இந்தியாவில் ஆண்டு முழுவதும் சிறுபான்மையினர் மீது தொடரும் தாக்குதல்கள்: அமெரிக்காவின் அதிர்ச்சி ரிப்போர்ட்

முன்னதாக, அமெரிக்க மத சுதந்திர அமைப்பு வெளியிட்ட அறிக்கையை இந்தியா நிராகரித்திருந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சர்வதேச நாடுகளில் பின்பற்றப்படும் மத சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை நாடாளுமன்றத்தில் வருடாந்திர அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், கடந்த 2021ஆம் ஆண்டு முழுவதும் சிறுபான்மையினர் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தலைமையகத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் இந்த அறிக்கையை வெளியிட்டார். உலகின் பல்வேறு நாடுகளில் மத சுதந்திரத்தில் தலையிடும் போக்கு குறித்து இந்த அறிக்கை தனது நிலைபாட்டை எடுத்துரைத்துள்ளது. ஒவ்வொரு நாட்டில் நிகழ்ந்த விதி மீறல்கள் பற்றி தனி அத்தியாயங்கள் கொண்டுள்ளது.

முன்னதாக, அமெரிக்க மத சுதந்திர அமைப்பு வெளியிட்ட அறிக்கையை இந்தியா நிராகரித்திருந்தது. அரசியலமைப்பால் பாதுகாக்கப்பட்ட குடிமக்களின் நிலை குறித்து பேசுவதற்கு வெளிநாட்டு அரசுக்கு உரிமை இல்லை என்றும் இந்தியா விமரிசித்திருந்தது. 

அமெரிக்கா தற்போது வெளியிட்ட அறிக்கையில், இந்தியா குறித்து பேசப்பட்ட அத்தியாயத்தில் தனது நிலைபாட்டை தெரிவிக்கவில்லை. ஆனால், இந்திய ஊடகங்களில் வெளியான செய்தியையும் அரசின் அறிக்கைகளையும் ஆவணப்படுத்தியுள்ளது. பல்வேறு அரசு சாரா அமைப்புகள், சிறுபான்மை நிறுவனங்கள் தங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்த குற்றசாட்டுகள் குறித்தும் ஆராய்ந்துள்ளது. 

இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளின் விசாரணை முடிவுகள் மற்றும் அரசின் பதில்கள் குறித்து அறிக்கை பேசவில்லை. "கொலை, தாக்குதல், மிரட்டல் என சிறுபான்மை சமூகதத்தினர் மீது ஆண்டு முழுவதும் தாக்குதல்கள் தொடர்ந்துள்ளது. பசுவதை, மாட்டிறைச்சி விற்றது போன்றவற்றை காரணம் காட்டி இந்துக்கள் அல்லாதோர் மீது நடத்தப்பட்ட கும்பல் வன்முறையும் இதில் அடங்கும்" என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்த கருத்து குறித்து விவரித்த அறிக்கை, "இந்தியாவில் உள்ள இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒரே மாதிரியான டிஎன்ஏ-வை பகிர்ந்து கொண்டுள்ளனர். மதத்தால் அவர்களை வேறுப்படுத்தக் கூடாது என இந்தியாவின் ஆளும் கட்சியான பாஜகவின் கொள்கை ரீதியான தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார். 

நாட்டில் இந்துக்கள், இஸ்லாமியர்கள் என யாருடைய ஆதிக்கமும் இருக்க கூடாது. இந்தியர்களின் ஆதிக்கம் மட்டுமே இருக்க வேண்டும். இந்தியாவில் இஸ்லாம் ஆபத்தில் உள்ளது என்று அச்சமூகத்தினர் பயப்பட வேண்டாம். பசுவைக் கொன்றதற்காக இந்துக்கள் அல்லாதவர்களைக் கொல்வது இந்து மதத்திற்கு எதிரான செயல் என அவர் தெரிவித்த கருத்து அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com