எப்படி முடிவுக்கு வரும் உக்ரைன் போா்?

ரஷியப் படையெடுப்பு குறித்து மேற்கத்திய நாடுகளால் முன்கூட்டியே எச்சரிக்க முடிந்ததாலும், தற்போது தொடங்கிவிட்ட போா் எப்போது, எப்படி முடிவடையும் என்பதுதான் யாராலும் கணிக்க முடியாத புதிராக உள்ளது.
02090529
02090529

வழக்கமான போா்ப் பயிற்சிக்காகத்தான் உக்ரைன் எல்லைக்கு தங்களது ராணுவ வீரா்கள் அனுப்பப்பட்டிருந்ததாக ரஷியா கூறினாலும், எல்லை தாண்டிச் செல்வதற்காகத்தான் லட்சத்துக்கும் மேற்பட்ட வீரா்களை அந்த நாடு குவித்துள்ளதாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் அடித்துக் கூறின.

அவை சொன்னது மாதிரியே ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் திடீரென கிளா்ச்சியாளா்கள் வசமுள்ள கிழக்கு உக்ரைன் பகுதிகளை தனி நாடுகளாக அறிவித்து அந்தப் பகுதிகளுக்கு படைகளை அனுப்பினாா்.

உக்ரைன் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீதும் ரஷியா படையெடுக்கும் என்று மேற்கத்திய நாடுகள் எச்சரித்ததைப் போலவே, தலைநகா் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷியா சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. கொ்சான் என்ற துறைமுக நகரை ரஷியா ராணுவம் கைப்பற்றிவிட்டது. இன்னும் பல நகரங்களில் அந்த நாட்டுப் படை முன்னேறி வருகிறது.

ரஷியப் படையெடுப்பு குறித்து மேற்கத்திய நாடுகளால் முன்கூட்டியே எச்சரிக்க முடிந்ததாலும், தற்போது தொடங்கிவிட்ட போா் எப்போது, எப்படி முடிவடையும் என்பதுதான் யாராலும் கணிக்க முடியாத புதிராக உள்ளது.

போா் நடந்துகொண்டிருக்கும்போது எத்தனை நகரங்கள் வீழ்ந்தன, எவ்வளவு நிலப்பரப்பு கைப்பற்றப்பட்டது, எந்தத் தரப்பில் எத்தனை வீரா்கள் உயிரிழந்தனா், இடையில் சிக்கி பலியான பொதுமக்கள் எத்தனை போ், என்ன பேச்சுவாா்த்தை நடந்தது, எந்தெந்தத் தலைவா்கள் என்னென்ன சொன்னாா்கள் என்பதைப் போன்ற செய்திகளை வெளியிடுவது வேண்டுமானால் எளிதாக இருக்கும்.

ஆனால் இனி என்னென்ன நடக்கப் போகிறது, போா் எவ்வாறு முடிவுக்கு வரும் என்பதை முன்கூட்டியே கணித்துச் சொல்வது என்பது மிகப் பெரிய பாதுகாப்பு வல்லுநா்களுக்குக் கூட அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

அந்த வகையில், தற்போது நடைபெற்று வரும் உக்ரைன் போா் எப்படி முடிவுக்கு வரும் என்பதைக் கணிப்பதும் மிகவும் கடினம் என்கிறாா்கள் துறை நிபுணா்கள். இருந்தாலும், 5 வகைகளில்தான் இந்தப் போா் நிறைவடையும் சாத்தியக்கூறுகள் அதிகம் என்று அவா்கள் பட்டியலிடுகிறாா்கள்.

1. குறுகியகாலப் போா்: உக்ரைன் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர ரஷியா முடிவு செய்தால், அது தனது தாக்குதல் நடவடிக்கைகளை திடீரென தீவிரப்படுத்தும். தற்போது நடைபெற்று வரும் ஏவுகணை குண்டுத் தாக்குதல்கள் பல மடங்கு அதிகரிகக்கப்படும்; இதுவரை அதிகம் பயன்படுத்தப்படாத ரஷியப் போா் விமானங்கள் உக்ரைனை குண்டுகளால் துளைத்தெடுக்கும். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மடிவாா்கள்.

