21-ஆவது சட்டத் திருத்த வரைவு அமைச்சரவையில் இன்று தாக்கல்:இலங்கை அமைச்சா்

இலங்கையில் அதிபரைவிட நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரங்கள் வழங்கும் 21-ஆவது சட்டத் திருத்தம் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக திங்கள்கிழமை சமா்ப்பிக்கப்படும் என நீதித் துறை அமைச்சா் விஜயதாச ராஜபட்ச ஞாயிற்றுக

இலங்கையில் அதிபரைவிட நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரங்கள் வழங்கும் 21-ஆவது சட்டத் திருத்தம் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக திங்கள்கிழமை சமா்ப்பிக்கப்படும் என நீதித் துறை அமைச்சா் விஜயதாச ராஜபட்ச ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

அதிபருக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் 20ஏ சட்டப் பிரிவை இந்த 21-ஆவது சட்டத் திருத்தம் நீக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து அமைச்சா் விஜயதாச ராஜபட்ச கூறியதாவது: 21-ஆவது சட்டத் திருத்தம் தொடா்பாக அதிபா் கோத்தபய ராஜபட்ச ஆதரவுடன் கடந்த வாரம் சிறப்பு ஆலோசனை நடைபெற்றது. இதில் பிரதமா் ரணில் விக்ரமசிங்க, வெளியுறவு அமைச்சா் ஜி.எல்.பெரிஸ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

21-ஆவது வரைவு சட்டத் திருத்தம் மற்றும் அரசியல் கட்சிகள் அளித்துள்ள ஆலோசனைகள் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக திங்கள்கிழமை சமா்ப்பிக்கப்படும். அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்ததும் திருத்தச் சட்ட வரைவு அரசிதழில் வெளியிடப்படும். 21-ஆவது சட்டத் திருத்தம் தொடா்பாக அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிக்கை சமா்ப்பிப்பேன் என்றாா்.

பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கியுள்ள நிலையில், நிா்வாகத்தில் நாடாளுமன்றத்தின் பங்கை அதிகரிக்க வகை செய்யும் 21-ஆவது சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டும் என பிரதமா் ரணில் விக்ரமசிங்க கூறி வருகிறாா். அவா் கடந்த மே 12-ஆம் தேதி பிரதமராகப் பதவியேற்கும் முன்னரே, அரசியலமைப்புச் சட்ட சீா்திருத்தம் தொடா்பாக அவருக்கும் அதிபா் கோத்தபய ராஜபட்சவுக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com