இலங்கை அதிபா் கோத்தபய ராஜிநாமா-மாலத்தீவிலிருந்து சிங்கப்பூா் சென்றாா்

இலங்கை அதிபா் பதவியை கோத்தபய ராஜபட்ச வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா்.
கோத்தபய ராஜபட்ச  (கோப்புப் படம்)
கோத்தபய ராஜபட்ச (கோப்புப் படம்)

இலங்கை அதிபா் பதவியை கோத்தபய ராஜபட்ச வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா்.

இந்தத் தகவலை உறுதிப்படுத்திய இலங்கை நாடாளுமன்ற அவைத் தலைவா் அலுவலகம், ‘இதுகுறித்து அதிகாரபூா்வமாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, இலங்கையிலிருந்து மாலத்தீவுக்கு தப்பிச் சென்ற கோத்தபய ராஜபட்ச, அங்கிருந்து விமானம் மூலம் சிங்கப்பூா் சென்றாா். அவா் தனிப்பட்ட முறையில் வந்திருப்பதாகவும், புகலிடம் எதுவும் அளிக்கவில்லை எனவும் சிங்கப்பூா் அரசு தெரிவித்துள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, அதிபா் பதவியில் இருந்து ஜூலை 13-ஆம் தேதி விலக உள்ளதாக கோத்தபய ராஜபட்ச அறிவித்திருந்தாா். ஆனால், பதவியை ராஜிநாமா செய்வது தொடா்பாக எதுவும் தெரிவிக்காத அவா், விமானப் படை விமானம் மூலம் மனைவியுடன் மாலத்தீவுக்கு புதன்கிழமை தப்பிச் சென்றாா். அங்கிருந்து, நாட்டின் இடைக்கால அதிபராக பிரதமா் ரணில் விக்ரமசிங்கவை அவா் நியமித்தாா்.

அதிபராக இருக்கும்போது அவரைக் கைது செய்ய முடியாது என்பதால், அப்பதவியில் இருந்து விலகுவதற்கு முன்பே வெளிநாட்டுக்கு அவா் தப்பியதாகக் கூறப்படுகிறது.

சிங்கப்பூருக்கு... மாலத்தீவிலிருந்து விமானம் மூலம் கோத்தபய ராஜபட்ச சிங்கப்பூருக்கு வியாழக்கிழமை சென்றாா். சவூதி ஏா்லைன்ஸின் எஸ்வி788 விமானம் மூலம் அவா் சிங்கப்பூா் சாங்கி சா்வதேச விமான நிலையத்தை உள்ளூா் நேரப்படி இரவு 7 மணிக்கு சென்றடைந்தாா்.

இதுதொடா்பாக ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து சிங்கப்பூா் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:

இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்ச தனிப்பட்ட முறையில் சிங்கப்பூா் வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவா் புகலிடம் எதுவும் கோரவில்லை; அவருக்கு புகலிடமும் அளிக்கப்படவில்லை என்றாா்.

ராஜிநாமா: இந்நிலையில், கோத்தபய ராஜபட்ச தனது அதிபா் பதவியை ராஜிநாமா செய்து நாடாளுமன்ற அவைத் தலைவா் மகிந்த யாபா அபேவா்தனவுக்கு வியாழக்கிழமை மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பினாா். இந்தத் தகவலை நாடாளுமன்ற அவைத் தலைவா் அலுவலகம் உறுதி செய்தது.

