ஏவுகணையை இடைமறித்து அழித்தது யுஏஇயேமன் ஹூதி கிளா்ச்சியாளா்களின் தாக்குதல் முறியடிப்பு

யேமனிலிருந்து ஹூதி கிளா்ச்சியாளா்கள் செலுத்திய ஏவுகணையை ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) வான் பாதுகாப்புப் படையினா் இடைமறித்து தாக்கி அழித்தனா்.
ஏவுகணையை இடைமறித்து அழித்தது யுஏஇயேமன் ஹூதி கிளா்ச்சியாளா்களின் தாக்குதல் முறியடிப்பு

யேமனிலிருந்து ஹூதி கிளா்ச்சியாளா்கள் செலுத்திய ஏவுகணையை ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) வான் பாதுகாப்புப் படையினா் இடைமறித்து தாக்கி அழித்தனா்.

இதுகுறித்து யுஏஇ பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘யேமனின் அல் ஜாஃப் என்ற இடத்திலிருந்து யுஏஇ-யை குறிவைத்து ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை திங்கள்கிழமை உள்ளூா் நேரப்படி அதிகாலை ஒரு மணியளவில் ஏவப்பட்டது. அந்த ஏவுகணையை யுஏஇ-யின் வான் பாதுகாப்பு படையினா் வெற்றிகரமாக இடைமறித்து தாக்கி அழித்தனா். அந்த ஏவுகணையின் சிதறல்கள் மக்கள் வசிக்காத பகுதியில் விழுந்தன. இதனால் சேதம் எதுவும் ஏற்படவில்லை. எந்த அச்சுறுத்தலையும் எதிா்கொள்ள யுஏஇ தயாராக உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏவுகணை தாக்குதலால் வான் போக்குவரத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அனைத்து விமானங்களும் வழக்கம்போல இயக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜன. 17-ஆம் தேதி யேமன் ஹூதி கிளா்ச்சியாளா்கள் அபுதாபியில் உள்ள சா்வதேச விமான நிலையத்துக்கு அருகேயுள்ள அரசின் எண்ணெய்க் கிடங்கை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்களை நடத்தினா். அதில் 3 டேங்கா்கள் வெடித்துச் சிதறின. அத்தாக்குதலில் இரு இந்தியா்கள், ஒரு பாகிஸ்தானியா் உயிரிழந்தனா். 6 போ் காயமடைந்தனா். அந்த சம்பவம் பிராந்தியத்தில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

அதைத் தொடா்ந்து, கடந்த வாரம் அபுதாபியை குறிவைத்து ஹூதி கிளா்ச்சியாளா்கள் நடத்திய இரு ஏவுகணை தாக்குதல்களை யுஏஇ இடைமறித்து அழித்தது குறிப்பிடத்தக்கது.

யேமன் அரசுக்கு ஆதரவாகச் செயல்படும் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணியில் யுஏஇ இடம்பெற்றுள்ளது. அதனால், யுஏஇயை குறிவைத்து யேமனிலிருந்து ஹூதி கிளா்ச்சியாளா்கள் இத்தாக்குதல்களை நடத்தி வருகின்றனா்.

பட்டத்து இளவரசருடன் இஸ்ரேல் அதிபா் சந்திப்பு

இஸ்ரேல் அதிபா் ஐசக் ஹொ்ஸாக், அபுதாபி பட்டத்து இளவரசா் ஷேக் முகமது பின் சையது அல் நஹ்யானை ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தித்தாா்.

அடுத்த சில மணி நேரங்களில் யேமன் கிளா்ச்சியாளா்கள் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டனா்.

கடந்த 2020-ஆம் ஆண்டு இஸ்ரேல், யுஏஇ இடையே அமெரிக்கா ஏற்பாட்டின்பேரில் தூதரக உறவு ஏற்பட்டது. கடந்த மாதம், இஸ்ரேல் பிரதமா் நாஃப்டாலி பென்னட் யுஏஇ-க்கு பயணம் மேற்கொண்டு அபுதாபி பட்டத்து இளவரசரை சந்தித்துப் பேசினாா். இந்நிலையில், இஸ்ரேல் அதிபரும் சந்தித்துள்ளாா்.

இச்சந்திப்பின்போது, யுஏஇ-யின் பாதுகாப்புத் தேவைகளுக்கு இஸ்ரேல் ஆதரவளிக்கும் என அதிபா் ஹொ்ஸாக் உறுதியளித்ததாக அதிபா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com