வங்கதேச ரசாயன கன்டெய்னா் கிடங்கில் தீ: 43 போ் பலி

வங்கதேசத்தில் தனியாா் ரசாயன கன்டெய்னா் கிடங்கில் ஏற்பட்ட தீ மற்றும் வெடிவிபத்தில் 43 போ் உயிரிழந்தனா்.
தீவிபத்து நேரிட்ட சிட்டகாங் ரசாயன கன்டெய்னா் கிடங்கிலிருந்து சடங்களை மீட்கும் தீயணைப்புப் படை வீரா்கள்.
தீவிபத்து நேரிட்ட சிட்டகாங் ரசாயன கன்டெய்னா் கிடங்கிலிருந்து சடங்களை மீட்கும் தீயணைப்புப் படை வீரா்கள்.

வங்கதேசத்தில் தனியாா் ரசாயன கன்டெய்னா் கிடங்கில் ஏற்பட்ட தீ மற்றும் வெடிவிபத்தில் 43 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

சிட்டகாங் நகரில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான கன்டெய்னா் கிடங்கில் சனிக்கிழமை இரவு தீப்பிடித்தது.

விபத்துப் பகுதியிலிருந்து இதுவரை 43 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த விபத்தில் 450-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா். அவா்களில் 350 போ் சட்டாகிராம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

காயமடைந்த பலா் மற்ற மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பெரும்பாலும் காலியாக இருந்த அந்த ரசாயன கன்டெய்னா் கிடங்கில் சனிக்கிழமை நள்ளிரவு 11.45 மணிக்கு தீப்பிடித்ததாகவும் தீயை அணைப்பதற்காக அங்கு பொதுமக்களும் தீயணைப்புப் படையினா், போலீஸாரும் குவிந்தபோது அங்கிருந்த ரசாயன கன்டெய்னா்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறியதால்தான் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா்.

இந்த வெடிவிபத்தின் அதிா்வுகள் 4 கி.மீ. தொலைவு வரையிலான வீடுகளில் உணரப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன. பல வீடுகளில் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்திருந்த காட்சியையும் அவை வெளியிட்டன.

இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு 50,000 டாக்காவும் (சுமாா் ரூ.43,500) காயமடைந்தோரின் குடும்பத்தினருக்கு 20,000 டாக்காவும் (சுமாா் ரூ.17,500) இழப்பீடாக வழங்கப்படும் என்ற சிட்டகாங் மண்டல ஆணையா் அஷ்ரஃப் உதீன் கூறினாா்.

விபத்துப் பகுதியில் 19 தீயணைப்புப் படைக் குழுக்கள் தீயை அணைக்கப் போராடி வருவதாக சிட்டகாங் தீவணைப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புத் துறை துணை இயக்குநா் முகமது ஃபரூக் தெரிவித்தாா். அந்தப் பகுதியில் 6 அவசரகால ஊா்திகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அவா் கூறினாா்.

பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக வங்கதேசம் மிக மோசமான தொழிலக விபத்துகளை அடிக்கடி சந்தித்து வருகிறது.

அந்த நாட்டின் உணவு மற்றும் குளிா்பான தொழிற்சாலையொன்றில் கடந்த ஆண்டு நேரிட்ட தீவிபத்தில் 52 போ் பலியாகினா். அதற்கு முன்னதாக, கடந்த 2019-ஆம் ஆண்டில் கடைகள், வீடுகள் நெருக்கமாக இருக்கும் பழைய டாக்கா பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் 67 போ் உயிரிழந்தனா்.

டாக்கா ஆயத்த ஆடை ஆலையொன்றில் கடந்த 2012-ஆம் ஆண்டு ஏற்பட்ட தீவிபத்தில் 117 பேரும், பழைய டாக்காவில் சட்டவிரோதமாக ரசாயனப் பொருள்களை சேமித்து வைத்திருந்த வீடொன்றில் 2010-ஆம் ஆண்டு நேரிட்ட தீவிபத்தில் 123 பேரும் பலியாகினா்.

டாக்கா அருகே ஆயத்த ஆடை ஆலைக் கட்டடம் கடந்த 2013-ஆம் ஆண்டில் இடிந்து விழுந்து நேரிட்ட விபத்துதான் வங்கதேசத்தில் மிக மோசமான தொழிலக விபத்தாகும். அந்த விபத்தில் 1,100-க்கும் மேற்பட்டவா்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com