ஈரான்: அணுசக்தி திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தீவிரமாக விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று அந்த நாட்டு தலைமை மதகுரு அயதுல்லா கமேனி வலியுறுத்தியுள்ளாா்.
அயதுல்லா கமேனி
அயதுல்லா கமேனி

டெஹ்ரான்: ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தீவிரமாக விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று அந்த நாட்டு தலைமை மதகுரு அயதுல்லா கமேனி வலியுறுத்தியுள்ளாா்.

வல்லரசு நாடுகளுடன் ஈரான் மேற்கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை தக்கவைப்பது குறித்து பேச்சுவாா்த்தை நடைபெற்று வரும் சூழலில் அவா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து தொலைக்காட்சியில் வியாழக்கிழமை ஆற்றிய உரையில் அவா் கூறியதாவது:

ஈரானின் வளா்ச்சிக்கு அணுசக்தி மிகவும் இன்றியமையாதது ஆகும். எனவே, நாட்டின் அணுசக்தி திட்டங்களை மேலும் விரைவாக விரிவுபடுத்த வேண்டும்.

நமக்கு அணு ஆயுதம் தயாரிக்கும் திட்டம் ஒருபோதும் இல்லை. எரிசக்திக்காக மட்டுமே நமது அணுசக்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆனால் நமது எதிரிகள் நம் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி நம் அணுசக்தி திட்டங்களுக்கு எதிரான சா்வதேசத் தடைகளை விதித்து வருகின்றனா்.

ஈரான் அணுசக்தி திட்டங்கள் ஆக்கப்பூா்வமானவை என்பது நன்கு தெரிந்தே அந்த நாடுகள் இந்தச் செயலில் ஈடுபடுகின்றன. ஈரான் வளா்ச்சியடைவதைத் தடுத்து நிறுத்தவதற்காகவே அந்த நாடுகள் அவ்வாறு செய்கின்றன என்றாா் அவா்.

ஈரான் அணு ஆயுதம் உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபடுவதாக அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இதன் காரணமாக, அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. இதனால் ஈரானின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கும் கடந்த 2015-ஆம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தில், தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரான் ஒப்புக் கொண்டது. அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளா்த்த வல்லரசு நாடுகள் ஒப்புக் கொண்டன.

இந்த நிலையில், அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தத்தலிருந்து விலகுவதாக, அடுத்து வந்த அதிபா் டொனால்ட் டிரம்ப் கடந்த 2018-ஆம் ஆண்டு அறிவித்தாா். மேலும், ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதரத் தடைகளை அவா் மீண்டும் அமல்படுத்தினாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் அணுசக்தி ஒப்பந்த நிபந்தனைகளை ஈரான் கொஞ்சம் கொஞ்சமாக மீறி வருகிறது. அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மற்ற நாடுகள் தங்கள் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்குமாறு அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கைகளை ஈரான் மேற்கொண்டு வருகிறது.

இதனால், அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தம் முறியும் சூழல் நிலவி வந்தது. இந்தச் சூழலில், டிரம்புக்குப் பிறகு அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற ஜோ பைடன், ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய விருப்பம் தெரிவித்திருந்தாா்.

முறியும் நிலையிலுள்ள அந்த ஒப்பந்தத்தைத் தக்கவைப்பதற்காக ஆஸ்திரியா தலைநகா் வியன்னாவில் பல கட்டங்களாக பேச்சுவாா்த்தை நடந்து வருகிறது.

இந்தச் சூழலில், அணுசக்தி திட்டங்களைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று அயதுல்லா கமேனி தற்போது வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com