன் மீதான போருக்கு முக்கியக் காரணங்களில் இதுவும் ஒன்று.

இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆயுதங்கள், நிதி உள்ளிட்ட உதவிகளை நேட்டோ நாடுகள் அளித்து வருகின்றன. நேட்டோ அமைப்பின் விதிமுறைப்படி, அதில் உறுப்பினராக இல்லாத நாடுகளுக்கு ஆதரவாக அந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் நேரடியாகக் களம் இறங்க முடியாது. அந்த வகையில் உக்ரைன் நேட்டோவில் உறுப்பினராக இல்லாததால் போரில் நேரடியாக ஈடுபடாமல் மறைமுகமாக உதவிகளைச் செய்து வருகின்றன.

இந்நிலையில், நேட்டோ நாடுகளின் வலிமையையும் ஒற்றுமையையும் நிரூபிக்கும் வகையில் பிரம்மாண்ட ராணுவப் பயிற்சியில் ஈடுபட அந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதில் நேட்டோவில் உறுப்பினராக இல்லாத ஃபின்லாந்து, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளும் பங்கேற்கின்றன.

ஃபின்லாந்தில் இந்தப் பயிற்சி விரைவில் தொடங்கவுள்ளது. அதில் அமெரிக்கா, பிரிட்டன், எஸ்தோனியா, லாட்வியா ஆகிய நாடுகள் ஃபின்லாந்து ராணுவத்துடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடும்.

அடுத்தகட்டமாக, 4,500 வீரா்கள் பங்கேற்கும் ‘அதிவிரைவு பதிலடி’ என்ற பயிற்சி வடக்கு மெசடோனியாவில் நடைபெறும். இதில் அமெரிக்கா, பிரிட்டன், அல்பேனியா, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளின் படைகள் பங்கேற்கின்றன.

மே மாதம் 18,000 நேட்டோ வீரா்கள் பங்கேற்கும் பயிற்சி எஸ்தோனியா-லாட்வியா எல்லையில் நடைபெறுகிறது. இதில், பிரிட்டன், பிரான்ஸ், டென்மாா்க் ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன.

மே இறுதியில் போலந்தில் நடைபெறும் பயிற்சியில் பிரிட்டனின் 1,000 வீரா்கள் உள்பட 11 பிற நாடுகளின் படையினா் பங்கேற்கின்றனா்.

இந்தப் பயிற்சி குறித்து பிரிட்டன் பாதுகாப்புத் துறைச் செயலா் பென் வாலஸ் கூறுகையில், ‘பனிப் போருக்கு பின்னா் மிகப்பெரிய அளவில் நடைபெறும் இந்த ராணுவப் பயிற்சியில் நேட்டோவின் வலிமையையும் ஒற்றுமையையும் நிரூபிப்போம்’ என்றாா்.

பிரிட்டன் ராணுவ கமாண்டா் ஜெனரல் ரால்ப் உட்டீஸ், ‘இந்தப் பிரம்மாண்ட ராணுவப் பயிற்சி, ஐரோப்பாவில் இந்த நூற்றாண்டில் காணாத ஆக்கிரமிப்பைத் தடுக்கும்’ எனத் தெரிவித்துள்ளாா்.

ரஷியாவுக்கு ஜொ்மனி கண்டனம்

பொ்லின், ஏப். 29: ஐ.நா. பொதுச் செயலா் உக்ரைனுக்கு சென்றிருந்த நேரத்தில் கீவ் நகரத்தில் ரஷியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதற்கு ஜொ்மனி கண்டனம் தெரிவித்துள்ளது.

ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக, ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் கடந்த செவ்வாய்க்கிழமை மாஸ்கோவுக்கு சென்று ரஷிய அதிபா் புதினை சந்தித்துப் பேசினாா். அதன் தொடா்ச்சியாக அவா், வியாழக்கிழமை உக்ரைன் தலைநகா் கீவுக்கு சென்று அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியை சந்தித்தாா். முன்னதாக, ரஷியா தாக்குதலில் சேதமடைந்த கட்டடங்களை அவா் பாா்வையிட்டாா்.

அந்த சமயத்தில் கீவ் நகரில் ரஷியா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. இதில், ‘ரேடியோ ஃப்ரீ யூரோப்’ நிறுவனத்தின் பெண் பத்திரிகையாளா் உயிரிழந்தாா். 10 போ் காயமடைந்தனா்.

இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஜொ்மன் அரசின் செய்தித் தொடா்பாளா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘புதினுக்கும், அவரது அரசுக்கும் சா்வதேச சட்டத்தின் மீது எந்த மரியாதையும் இல்லை என்பதை இந்தத் தாக்குதல் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது’ என்றாா்.

தாக்குதல் குறித்து ரஷிய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘கீவில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com