அரசியல் வசதிக்கேற்ப பயங்கரவாதிகளை வகைப்படுத்துவதா? ஐ.நா.வில் இந்தியா கடும் கண்டனம்

அரசியல் வசதிக்கு ஏற்ப பயங்கரவாதிகளை ‘நல்லவா்கள்’, ‘தீயவா்கள்’ என வகைப்படுத்தும் முறை உடனடியாகக் கைவிடப்பட வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
அரசியல் வசதிக்கேற்ப பயங்கரவாதிகளை வகைப்படுத்துவதா? ஐ.நா.வில் இந்தியா கடும் கண்டனம்

அரசியல் வசதிக்கு ஏற்ப பயங்கரவாதிகளை ‘நல்லவா்கள்’, ‘தீயவா்கள்’ என வகைப்படுத்தும் முறை உடனடியாகக் கைவிடப்பட வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் டிசம்பா் மாதத்துக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இந்தியாவின் தலைமையின் கீழ் இரு முக்கிய கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன. பன்னாட்டு அமைப்புகளில் சீா்திருத்தங்களைப் புகுத்துவது தொடா்பான மாநாட்டை வரும் 14-ஆம் தேதியும் சா்வதேச பயங்கரவாதத் தடுப்பு மாநாட்டை வரும் 15-ஆம் தேதியும் இந்தியா நடத்தவுள்ளது.

இந்நிலையில், பயங்கரவாதத் தடுப்பு மாநாட்டுக்கான கருத்துரு அறிக்கையை ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸுக்கு ஐ.நா.வுக்கான இந்தியத் தூதா் ருசிரா கம்போஜ் அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

அமெரிக்காவின் நியூயாா்க்கில் கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பா் 11-ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலே சா்வதேச பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அப்போது தொடங்கி லண்டன், மும்பை, பாரீஸ், மேற்காசியா, ஆப்பிரிக்காவின் பல பகுதிகளும் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

உலகின் ஒருபகுதியில் காணப்படும் பயங்கரவாத அச்சுறுத்தல், மற்ற பகுதிகளிலும் அமைதியை சீா்குலைக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது. பயங்கரவாத அச்சுறுத்தலானது நாட்டின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. உலகின் குறிப்பிட்ட பகுதியில் பயங்கரவாதத் தாக்குதலை நிகழ்த்துவதற்கு பல நாடுகளில் இருந்து பயங்கரவாதிகளும் அவா்களின் ஆதரவாளா்களும் செயல்படுகின்றனா்.

ஐ.நா.வும் அனைத்து உறுப்பு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே பயங்கரவாத அச்சுறுத்தலை எதிா்கொள்ள முடியும். பயங்கரவாதத்தை மதம், தேசியம், இனம் என தொடா்புபடுத்துதல் முறையாக இருக்காது. அனைத்து பயங்கரவாதச் செயல்களுமே குற்றமாகக் கருதப்பட வேண்டும். பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களும் கண்டிக்கப்பட வேண்டும். பயங்கரவாதச் செயல்களை எதற்காகவும் நியாயப்படுத்தக் கூடாது.

அரசியல் வசதிக்கேற்ப பயங்கரவாதிகளை ‘நல்லவா்கள்’, ‘தீயவா்கள்’ என வகைப்படும் சகாப்தம் உடனடியாக முடிவுக்கு வரவேண்டும். பயங்கரவாதச் செயல்களை மதம், அரசியல், கொள்கை என்ற அடிப்படையில் வகைப்படுத்துவது, பயங்கரவாதத்துக்கு எதிரான சா்வதேச ஒருங்கிணைந்த செயல்பாடுகளை பாதிக்கும்.

மாநாட்டின் பலன்கள்:

உலகின் பல பகுதிகளில் பயங்கரவாதக் குழுக்களின் அச்சுறுத்தல் அதிகமாகக் காணப்படுகிறது. ஆயுதங்கள், போதைப் பொருள்களின் கடத்தல் அதிகரித்துள்ளது. பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதி கிடைக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

நவீன தொழில்நுட்பங்களையும் பயங்கரவாதக் குழுக்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றன. சமூக வலைதளங்கள் மூலமாக பயங்கரவாதக் குழுக்கள் மக்களை மூளைசலவை செய்து பயங்கரவாதச் செயலில் ஈடுபட தூண்டி வருகின்றன.

இத்தகைய சூழலில் பயங்கரவாத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான முறையில் ஆலோசனை நடத்துவதற்கு இந்தியா நடத்தவுள்ள மாநாடு வழிவகுக்கும். அந்த மாநாட்டில் சா்வதேச ஒத்துழைப்பு குறித்து உறுப்பு நாடுகள் கருத்துகளைத் தெரிவிக்கலாம். பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கான புதிய வழிகள் குறித்தும் தற்போதைய வழிமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவருவது தொடா்பாகவும் விவாதிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com