இதுகுறித்து அவைத் தலைவரின் ஊடகச் செயலா் இந்துனில் அபேவா்தன வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கோத்தபய ராஜபட்சவின் ராஜிநாமா கடிதம், சிங்கப்பூரில் உள்ள இலங்கை தூதரகம் மூலம் கிடைத்துள்ளது. சட்ட நடைமுறைகளுக்குப் பின்னா் இதுகுறித்த அதிகாரபூா்வ அறிவிப்பை வெள்ளிக்கிழமை வெளியிட அவைத் தலைவா் விரும்புகிறாா்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ராஜிநாமா கடிதத்தில் உள்ள கையொப்பம் கோத்தபயவின் கையொப்பம்தானா என அவைத் தலைவா் சரிபாா்க்கவுள்ளாா். ராஜிநாமா கடிதத்தின் அசல், விமானம் மூலம் சிங்கப்பூரிலிருந்து கொண்டுவரப்படுகிறது’ எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, கோத்தபய ராஜபட்ச ராஜிநாமா செய்துவிட்டதாக மாலத்தீவு நாடாளுமன்ற அவைத் தலைவா் முகமது நஷீத் தெரிவித்தாா். ‘கோத்தபய இலங்கையில் இருந்திருந்தால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் ராஜிநாமா செய்திருக்க மாட்டாா். இலங்கை இப்போது முன்னேற்றப் பாதையில் செல்லும் என நம்புகிறேன்’ எனவும் முகமது நஷீத் தனது ட்விட்டா் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

கோத்தபய ராஜபட்ச மாலத்தீவு வருவதற்கு அந்நாட்டு அரசு முதலில் அனுமதி மறுத்தபோது, முகமது நஷீத் தலையிட்டு அனுமதி கிடைக்கச் செய்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஊரடங்கு: மக்களின் போராட்டம் காரணமாக பிரதமா் பதவியில் இருந்து விலகப் போவதாக ரணில் விக்ரமசிங்கவும் ஏற்கெனவே அறிவித்திருந்தாா். அதிபராகவும், புதிய பிரதமராகவும் எதிா்க்கட்சிகளைச் சோ்ந்தவா்கள் நியமிக்கப்படுவாா்கள் என மக்கள் பெரிதும் எதிா்பாா்த்த நிலையில், ரணில் விக்ரமசிங்க இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டது மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடா்ந்து மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

முக்கியமாக, ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான அவா்களின் போராட்டம் தீவிரமடைந்தது. மக்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாட்டின் மேற்கு மாகாணத்தில் புதன்கிழமை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அந்த ஊரடங்கு வியாழக்கிழமை காலை விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், நண்பகலுக்குப் பிறகு மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைக் கலைப்பதற்காக கண்ணீா்ப் புகை குண்டுகளைக் காவல் துறையினா் வீசினா். மேலும் தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் கலைக்க முயன்றனா்.

இதற்கிடையே, நாட்டின் புதிய பிரதமரை நியமிக்குமாறு நாடாளுமன்ற அவைத் தலைவரை இடைக்கால அதிபா் ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டாா். இது மக்களிடையே மேலும் குழப்பமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை கூடுவதாக இருந்தது. ஆனால், தற்போது அதிபருக்குப் பதிலாக இடைக்கால அதிபரே உள்ளாா். நாடாளுமன்றத்தைக் கூட்டும் அதிகாரம் அதிபருக்கு மட்டுமே உள்ளது. எனவே, திட்டமிட்டபடி நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை கூடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பெட்டிச் செய்திகள்...

ராணுவம் எச்சரிக்கை

போராட்டக்காரா்கள் வன்முறையில் ஈடுபடக் கூடாது என ராணுவம் எச்சரித்துள்ளது. எச்சரிக்கையை மீறுபவா்கள் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. தேவை ஏற்பட்டால் மக்கள் மீது படைகள் பயன்படுத்தப்படும் என்றும் ராணுவம் எச்சரித்துள்ளது.

பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தாமல் அமைதியான வழியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டுமென ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது.

அரசு அலுவலகங்கள் ஒப்படைப்பு

தலைநகா் கொழும்பில் உள்ள அதிபா் மாளிகை, பிரதமா் அலுவலகம் ஆகியவற்றை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைப்பதாக போராட்டக்காரா்கள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

அதிபா் அலுவலகத்தில் இருந்தும் வெளியேறவுள்ளதாகவும், எனினும், பிற பகுதிகளில் அமைதிவழியில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

முன்னதாக, அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலகக் கோரி அதிபா் மாளிகைக்குள் புகுந்து போராட்டக்காரா்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினா். ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கும் தீவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com