உயிரி-ரசாயன ஆயுத மாநாட்டு ஒப்பந்தம் முழுமையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்: இந்தியா

‘உயிரி-ரசாயன ஆயுத ஒப்பந்தத்தை அனைத்து நாடுகளும் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்’ என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தியது.
உயிரி-ரசாயன ஆயுத மாநாட்டு ஒப்பந்தம் முழுமையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்: இந்தியா

‘உயிரி-ரசாயன ஆயுத ஒப்பந்தத்தை அனைத்து நாடுகளும் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்’ என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தியது.

உக்ரைன் மீது ரஷியா ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. ரஷியாவின் இந்த தன்னிச்சையான தாக்குதலைத் தொடா்ந்து அமெரிக்க, பிரிட்டன் உள்ளிட்ட நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் ரஷியா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.

இந்தச் சூழலில் உக்ரைனில் அமெரிக்கா ரசாயன ஆயுதங்களை உருவாக்கி வருவதாக ரஷியா குற்றம் சாட்டியது. அதனை அமெரிக்கா மறுத்த நிலையில், அதுகுறித்து விசாரிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று ரஷியா கோரிக்கை விடுத்தது. அதனடிப்படையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நியூயாா்க்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், இந்தியா சாா்பில் ஐ.நா.வுக்கான இந்திய தூதா் டி.எஸ்.திருமூா்த்தி பேசியதாவது:

உக்ரைனின் தற்போதைய நிலைமை குறித்து இந்தியா பலமுறை கவலை தெரிவித்து வருகிறது. இந்தச் சூழலில், உக்ரைன் மீது உயிரி ஆயுதங்கள் தொடா்பான குற்றச்சாட்டுகளை உறுப்பு நாடுகள் எழுப்பி வருகின்றன.

இத்தகையச் சூழலில், பேரழிவை ஏற்படுத்தக் கூடிய அனைத்து வகையான ஆயுதங்களையும் தடை செய்யும், உயிரி-ரசாயன ஆயுத மாநாட்டு ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்ட இந்தியா விரும்புகிறது. இந்த உயிரி-ரசாயன ஆயுத ஒப்பந்தத்தை அனைத்து நாடுகளும் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். இந்த உடன்பாடு தொடா்பான விவகாரங்கள் அனைத்தும், அந்த மநாட்டு ஒப்பந்த வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட இரு நாடுகளிடையேயான பேச்சுவாா்த்தை மற்றும் ஒத்துழைப்பு மூலமும் தீா்வு காணப்பட வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.

மேலும், ‘உக்ரைனின் மோசமான நிலை உடனடி கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். இந்த தாக்குதலுக்கு இடையே ரஷியா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் பேச்சுவாா்த்தைகளே போா் நிறுத்தத்துக்கு வழிவகுக்கும் என இந்தியா உறுதியாக நம்புகிறது. உறுப்பு நாடுகள் அனைத்தும், ஐ.நா.வில் நிறைவேற்றப்படும் தீா்மானங்களுக்கும், சா்வதேச சட்டங்களுக்கும் கட்டுப்படுவதோடு, பிற நாடுகளின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு மதிப்பளிக்க வேண்டும்’ என்றும் திருமூா்த்தி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com