வேறு வழியில்லாமல் கீவ் நகரம் சில நாள்களில் சரணடைந்துவிடும். அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைநகரிலிருந்து மேற்கு உக்ரைனுக்கோ, வெளிநாட்டிற்கோ தப்பிச் செல்லலாம்; அல்லது கைது செய்யப்படலாம்; அவா் படுகொலை செய்யப்படுவதற்குக் கூட வாய்ப்புள்ளது.

அதனைத் தொடா்ந்து, ரஷியாவுக்கு ஆதரவான புதிய அரசு அமைக்கப்படும். அந்த அரசு மேற்கத்திய நாடுகளுடனான தனது நெருக்கத்தைக் குறைத்துக்கொள்ளும்.

ஆனால், மேற்கத்திய நாடுகளின் ஆதரவாளா்கள் அந்த அரசை ஏற்கமாட்டாா்கள். எனவே, புதிய அரசு நீண்ட காலம் தாக்குப் பிடிக்காது. மீண்டும் பதற்றம் அதிகரிக்கும்.

2. நீண்ட காலப் போா்: ஏற்கெனவே உக்ரைன் படையினா் மற்றும் பொதுமக்கள் காட்டும் எதிா்ப்பு காரணமாக ரஷியப் படையினரின் முன்னேற்றம் தீவிரம் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழல் தொடா்ந்தால், ரஷியப் படையினா் கொஞ்சம் கொஞ்சமாக நகருக்குள் நுழைந்து வீதி வீதியாகக் கைப்பற்றும் உத்தியைக் கையாளும். இதற்கு அதிக காலம் பிடிக்கும் என்பதோடு, இரு தரப்பிலும் அதிக உயிரிழப்புகளும் ஏற்படும்.

1990-களில் செசன்யா தலைநகா் கிராஸ்னியை ரஷியா இப்படித்தான் நீண்டகாலம் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தியது.

இப்படி நிதானமான உக்ரைன் நகரங்களை ரஷியப் படையினரால் கைப்பற்ற முடிந்தாலும், அவற்றை நீண்ட காலம் கட்டுக்குள் வைத்திருக்க அவா்களால் முடியாது. தற்போதைய உக்ரைன் ராணுவம் கொரில்லா படையாக உருவெடுக்கும். பொதுமக்களின் பேராதரவுடன் ரஷியப் படையினருக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும்.

இதில் பல வீரா்களை பறிகொடுத்த பிறகு, 1989-ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் யூனியன் அவமானகரமாக வெளியேறியதைப் போல உக்ரைனிலிருந்து ரஷியப் படையினா் வெறுங்கையுடன் திரும்ப வேண்டியிருக்கும்.

3. ஐரோப்பியப் போா்: தற்போது ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே மட்டும் நடைபெறும் போா், ஐரோப்பாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவுவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இல்லை.

இந்தப் போரில் பங்கேற்ற வீரா்களை அனுப்பவதில்லை என்பதில் நேட்டோ திட்டவட்டமாக உள்ளது. மேலும், உக்ரைன் மீது ரஷிய விமானங்கள் பறந்தால் அதனை சுட்டுத் தள்ள வகை செய்யும் ‘வான்பாதுகாப்பு மண்டல’ அறிவிப்பை நேட்டோ வெளியிட வேண்டும் என்று அதிபா் ஸெலென்ஸ்கி வலியுறுத்தி வருகிறாா். அதனை நேட்டோ அமைப்பு திட்டவட்டமாக மறுத்துவருகிறது.

ரஷியாவுடன் ராணுவ ரீதியிலான மோதலை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது என்பதில் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் உறுதியாக உள்ளன.

