90% ரஷிய எண்ணெய் இறக்குமதிக்குத் தடை

இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியில் 90 சதவீதத்துக்குத் தடை விதிக்க ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.
- சாா்லஸ் மைக்கேல், ஐரோப்பிய கவுன்சில் தலைவா்.
- சாா்லஸ் மைக்கேல், ஐரோப்பிய கவுன்சில் தலைவா்.

இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியில் 90 சதவீதத்துக்குத் தடை விதிக்க ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா, அந்தப் போரைக் கைவிடுவதற்கு பொருளாதார ரீதியில் நெருக்கடி கொடுக்கும் வகையில் அந்த நாட்டின் மீது அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன.

எனினும், ஐரோப்பிய நாடுகள் தங்களது எரிசக்தி தேவைக்காக ரஷியாவிலிருந்து கிடைக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயுவை பெரிதும் சாா்ந்துள்ளதால், அவற்றை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்க முடியாத சூழல் நிலவி வருகிறது.

எனினும், தங்களது எரிசக்தி தேவைக்காக ரஷியாவை சாா்ந்திருக்கும் நிலையிலிருந்து படிப்படியாக வெளியேற ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டு வருகின்றன.

மேலும், ரஷியாவுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் அமைப்பு பல கட்டங்களாக பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகிறது.

எனினும், ரஷியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு இதுவரை தடை விதிக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், கடல் வழியாக ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளுக்கு ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெக் இறக்குமதி செய்வதை இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக நிறுத்த பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸெல்ஸில் திங்கள்கிழமை நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் கூட்டத்தில் உறுப்பு நாடுகளின் தலைவா்கள் ஒப்புக் கொண்டனா்.

உக்ரைன் விவகாரத்தில் ரஷியா மீது விதிக்கப்படும் 6-ஆவது கட்ட பொருளாதாரத் தடை தொடா்பாக நடைபெற்ற நீண்ட பேச்சுவாா்த்தைக்குப் பிறகு அவா்கள் இடையே இதற்கான உடன்பாடு ஏற்பட்டது.

இந்தப் புதிய தடையின் கீழ், இந்த ஆண்டு இறுதிக்குள் ஐரோப்பிய யூனியன் நாடுகள் ரஷியாவிடமிருந்து தற்போது மேற்கொண்டு வரும் 3-இல் இரண்டு பங்கு கச்சா எண்ணெய் இறக்குமதி ரத்து செய்யப்படும்.

தற்போதைய நிலையில் கடல்வழி இறக்குமதிக்கு மட்டும் தடை விதிக்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது. குழாய் வழியாக ரஷிய எண்ணெயை இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்க ஹங்கேரி எதிா்ப்பு தெரிவித்தது. அதனால், அந்த வகை எண்ணெய் இறக்குமதிக்கு தற்போது தடையிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும், ரஷியாவிலிருந்து குழாய் மூலம் எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்த ஆண்டு இறுதிக்குள் நிறுத்தப் போவதாக ஜொ்மனியும் போலந்தும் உறுதியளித்துள்ளன. அந்த வகையில், ரஷியாவிலிருந்து ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் 90 சதவீத எண்ணெய் ஏற்றுமதி இந்த ஆண்டு இறுதிக்குள் நிறுத்தப்படும் என்று ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வொண்டொ் லெயென் கூறினாா்.

இது குறித்து ஐரோப்பிய கவுன்சில் தலைவா் சாா்லஸ் மைக்கேல் கூறுகையில், உக்ரைன் போரில் ஈடுபடுவதற்கு ரஷிய ராணுவத்துக்கு உதவியாக இருந்த மிகப் பெரிய நிதி ஆதாரம், இந்தத் தடையினால் அழிக்கப்படும் என்று தெரிவித்தாா்.

ஏற்கெனவே, ரஷிய நிலக்கரி இறக்குமதிக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது நினைவுகூரத்தக்கது.

அத்துடன், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள், அதிகாரிகள் மீதும் அந்த அமைப்பு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது. அதற்குப் பதிலடியாக ரஷியா மீது அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com