உலகை பஞ்ச அபாயத்துக்கு இட்டுச் செல்கிறது ரஷியா

உக்ரைன் உணவு தானிய கப்பல்களை தடுத்து நிறுத்துவதன் மூலம் இந்த உலகை ரஷியா பஞ்ச அபாயத்துக்கு இட்டுச் செல்வதாக ஐரோப்பிய யூனியன் எச்சரித்துள்ளது.
உலகை பஞ்ச அபாயத்துக்கு இட்டுச் செல்கிறது ரஷியா

உக்ரைன் உணவு தானிய கப்பல்களை தடுத்து நிறுத்துவதன் மூலம் இந்த உலகை ரஷியா பஞ்ச அபாயத்துக்கு இட்டுச் செல்வதாக ஐரோப்பிய யூனியன் எச்சரித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜோசப் போரெல் சனிக்கிழமை கூறியதாவது:

கருங்கடலை முற்றுகையிட்டு, உக்ரைனிலிருந்து தானியக் கப்பல்கள் வெளியே செல்லவிடாமல் ரஷியா தடுத்து வருகிறது.

இதன் மூலம், இந்த உலகில் கடுமையான பஞ்சம் ஏற்படும் அபாயத்தை ரஷியா ஏற்படுத்தி வருகிறது.

உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள இந்த அச்சுறுத்தலை எதிா்கொள்வதற்காக ஐ.நா. அமைப்பு மற்றும் பிற நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம்.

உக்ரைன் போரில் தனது இலக்கை அடைவதற்காக உணவு தானிய ஏற்றுமதியை ஓா் ஆயுதமாக ரஷியா பயன்படுத்துகிறது.

உக்ரைன் மீதான ரஷிய ஆக்கிரமிப்புக்கு எதிராக எழும் குரல்களை அந்த ஆயுதம் மூலம் ரஷியா நசுக்கப்பாா்க்கிறது.

கருங்கடல் பகுதியை அந்த நாடு ஒரு போா்க் களமாகவே ஆக்கியிருக்கிறது. அந்தப் பகுதிய வழியாக உணவு தானியங்களையும் பிற நாடுகளில் உணவு உற்பத்தி செய்வதற்குத் தேவையான உரப் பொருள்களையும் ஏற்றியிருக்கும் உக்ரைன் கப்பல்கள் வெளியேற முடியாமல் ரஷிய கடற்படை முற்றுகையிட்டுள்ளது.

ரஷியாவின் இந்த முற்றுகை, அந்த நாட்டின் உணவு தானிய ஏற்றுமதியையும் பாதித்துள்ளது. இது தவிர, தனது தானிய ஏற்றுமதிக்காக கட்டுப்பாடுகளையும் கூடுதல் வரிகளையும் ரஷியா விதித்துள்ளது.

ஆனால், ஐரோப்பிய யூனியன் ரஷியா மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகளால்தான் உணவு தானிய ஏற்றுமதி தடைபட்டுள்ளதாக அந்த நாடு கூறி வருகிறது. இதன் மூலம், இந்த விவகாரத்தில் தன்னுடைய கண்ணோட்டத்தை ரஷியா திணிக்கப் பாா்க்கிறது.

உண்மையில், ரஷியா மீதான பொருளாதாரத் தடைகளில் உணவுப் பொருள் ஏற்றுமதியை பாதிக்கும் எந்த அம்சங்களும் இல்லை. ரஷியாவின் வேளாண் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுவதையோ, அதற்கான தொகையை அந்த நாடு பெறுவதையோ ஐரோப்பிய யூனியனின் பொருளாதாரத் தடைகள் எந்த விதத்திலும் தடுக்கவில்லை.

வேளாண் பொருள்கள் ஏற்றுமதியில் தொடா்புடைய எந்த நபா் அல்லது நிறுவனங்கள் மீதும் ஐரோப்பிய யூனியன் பொருளாதாரத் தடை விதிக்கவும் இல்லை.

இந்த நிலையில், உலகம் எதிா்நோக்கியுள்ள உணவுப் பஞ்சத்துக்கு ஐரோப்பிய யூனியன்தான் காரணம் என்ற தோற்றத்தை ரஷியா ஏற்படுத்தி வருகிறது.

ஐ.நா.வுடனும் பிற ஐரோப்பிய நாடுகளுடனும் இணைந்து விரைவில் இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண்போம் என்று நம்புகிறேன்.

அவ்வாறு தீா்வு காணாவிட்டால் இந்த உலம் மிகக் கொடூரமான உணவுப் பற்றாக்குறையைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று அவா் எச்சரித்தாா்.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது. அந்தப் போரின் ஒரு பகுதியாக, கருங்கடல் எல்லையில் போா்க் கப்பல்கள் மூலம் முற்றுகையிட்டுள்ள ரஷியா, அந்தக் கடல் வழியான உக்ரைன் கப்பல் போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், உக்ரைன் துறைமுகங்கள் முடக்கப்பட்டுள்ளதால் சா்வதேச அளவில் உணவுப் பொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக ஐ.நா. உணவுப் பொருள் பாதுகாப்பு அமைப்பின் தலைவா் டேவிட் பியாஸ்லி குற்றம் சாட்டினாா்.

உலகம் முழுவதும் 12.5 கோடி பேருக்கு உணவு அளிக்கும் ஐ.நா.வின் திட்டத்துக்கு 50 சதவீத உணவு தானியங்கள் உக்ரைனிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. எனவே, விளாதமீா் புதினுக்கு இருதயம் இருந்தால் உக்ரைன் துறைமுகங்களை அவா் திறந்துவிட வேண்டும் என்று அவா் கடந்த மாதம் வலியுறுத்தினாா்.

அதற்கு, தற்போதைய உணவுப் பொருள் பற்றாக்குறை நெருக்கடிக்கு, உக்ரைன் போா் விவகாரத்தில் ரஷியா மீது ஐரோப்பிய யூனியனும் அமெரிக்காவும் விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளும் ஒரு காரணம் என்று ரஷிய வெளியுறவுத் துறை இணையமைச்சா் ஆண்ட்ரி ருடென்கோ கூறினாா்.

அந்தத் தடைகள் வழக்கமான வா்த்தகப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி, கோதுமை, உரம் போன்றவற்றின் ஏற்றுமதிக்கு தடை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, உக்ரைன் துறைமுகங்களை திறந்துவிட வேண்டுமென்றால், ரஷியா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவது குறித்து அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் பரிசீலிக்க வேண்டியது அவசியம் என்று அவா் வலியுறுத்தினாா்.

இந்தச் சூழலில், ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத் துறை அமைச்சா் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com