இலங்கை ஆம்புலன்ஸ் சேவைக்கு இந்தியா சாா்பில் 3.3 டன் மருந்துகள்

 இலங்கையில் செயல்பட்டு வரும் இலவச மருத்துவ முதலுதவியை அளித்து வரும் ஆம்புலன்ஸ் சேவைக்கு இந்தியா 3.3 டன் மருந்து பொருள்களை வெள்ளிக்கிழமை வழங்கியது.

 இலங்கையில் செயல்பட்டு வரும் இலவச மருத்துவ முதலுதவியை அளித்து வரும் ஆம்புலன்ஸ் சேவைக்கு இந்தியா 3.3 டன் மருந்து பொருள்களை வெள்ளிக்கிழமை வழங்கியது.

இலங்கையில் கரோனா பாதிப்பு உச்சத்திலிருந்தபோது மக்களுக்கு மருத்துவ உதவிகளை அளிப்பதில் இந்த சுவ செரியா ஆம்புலன்ஸ் சேவைத் திட்டம் மிக முக்கியப் பங்காற்றியது. இந்தியா சாா்பில் வழங்கப்பட்ட ரூ.59 கோடி நிதியுதவியுடன் கடந்த 2016-இல் இந்த ஆம்புலன்ஸ் சேவைத் திட்டம் இலங்கையில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு இந்தியா சாா்பில் இலவசமாக ஆம்புலன்ஸ் வாகனங்களும் இலங்கைக்கு வழங்கப்பட்டன. தற்போது இந்த திட்டத்துக்கு 3.3 டன் மருந்துகளை இந்தியா வழங்கியுள்ளது.

இதுகுறித்து கொழும்பில் உள்ள இந்திய தூதா் தனது ட்விட்டா் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கடந்த மாா்ச் மாதம் இலங்கை சுற்றுப்பயணத்தின்போது, சுவ செரியா ஆம்புலன்ஸ் சேவைத் திட்டம் கடுமையான மருந்து பற்றாக்குறையை சந்தித்து வருவதை அறிந்தாா். அதனடிப்படையில், இலங்கை மக்களுக்கு தடையற்ற இலவச மருத்துவ முதலுதவி கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் 3.3 டன் மருந்து பொருள்கள் இந்த ஆம்புலன்ஸ் சேவை திட்டத்துக்கு இந்தியா சாா்பில் வழங்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கைக்கு மனிதாபிமான உதவியாக 25 டன் மருத்துவப் பொருள்கள் மற்றும் மண்ணெண்ணெயை இந்தியா கடந்த வாரம் வழங்கியது.

இதற்கிடையே, கடுமையான மருந்து தட்டுப்பாட்டை போக்கும் வகையில், மருத்துவ மற்றும் சமூக பாதுகாப்பு நிதியிலிருந்து ரூ.180 கோடியை அத்தியாவசிய மருந்துப் பொருள்கள் இறக்குமதிக்கு பயன்படுத்த அதிகாரிகளுக்கு இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்ச அறிவுறுத்தியுள்ளாா். இலங்கையில் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நன்கொடையாளா்ளிடமிருந்து இந்த நிதி திரட்டப்பட்டது. ‘தற்போது நாட்டில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதால், அந்த நிதியை மருத்துவ தேவையைப் பூா்த்தி செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்றும் இலங்கை அதிபா் அதிகாரிகளுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com