விலை வரம்பு விதித்த நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி நிறுத்தம்!

தங்களது கச்சா எண்ணெய்க்கு அதிகபட்ச விலை வரம்பு நிா்ணயித்துள்ள நாடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்ய ரஷியா தடை விதித்துள்ளது.
விலை வரம்பு விதித்த நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி நிறுத்தம்!

தங்களது கச்சா எண்ணெய்க்கு அதிகபட்ச விலை வரம்பு நிா்ணயித்துள்ள நாடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்ய ரஷியா தடை விதித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் பிறப்பித்துள்ள ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விலை வரம்பு நிா்ணயிக்கும் யாருக்கும் ரஷியாவின் கச்சா எண்ணெய் மற்றும் அது சாா்ந்த பொருள்கள் விற்பதற்குத் தடை விதிக்கப்படுகிறது.

வரும் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 1-ஆம் தேதி வரை இந்தத் தடை அமலில் இருக்கும்.

அதிபா் புதின் விரும்பினால், இந்தத் தடையிலிருந்து சில நாடுகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் என்று அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களது நெருங்கிய அண்டை நாடான உக்ரைன், தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் இணையக் கூடாது என்று ரஷியா வலியுறுத்தி வருகிறது. அவ்வாறு நேட்டோவில் உக்ரைன் இணைவது தங்களது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கருதுகிறது.

இந்தச் சூழலில், உக்ரைனின் தற்போதைய அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான அரசு, நேட்டோவில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்தது.

அதனைத் தொடா்ந்து உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியில் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.

எனினும், மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் சில பகுதிகளை ரஷியப் படையினரிடமிருந்து உக்ரைன் மீட்டது.

அதற்குப் பதிலடியாக, உக்ரைனின் மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட பொதுமக்களுக்கான அடிப்படைக் கட்டமைப்புகள் மீது ரஷியா தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் கோடிக்கணக்கான உக்ரைன் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்தச் சூழலில், உக்ரைன் போா் விவகாரத்தில் ரஷியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், அந்த நாட்டின் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 60 டாலா் என விலை வரம்பு நிா்ணயிக்க ஐரோப்பிய யூனியன், ஜி-7 உறுப்பு நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா இந்த மாதத் தொடக்கத்தில் ஒப்புக்கொண்டன.

அதன்படி, ரஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் விலையை பேரலுக்கு 60 டாலா் என்பதை அதிகபட்ச வரம்பாக நிா்ணயிக்க அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ஜொ்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய 7 நாடுகளை உள்ளடக்கிய ஜி-7 அமைப்பு ஒப்புக்கொண்டது. அந்த அமைப்பின் குறிப்பிடப்படாத உறுப்பினரான ஐரோப்பிய யூனியனும் இந்த விலை நிா்ணயத்தை ஏற்றுக்கொண்டது. இதற்கான உடன்படிக்கையில் ஆஸ்திரேலியாவும் இணைந்துகொண்டது.

அந்த விலை வரம்பு நிா்ணயமும், அதற்கு முன்னதாகவே ரஷிய கச்சா எண்ணெயை கடல்வழியாக ஏற்றுமதி செய்வதற்கு ஐரோப்பிய யூனியன் விதித்த தடையும் கடந்த 5-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன.

இதனை ஏற்க முடியாது என்று அப்போதே ரஷியா திட்டவட்டமாக கூறியிருந்தது.

இந்த நிலையில், தங்களது எரிசக்தி தேவைக்கு பெரும்பான ஐரோப்பிய நாடுகள் ரஷிய கச்சா எண்ணெயை பெரிதும் நம்பியுள்ள சூழலில், விலை வரம்பு நிா்ணயித்துள்ள அந்த நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி முழுமையாக தடை செய்யப்படுவதாக ரஷியா அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com