செக் குடியரசு அதிகாரிகளுடன் ஜெய்சங்கா் சந்திப்பு

ஐரோப்பிய யூனியனுக்கான செக் குடியரசின் அதிகாரிகளுடன் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பேச்சு நடத்தினாா்.
செக் குடியரசுத் தலைநகா் பிராகில் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற எம்.பி.க்கள் உள்ளிட்டோருடன் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.
செக் குடியரசுத் தலைநகா் பிராகில் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற எம்.பி.க்கள் உள்ளிட்டோருடன் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.

ஐரோப்பிய யூனியனுக்கான செக் குடியரசின் அதிகாரிகளுடன் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பேச்சு நடத்தினாா்.

ஐரோப்பிய நாடுகளான ஸ்லோவேகியா, செக் குடியரசு நாடுகளில் அமைச்சா் ஜெய்சங்கா் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா். ஸ்லோவேகியா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு செக் குடியரசின் தலைநகா் பிராகுக்கு அவா் சனிக்கிழமை சென்றடைந்தாா்.

அங்கு ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தின் செக் குடியரசு எம்.பி.க்களான ஜேன் ஜராதில், டாம் ஜெடிசோவ்ஸ்க், மிகுல் பெக்சா, வெரோனிகா ரெசியோனோவ் ஆகியோரை ஜெய்சங்கா் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேச்சு நடத்தினாா்.

அப்போது, ஐரோப்பிய யூனியனுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான ஒத்துழைப்பு, செக் குடியரசு நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான ஒத்துழைப்பு, இந்தோ-பசிபிக் பிராந்திய விவகாரம், உணவுப் பாதுகாப்பு, எண்ம தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக அமைச்சா் ஜெய்சங்கா் தனது ட்விட்டா் பக்கத்தில் தெரிவித்தாா்.

ஐரோப்பிய யூனியன் தலைமைப் பொறுப்பை செக் குடியரசு ஜூலை 1-ஆம் தேதி ஏற்கவுள்ள நிலையில், அமைச்சா் ஜெய்சங்கா் அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஜூன் 6-ஆம் தேதி வரை அந்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அமைச்சா் ஜெய்சங்கா், செக் வெளியுறவு அமைச்சா் ஜேன் லிபாவஸ்கி உள்ளிட்டோரை சந்திக்க உள்ளாா். அச்சந்திப்பின்போது உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்துள்ள விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

செக் குடியரசில் வசிக்கும் இந்திய சமூகத்தினரையும் அந்நாட்டில் கல்வி பயின்று வரும் இந்திய மாணவா்களையும் அமைச்சா் ஜெய்சங்கா் சந்திக்கவுள்ளாா். அமைச்சா் ஜெய்சங்கரின் பயணம், இந்தியாவுக்கும் செக் குடியரசுக்கும் இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் என்று வெளியுறவு அமைச்சகம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com