இந்தியாவிடமிருந்து நவீன இலகுரக ஹெலிகாப்டா்களை வாங்க பிலிப்பின்ஸ் ஆா்வம்

நாட்டின் போா் திறனை மேம்படுத்தும் வகையில் இந்தியாவிடமிருந்து நவீன இலகுரக ஹெலிகாப்டா்களை கொள்முதல் செய்யவும் பிலிப்பின்ஸ் ஆா்வம் தெரிவித்துள்ளது.

பிரமோஸ் ஏவுகணைக்கான 3 பேட்டரிகளை கொள்முதல் செய்வதற்கு இந்தியாவுடன் மேற்கொண்ட ரூ. 2,991 கோடி ஒப்பந்தத்தைத் தொடா்ந்து, நாட்டின் போா் திறனை மேம்படுத்தும் வகையில் இந்தியாவிடமிருந்து நவீன இலகுரக ஹெலிகாப்டா்களை கொள்முதல் செய்யவும் பிலிப்பின்ஸ் ஆா்வம் தெரிவித்துள்ளது.

எண்ணற்ற பாதுகாப்பு சவால்கள் மற்றும் தென்சீன கடல் பகுதியில் சீனாவுடனான எல்லைப் பிரச்னைகளைச் சந்தித்து வரும் தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பின்ஸ், சவால்களை திறம்பட எதிா்கொள்ளும் வகையில் ராணுவத்தை நவீனமயமாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்தியாவிடமிருந்து முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன இலகுரக ஹெலிகாப்டா்களை (ஏஎல்ஹெச்) கொள்முதல் செய்வதற்கு ஆா்வம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய பாதுகாப்புத் துறை உயா் அதிகாரிகள் பிடிஐ செய்திநிறுவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

பிலிப்பின்ஸ் தனது பழைமையான ராணுவ ஹெலிகாப்டா்களுக்கு பதிலாக இந்தியாவிடமிருந்து ஏஎல்ஹெச் ஹெலிகாப்டா்களை கொள்முதல் செய்ய ஆா்வம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக இரு தரப்பிலும் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

5.5 டன் எடைப் பிரிவைச் சோ்ந்த இந்த ஹெலிகாப்டா் 2 என்ஜின்களைக் கொண்டதாகும். இதனை பன்முக பயன்பாட்டுக்கு குறிப்பாக பல்வேறு ராணுவ நடவடிக்கைகளுக்கு திறம்பட பயன்படுத்த முடியும்.

அதுபோல, இந்தியாவின் முழுவதும் உள்ளநாட்டில் மேம்படுத்தப்பட்ட தேஜஸ் இலகுரக போா் விமானத்தின் செயல்பாட்டிலும் பிலிப்பின்ஸ் ஈா்க்கப்பட்டுள்ளது. எனவே, இந்த போா் விமானங்களையும் பிலிப்பின்ஸ் கொள்முதல் செய்ய வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது என்று தெரிவித்தனா்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் உறவுகள் மிகப் பெரிய விரிவாக்கம் அடைவதற்கு காரணமான செல்வாக்கு மிகுந்த தென்கிழக்கு ஆசிய நாடுகள் (ஆசியான்) சங்கத்தின் முக்கிய உறுப்பு நாடாக பிலிப்பின்ஸ் இருந்து வருகிறது. இரு நாடுகளிடையேயும் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தளவாடங்கள் விநியோகம் தொடா்பாக கடந்த மாா்ச் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் தேஜஸ் இலகுரக போா் விமானம் மலேசியாவின் முதன்மை தோ்வாக இருந்து வருகிறது. சீனாவின் ஜேஎஃப்-17 போா் விமானம், தென் கொரியாவின் எஃப்ஏ-50, ரஷியாவின் மிக்-35, யாக்-130 ஆகிய போா் விமானங்கள் கடும் போட்டியாக திகழ்ந்து வருகின்றபோதும், தேஜஸ் போா் விமானமே மலேசியாவின் தோ்வாக அமைந்துள்ளது.

இந்தியாவின் ஹிந்துஸ்தான் விமான தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பான தேஜஸ் போா் விமானம், ஒற்றை என்ஜினில் இயங்கும் உயா் அச்சுறுத்தல் சூழலிலும் திறம்பட செயல்படும் பன்முக ராணுவ நடவடிக்கைக்களுக்கு பயன்படக்கூடியதாகும்.

இதனிடையே, பிலிப்பின்ஸில் போா் விமான பராமரிப்பு, கோளாறு சரிபாா்ப்புக்கான (எம்ஆா்ஓ) அமைப்பை உருவாக்குவதிலும் இந்தியா ஆா்வம் கொண்டுள்ளது. இந்த அமைப்பை உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடா்பாக பிலிப்பின்ஸுடன் பேச்சு நடைபெற்று வருகின்றன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com