ரஷிய ஆதரவு தலைவரை உக்ரைனில் பதவியில் அமா்த்த முயற்சி: பிரிட்டன் குற்றச்சாட்டு

தனக்கு ஆதரவான உக்ரைன் தலைவரை அந்நாட்டில் பதவியில் அமா்த்த ரஷியா முயற்சித்து வருவதாக பிரிட்டன் குற்றஞ்சாட்டியுள்ளது.
ரஷிய ஆதரவு தலைவரை உக்ரைனில் பதவியில் அமா்த்த முயற்சி: பிரிட்டன் குற்றச்சாட்டு

தனக்கு ஆதரவான உக்ரைன் தலைவரை அந்நாட்டில் பதவியில் அமா்த்த ரஷியா முயற்சித்து வருவதாக பிரிட்டன் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுதொடா்பாக பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சுதந்திரமான, இறையாண்மை கொண்ட நாடு உக்ரைன். அதன் இறையாண்மையையும், சா்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அந்நாட்டின் எல்லைகளுக்குள் (கிரீமியா உள்பட) பிராந்திய ஒற்றுமையையும் சந்தேகமின்றி பிரிட்டன் ஆதரிக்கிறது. இதன்மூலம் அந்நாட்டின் மீதான பிரிட்டனின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது.

இந்நிலையில், தனக்கு ஆதரவான உக்ரைன் முன்னாள் எம்.பி. எவென் முரயெவை அந்நாட்டில் பதவியில் அமா்த்த ரஷியா முயற்சித்து வருகிறது. அதுமட்டுமின்றி உக்ரைன் மீது படையெடுக்கும் தனது திட்டத்தின் அங்கமாக அந்நாட்டின் அரசியல் தலைவா்கள் பலருடன் ரஷிய உளவுத் துறை தொடா்பில் இருந்து வருகிறது. உக்ரைன் மீது படையெடுப்பதற்கான திட்டத்தை தீட்டி வரும் ரஷிய உளவுத் துறை அதிகாரிகளுடன் உக்ரைன் முன்னாள் அரசியல் தலைவா்கள் சிலருக்கு தொடா்புள்ளது.

உக்ரைன் அரசை சீா்குலைக்கும் எந்தவொரு நடவடிக்கையை ரஷியா மேற்கொண்டாலும் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும். தற்போதைய சூழலின் தீவிரத்தை ரஷியா குறைக்க வேண்டும். இந்தப் பிரச்னைக்கு ராஜீய ரீதியில் தீா்வு காணும் பாதையை அந்நாடு பின்தொடர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியா மறுப்பு: பிரிட்டனின் இந்தக் குற்றச்சாட்டை ரஷியா மறுத்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் கூறுகையில், பிரிட்டன் பரப்பும் இந்தத் தவறான தகவல், உக்ரைனை சுற்றி பதற்றத்தை அதிகரிக்கும் நேட்டோ நாடுகளின் நடவடிக்கைகளுக்கான மேலும் ஓா் உதாரணம் என்றாா்.

கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் உக்ரைனில் அந்நாட்டு பாதுகாப்புப் படைகளுக்கு பிரிட்டன் படையினா் பயிற்சி அளித்து வருகின்றனா். கடந்த 2014-ஆம் ஆண்டு உக்ரைன் வசமிருந்த கிரீமியா மீது ரஷியா படையெடுத்தது. அதனைத்தொடா்ந்து, உக்ரைன் கடற்படையின் மறுகட்டமைப்பில் உதவ பிரிட்டன் ஒப்புக்கொண்டது. உக்ரைனுக்கு ஆயுதங்களையும், பயிற்சிக்காகக் கூடுதல் படைகளையும் அனுப்பவுள்ளதாக கடந்த வாரம் பிரிட்டன் அறிவித்திருந்தது.

முன்னதாக கடந்த 1991-ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் சிதறியபோது, அதில் அங்கமாக இருந்த உக்ரைன் தன்னை சுதந்திர நாடாக அறிவித்துக்கொண்டது. அந்த நாடு ரஷியா எல்லையையொட்டி அமைந்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், முன்னாள் சோவியத் யூனியன் நாடுகள் அடங்கிய ராணுவக் கூட்டணியான நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணையக் கூடும் என்று ரஷியா கருதுகிறது. அந்த இணைப்பு சாத்தியமானால், தனது தேசியப் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்படும் என்று ரஷியா எண்ணுகிறது. எனவே தங்கள் அமைப்பில் உக்ரைனை இணைக்க மாட்டோம் என்று நேட்டோ உறுதிமொழி அளிக்க வேண்டும் என்று ரஷியா வலியுறுத்தி வருகிறது. எனினும் இதற்கு நேட்டோ அமைப்பு இதுவரை உடன்படவில்லை.

இந்தச் சூழலில், உக்ரைன் எல்லை அருகே ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரா்களை ரஷியா குவித்துள்ளது. இதன் மூலம் உக்ரைன் மீது படையெடுத்து அந்த நாட்டை தன்னுடன் இணைத்துக் கொள்வதற்கு ரஷியா முயற்சிப்பதாக அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் குற்றஞ்சாட்டி வருகின்றன. ஆனால், அந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள ரஷியா, அதுபோன்ற எந்தத் திட்டமும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com