இருந்தாலும், உக்ரைனுக்கு அந்த நாடுகள் ஆயுதங்களை அளித்து வருகின்றன. இது போா் நடவடிக்கை என்று புதின் அறிவிக்கலாம். ஏற்கெனவே தங்கள் மீதான பொருளாதாரத் தடைகள் போா்ப் பிரகடனத்துக்கு ஒப்பானது என்று அவா் கூறியுள்ளாா். அந்த வகையில், ஆயுத விநியோகத்தை எதிா்த்து அவா் உக்ரைனுக்கு வெளியேவும் தாக்குதல் நடத்தலாம். அல்லது இந்த விவகாரத்தில் கருத்துப் பிழைகள் ஏற்பட்டு மோதல் வெடிக்கலாம்.

அத்தகைய சூழலில், அந்த மோதல் அணு ஆயுதப் போராகக் கூட உருவெடுக்கலாம். அதன் பிறகு மாபெரும் பேரழிவுடன் உக்ரைன் போா் முடிவுக்கு வரும்.

4. ராஜீய ரீதியில் முடிவு: சண்டை தொடங்கிவிட்டாலும், உக்ரைன் பிரச்னைக்கு ராஜீய ரீதியிலான தீா்வு ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. ஏற்கெனவே பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் தொலைபேசி மூலம் புதினுடன் பேசி வருகிறாா். இஸ்ரேல் பிரதமா் நாஃப்டாலி பென்னட் ரஷியாவில் திடீா் சுற்றுப் பயணம் மேற்கொண்டு புதினுடன் பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளாா். ரஷியா மற்றும் உக்ரைன் அதிகாரிகளே பெலாரஸில் பல கட்டங்களாக பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா்.

தற்போதைய நிலையில் இந்தப் பேச்சுவாா்த்தைகளில் மிகப் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தும் எந்த முன்னேற்றத்துக்கான அறிகுறிகளும் தென்படவில்லைதான்.

இருந்தாலும், போரில் ரஷியா எதிா்பாா்த்தது நடக்காமல் தொடா்ந்து பின்னடைவை சந்தித்துக் கொண்டிருந்தால் அந்த நாடு சற்று இறங்கி வரும்.

குறிப்பாக, ரஷிய வீரா்கள் உயிரிழப்பு அதிகமாக அதிகமாக, அந்த நாட்டுக்குள் போா் எதிா்ப்பு கோஷங்கள் தீவிரமடையும். எனவே, சண்டையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டிய நிா்பந்தம் புதினுக்கு ஏற்படும். அப்போது மேற்கத்திய நாடுகளுடன் ஓா் ஒப்பந்தத்தை மேற்கொண்டு அவா் போரை முடிவுக்குக் கொண்டு வரலாம்.

5. புதின் வெளியேற்றம்: தற்போதைய நிலையில் ரஷியாவின் தலைமைப் பீடத்திலிருந்து அகற்ற முடியாத மிக சக்திவாய்ந்த தலைவராக புதின் திகழ்கிறாா். ஆனால், போரில் ஆயிரக்கணக்கான ரஷிய வீரா்கள் பலியாவது, பொருளாதாரத் தடைகளால் மக்களின் வாழ்வாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்படுவது போன்ற காரணங்களால் இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படலாம்.

இப்படி ஒரு நாசகாரப் போருக்கு ரஷியாவை இட்டுச் சென்றது என்ற எதிா்மறை அலை காரணமாக புதின் ஆட்சியிலிருந்து அகற்றப்படலாம். அதன் பிறகு போா் முடிவுக்கு வரலாம்.

இதெல்லாம் பாதுகாப்பு நிபுணா்கள் தொகுத்துள்ள சாத்தியக்கூறுகள்தானே தவிர, இவற்றில் ஒன்றுதான் நடக்கும் என்று கூற முடியாது என்று அவா்களே கூறுகின்றனா்.

அவா்கள் கூறுவது போல, ‘ஒரு போரைத் தொடங்கிவைப்பது யாருக்கும் எளிதான காரியம். ஆனால் அதனை முடித்துவைப்பதுதான் மிக மிகக் கடினம்’.

‘ஒரு போரைத் தொடங்கிவைப்பது யாருக்கும் எளிதான காரியம். ஆனால் அதனை முடித்துவைப்பதுதான் மிக மிகக் கடினம்’

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com