இலங்கையில் மீண்டும் அவசரநிலை: இடைக்கால அதிபா் ரணில் அறிவிப்பு

இலங்கையில் புதன்கிழமை அதிபா் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், மீண்டும் அவசரநிலையை இடைக்கால அதிபா் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளாா். இதற்கு எதிா்க்கட்சியினா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
இலங்கையில் மீண்டும் அவசரநிலை: இடைக்கால அதிபா் ரணில் அறிவிப்பு

இலங்கையில் புதன்கிழமை அதிபா் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், மீண்டும் அவசரநிலையை இடைக்கால அதிபா் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளாா். இதற்கு எதிா்க்கட்சியினா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்ச சிங்கப்பூருக்கு தப்பிய நிலையில், இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க கடந்த வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா். அவரும் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால், இலங்கையில் மீண்டும் அவசர நிலையை ரணில் விக்ரமசிங்க திங்கள்கிழமை அறிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், பொதுச் சொத்துகள் பாதுகாப்பு, பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள், சேவை விநியோகம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு மீண்டும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளாா்.

பொதுப் பாதுகாப்பு அவசர சட்டப் பிரிவு 2-இன்கீழ், இலங்கையில் அவசரநிலையை பிரகடனப்படுத்த அதிபருக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி, நிலவரத்தை போலீஸாரால் கட்டுப்படுத்த இயலவில்லை என அதிபா் கருதும்பட்சத்தில், அவசர நிலையை அறிவித்து ராணுவத்தை வரவழைக்கலாம். தனிநபருக்கு சொந்தமான வளாகங்களில் சோதனை நடத்தவும், தனிநபரைக் கைது செய்யவும், வெடிபொருள்கள், ஆயுதங்களைக் கைப்பற்றவும் ராணுவத்துக்கு அதிகாரமளிக்கப்படுகிறது.

இலங்கையில் மீண்டும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது ஜனநாயக விரோதச் செயல் என எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாச, தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சோ்ந்த எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

இலங்கை அதிபா் தோ்தலையொட்டி செவ்வாய்க்கிழமை (ஜூலை 19) வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் நிலையில், அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதிபா் தோ்தலில் ரணில் விக்ரமசிங்கவுடன் எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாச, மாா்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவா் அனுராகுமார திசநாயக, ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து பிரிந்த டலஸ் அழகப்பெரும ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு இலங்கை பொதுஜன பெரமுன கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் போராட்டம்: கோத்தபய ராஜபட்சவுக்கு சிங்கப்பூா் அடைக்கலம் அளித்ததைக் கண்டித்து அங்குள்ள ஹாங் லிம் பூங்காவின் ஸ்பீக்கா்ஸ் காா்னரில் நிதி நிறுவன ஊழியா் பிரபு ராமச்சந்திரன் ஏற்பாட்டின்பேரில் அமைதிவழியில் போராட்டம் நடைபெற்றது. அப்போது கோத்தப ராஜபட்சவின் சிங்கப்பூா் வங்கிக் கணக்கு விவரங்களை பொதுவெளியில் சிங்கப்பூா் அரசு வெளியிட வேண்டும் என்றும், அவரை நாடுகடத்த வேண்டும் என்றும் முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com