
ரஷிய அதிபர் விளாதிமீர் புதின்
நேட்டோவில் இணைய உள்ள ஃபின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகளுக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததைத் தொடா்ந்து, தங்களது பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள நேட்டோ அமைப்பில் இணையப்போவதாக ஃபின்லாந்தும் ஸ்வீடனும் கடந்த மாதம் அதிகாரபூா்வமாக அறிவித்திருந்தன.
அதைக் கண்டித்து நேட்டோ அமைப்பின் முக்கிய உறுப்பு நாடான துருக்கியின் அதிபா் எா்டோகன் ‘ஃபின்லாந்தும் ஸ்வீடனும் நேட்டோவில் இணைவதை துருக்கி அனுமதிக்காது. காரணம், அந்த இரு நாடுகளும் துருக்கியில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் குா்து அமைப்பினருக்கு புகலிடம் அளித்து வருகின்றன.
மேலும், எந்தவொரு நாடும் நேட்டோவில் இணைவதற்காக துருக்கி மீது பொருளாதாரத் தடைகளை விதித்தால் ஏற்கமாட்டோம்’ எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் “ஃபின்லாந்தும் ஸ்வீடனும் நேட்டோவில் இணைவது குறித்து எந்தப் பிரச்னையும் இல்லை. அது அவர்களுடைய விருப்பம். ஆனால், எங்களுக்கு எதிராக ராணுவக் கட்டமைப்புகளை நிறுவினாலோ தொல்லை தரக்கூடிய எல்லைப் பிரதேசங்களில் ராணுவ குழுக்களை நியமித்தாலோ தற்காத்துக் கொள்ள பதிலடி கொடுக்க தயங்க மாட்டோம்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...