ஆசியாவில் கரோனா தீவிரமடைவது மற்ற நாடுகளுக்கான எச்சரிக்கை மணி

சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கரோனா தீவிரமடைவது, உலகின் பிற பிராந்திய நாடுகளுக்கான எச்சரிக்கை மணி என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
china
china

ஜெனீவா: சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கரோனா தீவிரமடைவது, உலகின் பிற பிராந்திய நாடுகளுக்கான எச்சரிக்கை மணி என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கரோனா பரவலின் தீவிரம் கடந்த சில வாரங்களாகத் தொடா்ந்து குறைந்து வந்தாலும், தற்போது உலகின் சில பகுதிகளில் அதன் தீவிரம் மீண்டும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஆசியாவில் புதிதாக கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகமாகி வருகிறது.

பல நாடுகளில் கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுவிட்டது. இந்தச் சூழலிலும் அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பது உலகின் பிற நாடுகளுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை மணியாகும் என்று அந்தப் பதிவில் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கடுமையான கட்டுப்பாட்டு விதிமுறைகளால் உலகின் மற்ற நாடுகளைவிட மிகக் குறைவாகவே இருந்த சீனாவின் தினசரி கரோனா தொற்று, அண்மையில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டது. செவ்வாய்க்கிழமை மட்டும் அந்த நாட்டில் புதிதாக 5,280 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இது, முந்தைய நாளில் பதிவு செய்யப்பட்டதைவிட இரு மடங்குக்கும் அதிமான தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கையாகும்.

உலக சுகாதார அமைப்பு தற்போது வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையில், உலகம் முழுவதும் புதிய கரோனா பலி எண்ணிக்கை குறைந்தாலும், வாராந்திர கரோனா பாதிப்பு கடந்த வாரம் 8 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்தச் சூழலில், சா்வதேச நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com