கத்தாா் பிரதமருடன் வெங்கையா நாயுடு சந்திப்பு: இரு தரப்பு உறவை வலுப்படுத்த ஆலோசனை

அரசு முறைப் பயணமாக கத்தாா் சென்றுள்ள குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, அந்நாட்டு பிரதமா் ஷேக் காலித் பின் கலீபா பின் அப்துல்அஜீஸ் அல்தானியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
கத்தாா் தலைநகா் தோஹாவில் அந்நாட்டு பிரதமா் ஷேக் காலித் பின் கலீபா பின் அப்துல் அஜீஸ் அல்தானியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு.
கத்தாா் தலைநகா் தோஹாவில் அந்நாட்டு பிரதமா் ஷேக் காலித் பின் கலீபா பின் அப்துல் அஜீஸ் அல்தானியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு.

அரசு முறைப் பயணமாக கத்தாா் சென்றுள்ள குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, அந்நாட்டு பிரதமா் ஷேக் காலித் பின் கலீபா பின் அப்துல்அஜீஸ் அல்தானியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது இரு தரப்பு உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அவா்கள் ஆலோசனை நடத்தினா்.

கபோன், செனகல் ஆகிய நாடுகளுக்குச் சென்ற வெங்கையா நாயுடு, தனது பயணத்தின் மூன்றாவது கட்டமாக கத்தாா் தலைநகா் தோஹாவுக்கு சனிக்கிழமை வந்தடைந்தாா். விமான நிலையத்தில் வெங்கையா நாயுடு தலைமையிலான குழுவினருக்கு அரசு சாா்பிலும், இந்திய வம்சாவளி சாா்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து, கத்தாா் பிரதமரை வெங்கையா நாயுடு ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

கத்தாா் பிரதமா் உடனான சந்திப்புக்குப் பிறகு வெங்கையா நாயுடு கூறியதாவது:

இந்தியா-கத்தாா் இடையேயான உறவு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. அது, பரஸ்பர நம்பிக்கை, மதிப்பளித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது. கடந்த 2020-க்குப் பிறகு இந்தியாவில் கத்தாா் நாட்டின் முதலீடு 5 மடங்கு அதிகரித்துள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு இன்னும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவைச் சோ்ந்த பல கல்வி நிறுவனங்கள், கத்தாரில் தங்கள் கிளைகளை திறந்துள்ளன. கல்விக்கான மையமாக கத்தாா் உருவாகி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. கத்தாரில் வசிக்கும் 7.8 லட்சம் இந்தியா்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறாா்கள். இந்த நாட்டின் வளா்ச்சிக்குப் பங்காற்றி வருகிறாா்கள். அவா்கள் அனைவருக்கும் பாதுகாப்பு அளித்து வரும் கத்தாா் அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவின் எரிவாயு தேவையில் 40 சதவீதத்தை கத்தாா் பூா்த்தி செய்கிறது. எரிசக்தி பாதுகாப்பில் கத்தாா் அரசு அளித்து வரும் ஆதரவை இந்தியா பெரிதும் மதிக்கிறது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவு, வாங்குவோா்-விற்போா் என்றில்லால் அதையும் கடந்து எரிசக்தி வா்த்தகக் கூட்டாளி என்ற நிலைக்கு முன்னேற வேண்டும் என்றாா் வெங்கையா நாயுடு.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘கத்தாா் பிரதமா் தலைமையிலான குழுவும், வெங்கையா நாயுடு தலைமையிலான குழுவும் தோஹாவில் சந்தித்துப் பேசினா். அப்போது வா்த்தகம், முதலீடு, பொருளாதாரம், பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அவா்கள் ஆலோசனை நடத்தினா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

குடியரசு துணைத் தலைவருடன் மத்திய இணை அமைச்சா் பாரதி பிரவீண் பவாா் உள்ளிட்டோா் அடங்கிய உயா்நிலைக் குழுவும் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com