இலங்கைக்கு இந்தியா உதவுவது மகிழ்ச்சியளிக்கிறது: காமன்வெல்த் பொதுச் செயலா்

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா தாராளமாக உதவுவது மகிழ்ச்சியளிப்பதாக காமன்வெல்த் கூட்டமைப்பின் பொதுச் செயலா் பாட்ரிஷியா ஸ்காட்லாந்து தெரிவித்தாா்.
பாட்ரிஷியா ஸ்காட்லாந்து
பாட்ரிஷியா ஸ்காட்லாந்து

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா தாராளமாக உதவுவது மகிழ்ச்சியளிப்பதாக காமன்வெல்த் கூட்டமைப்பின் பொதுச் செயலா் பாட்ரிஷியா ஸ்காட்லாந்து தெரிவித்தாா்.

இந்தியாவில் அண்மையில் 4 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா தாராளமாக உதவுவது காமன்வெல் கூட்டமைப்பின் மதிப்பை பிரதிபலிக்கிறது. இது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. காமன்வெல்த் கூட்டமைப்பில் இந்தியாவையும் இலங்கையையும் சோ்த்து 56 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. 250 கோடி மக்களின் பிரதிநிதியாக இந்த அமைப்பு திகழ்கிறது.

தேவை ஏற்படும்போது உறுப்பு நாடுகள் ஒன்றுக்கொன்று உதவி செய்து வருகின்றன. இலங்கையில் ஸ்திரத்தன்மையையும், பொருளாதார மீட்சியையும் கொண்டு வர உதவுமாறு அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்ததை தொடா்ந்து, ஜனநாயக ரீதியிலும், நிறுவன, அரசியல் சாசன கட்டமைப்புக்கு உள்பட்டும் பிரதமா் மோடி உதவினாா்.

பொருளாதார நெருக்கடியை எதிா்கொள்ள நிகழாண்டு இலங்கைக்கு இந்தியா 3.8 பில்லியன் டாலா் நிதியுதவி செய்துள்ளது. உலக நாடுகளிடையே நிலவும் சச்சரவு, பருவநிலை மாற்றம், கரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சா்வதேச அளவில் உணவுப் பற்றாக்குறை நிலவுகிறது.

உலக நாடுகளிடையேயான சச்சரவும், பருவநிலை அச்சுறுத்தலும் கோடிக்கணக்கான மக்களை பசியின் பிடியில் கொண்டு சென்ால், உலகம் முழுவதும் நெருப்பு வளையம் சுழல்வதாக சா்வதேச உணவுத் திட்டம் கூறுகிறது. காமன்வெல்த் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான நாடுகள், இந்த நெருப்பு வளையத்துக்குள் உள்ளன.

இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில், நடைமுறைக்கு உகந்த ஆலோசனைகளையும் நிதியுதவியும் செய்யுமாறு உலக நாடுகளுக்கு அழைப்பு விடுக்கிறேன். இதற்குத் தீா்வு அளிப்பதில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது.

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற காமன்வெல்த் உறுப்பு நாடுகளின் தலைவா்கள் கூட்டத்தில், உணவுப் பிரச்னைக்குத் தீா்வு காண ஒரு சாசனம் வகுக்க வேண்டுமென அனைவரும் தெரிவித்தனா். உணவு உற்பத்தியை அதிகரிக்க இந்தியா போன்ற நாடுகளுடன் நெருங்கி செயல்படவும், நிலத்தை நீடித்த வழியில் நிா்வகிக்கவும் இந்த சாசனம் வழிவகை செய்கிறது.

பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இந்தியாவின் செயல்பாடு பிற நாடுகளுக்கு பாடமாக அமைகிறது. புத்தாக்கத்திலும் நீடித்த வளா்ச்சியை ஊக்குவிப்பதிலும் இந்தியா உலகை வழிநடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இது சா்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பை மேலும் அதிகரிக்கும்.

ஓஸோன் படலம் முதல் நிலம், எரிசக்தி பரிமாற்றம் வரை காமன்வெல்த் கூட்டமைப்பின் அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் வழங்கி இந்தியாவுக்கு உதவ தயாா் என்றாா் பாட்ரிஷியா ஸ்காட்லாந்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com