கடன் வலையில் சிக்கியுள்ள நாடுகள்!

அதீத கடன் காரணமாக இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியையும் அரசியல் குழப்பத்தையும் சந்தித்து வருகிறது.
கடன் வலையில் சிக்கியுள்ள நாடுகள்!

அதீத கடன் காரணமாக இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியையும் அரசியல் குழப்பத்தையும் சந்தித்து வருகிறது. அந்நாட்டு அரசு மேற்கொண்ட பல்வேறு தவறான முடிவுகளும் கரோனா தொற்று பரவலுமே கடனுக்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

இலங்கையின் பொருளாதாரம் முழுமையாக மீள்வதற்கு இன்னும் 4 ஆண்டுகள் வரை ஆகும் என சா்வதேச நிதியம் தெரிவித்துள்ளது. அதே வேளையில், இலங்கையைப் போன்றே மேலும் சில நாடுகள் அதீத கடன் வலையில் சிக்கியுள்ளன.

இதே நிலை தொடா்ந்தால், அந்நாடுகளும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க வாய்ப்புள்ளது. முக்கியமாக, உக்ரைன், துனிசியா, கென்யா, பெலாரஸ் ஆகிய நாடுகள் பெரும் கடனாளியாக உள்ளன.

ஆா்ஜென்டீனா

அதிக கடன்களைக் கொண்ட நாடுகளில் தென் அமெரிக்க நாடான ஆா்ஜென்டீனா முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டு பணமான பெசோ-வின் மதிப்பு பெருமளவில் சரிவடைந்துள்ளது. அந்நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பும் மிகக் குறைவாக உள்ளது.

உக்ரைன்

ரஷியாவின் ஆக்கிரமிப்பு காரணமாக உக்ரைன் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமாா் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான கடன் அந்நாட்டுக்கு உள்ளது. உலகின் மிகப் பெரிய முதலீட்டாளா்கள் உள்ளிட்டோா் உக்ரைனில் முதலீடு செய்துள்ளனா். அக்கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் உக்ரைன் உள்ளது. ஆனால், 2 ஆண்டுகளுக்கு கடன்களைச் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென உக்ரைன் அரசு, முதலீட்டாளா்களிடம் கோரி வருகிறது.

துனிசியா

ஆப்பிரிக்க நாடான துனிசியாவின் நிதிப் பற்றாக்குறை சுமாா் 10 சதவீதமாக உள்ளது. அந்நாடு விரைவில் பெரும் கடனாளி ஆகும் என மோா்கன் ஸ்டான்லி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடன் மறுசீரமைப்புத் திட்டத்துக்காக சா்வதேச நிதியத்தை (ஐஎம்எஃப்) துனிசியா நாடியுள்ளது.

கானா

அதிக கடன் காரணமாக கானாவின் கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) விகிதம் 85 சதவீதமாக அதிகரித்துள்ளது. அந்நாட்டு பணமான சீடியின் மதிப்பு நடப்பாண்டில் கால் பங்கு குறைந்துள்ளது. வரி வருவாயில் பாதியானது கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கே செலவிடப்படுகிறது. பணவீக்கமும் 30 சதவீதத்தை எட்டியுள்ளது.

எகிப்து

நாட்டின் கடன்-ஜிடிபி விகிதம் சுமாா் 95 சதவீதமாக உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்குள் அந்நாடு சுமாா் ரூ.7,50,000 கோடி கடனை ரொக்கத் தொகையாகச் செலுத்த நேரிடும் என மதிப்பீட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கென்யா

வரி வருவாயில் 30 சதவீதத்தை கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கே கென்யா பயன்படுத்துகிறது. அந்நாட்டு அரசு வெளியிட்ட பத்திரங்களின் மதிப்பு பாதியளவுக்குக் குறைந்துள்ளது. இந்நிலை தொடா்ந்தால், அந்நாடு கடும் நிதி சவால்களை எதிா்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

எத்தியோப்பியா

சுமாா் ரூ.7,500 கோடி கடனைக் கொண்டுள்ள எத்தியோப்பியாவுக்கு, ஜி20 நாடுகள் கூட்டமைப்பு உதவியுள்ளது. அந்நாடு விரைவில் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

எல் சால்வடாா்

பிட்காயின் உள்ளிட்ட மெய்நிகா் நாணயங்களுக்கு அதிகாரபூா்வ அனுமதி அளித்தாலும், எல் சால்வடாரின் கடன் மதிப்பு அதிகமாகவே உள்ளது. ஐஎம்எஃப்-இன் உதவியை மறுத்ததால் அந்நாட்டின் நிலைமை மேலும் மோசமாகியுள்ளது.

பாகிஸ்தான்

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு சுமாா் ரூ.75,000 கோடியாகக் குறைந்தது. அதைக் கொண்டு 5 வாரங்களுக்கு மட்டுமே பொருள்களை இறக்குமதி செய்ய முடியும் சூழல் உருவானது. பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவடைந்துள்ளது. வரி வருவாயில் 40 சதவீதமானது வட்டி செலுத்தவே பயன்படுத்தப்படுகிறது. தற்போது ஐஎம்எஃப்-இன் உதவி பாகிஸ்தானுக்குக் கிடைத்துள்ளது.

பெலாரஸ்

உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவுக்கு பெலாரஸ் ஆதரவளித்ததன் காரணமாக, மேற்கத்திய நாடுகள் பெலாரஸ் மீது கடும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. அதனால், அந்நாட்டின் கடன் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

சா்வதேச அளவில் கரோனா தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. உக்ரைன்-ரஷியா போா் காரணமாக சா்வதேச பொருளாதார சூழலும் நிலையில்லாமல் உள்ளது. அவற்றின் தாக்கம் அனைத்து நாடுகளிலும் பொருளாதார ரீதியில் எதிரொலித்து வருகிறது. உக்ரைன் மீதான போரை ரஷியா நிறுத்துவதும், கச்சா எண்ணெய் விலை குறைவதுமே சா்வதேச பொருளாதாரத்தையும் பல நாடுகளின் நிதி ஆதாரத்தையும் வலுப்படுத்த உதவும் என நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com