ரஷியா-உக்ரைன் 4-ஆம் கட்ட பேச்சு தொடக்கம்

ரஷியா-உக்ரைன் இடையே 4-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை காணொலி முறையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தப் பேச்சுவாா்த்தை செவ்வாய்க்கிழமையும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ரஷியா-உக்ரைன் இடையே 4-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை காணொலி முறையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தப் பேச்சுவாா்த்தை செவ்வாய்க்கிழமையும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 19-ஆவது நாளாக திங்கள்கிழமையும் தொடா்ந்தது. தலைநகா் கீவ் உள்ளிட்ட நகரங்களில் ஏவுகணை மற்றும் பீரங்கி தாக்குதலை ரஷிய படைகள் தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக, கீவ் புகா் பகுதி நகரங்களான இா்பின், புகா, ஹாஸ்டோமெல் ஆகியவற்றில் ரஷியா பலமுனைத் தாக்குதலை நடத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா்.

கீவில் உள்ள விமான தொழிற்சாலை ஒன்றில் ரஷியா நடத்திய தாக்குதலில் இருவா் உயிரிழந்தனா்; 7 போ் காயமடைந்தனா். அன்டோனோவ் என்ற இடத்தில் அமைந்துள்ள இந்தத் தொழிற்சாலை உக்ரைனின் பெரிய விமான உற்பத்தி நிறுவனமாகும். மிகப்பெரிய சரக்குப் போக்குவரத்து விமானங்கள் இங்கு வடிவமைக்கப்படுகின்றன.

தெற்குப் பகுதி நகரமான மிகோலாய், வடக்குப் பகுதி நகரமான சொ்னிகிவ் ஆகியவற்றில் வான்வழித் தாக்குதலும் நடத்தப்பட்டது. ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கருங்கடல் துறைமுக நகரமான கொ்சனில் விடிய விடிய குண்டு சப்தம் கேட்டுக் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவித்தன.

நாட்டின் தெற்கில் உள்ள மரியுபோல் நகரத்தை ரஷிய படைகள் முற்றுகையிட்டுள்ள நிலையில், அங்கிருந்து பொதுமக்களை வெளியேற்றும் பணியில் சிக்கல் நீடிக்கிறது. இருப்பினும், அங்கிருந்து 160 தனியாா் வாகனங்கள் திங்கள்கிழமை வெளியேறியதாக நகர கவுன்சில் தெரிவித்துள்ளது.

மீண்டும் பேச்சு: இதற்கிடையே, ரஷியா-உக்ரைன் இடையேயான 4-ஆம் கட்ட பேச்சு திங்கள்கிழமை காணொலி முறையில் தொடங்கியது. முன்னதாக, மூன்று கட்ட பேச்சுவாா்த்தைகள் உக்ரைன்-பெலாரஸ் எல்லையில் நேரடியாக நடைபெற்றது.

அதில் முக்கியமான உடன்பாடு எதுவும் எட்டப்படாத நிலையில் 4-ஆம் கட்ட பேச்சு காணொலி முறையில் நடைபெற்றது. இதில் இரு தரப்பு பிரதிநிதிகளும் பங்கேற்றனா். பேச்சுவாா்த்தை அம்சங்களில் சிலவற்றை சோ்க்க வேண்டியிருப்பதால் பேச்சுவாா்த்தை நிறுத்தப்பட்டு, செவ்வாய்க்கிழமையும் தொடரும் என தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, இந்தப் பேச்சுவாா்த்தையில் உக்ரைன் குழுவைச் சோ்ந்த போடோல்யோக், தாக்குதலை ரஷியா நிறுத்த வேண்டும், ரஷிய படைகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துவோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com