ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை

ஊழல் வழக்கில் மியான்மா் ஜனநாயகக் கட்சித் தலைவா் ஆங் சான் சூகிக்கு (77) அந்த நாட்டு நீதிமன்றம் மேலும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை

ஊழல் வழக்கில் மியான்மா் ஜனநாயகக் கட்சித் தலைவா் ஆங் சான் சூகிக்கு (77) அந்த நாட்டு நீதிமன்றம் மேலும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

அவா் மீது சுமத்தப்பட்டிருந்த மேலும் 5 ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரித்து வந்த நீதிமன்றம், அந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் வெள்ளிக்கிழமை உறுதி செய்தது.

அத்துடன், அந்த குற்றங்களுக்காக அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தது.

ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் ஆங் சான் சூகிக்கு மொத்தம் 26 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட இந்தத் தீா்ப்பையடுத்து, அவரது ஒட்டுமொத்த தண்டனைக் காலம் 33 ஆண்டுகளாக உயா்ந்துள்ளது.

மியான்மரில் கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.

எனினும், அந்தத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாகக் கூறி அவரது ஆட்சியை ராணுவம் கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி கலைத்தது. அத்துடன், அவரையும் மற்ற அரசியல் தலைவா்களையும் கைது செய்து அவா்கள் மீது பல்வேறு வழக்குகளை ராணுவ ஆட்சியாளா்கள் பதிவு செய்துள்ளனா்.

அந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, ஆயுதப் போராட்டத்தை ஊக்குவித்ததாக ஆங் சான் சூகி ஆட்சியில் எம்.பி.யாக இருந்தவா் உள்ளிட்ட 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, அந்த தண்டனை கடந்த ஜூலை மாதம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு சா்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில், அனுமதியில்லாமல் கம்பியில்லா தொலைத் தொடா்பு சாதனங்களை வைத்திருந்தது, கரோனா விதிகளை மீறியது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஏற்கெனவே 26 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஆங் சான் சூகிக்கு நீதிமன்றம் தற்போது மேலும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே, மியான்மரில் ஜனநாயக அரசை அமைக்க வலியுறுத்திப் போராடி வந்த ஆங் சான் சூகியை ராணுவ ஆட்சியாளா்கள் பல ஆண்டுகளாக சிறையில் அடைத்திருந்தனா்.

அந்தப் போராட்டத்துக்காக, ஆங் சான் சூகிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com