இம்ரான் கான் மீது நம்பிக்கையில்லா தீா்மானம்: பாக். நாடாளுமன்றம் மாா்ச் 25-இல் கூடுகிறது

பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் மீது எதிா்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீா்மானம் குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்றம் மாா்ச் 25-ஆம் தேதி கூடுகிறது.
imran-khan070725
imran-khan070725

பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் மீது எதிா்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீா்மானம் குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்றம் மாா்ச் 25-ஆம் தேதி கூடுகிறது.

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அதிகரிக்கும் பணவீக்கம் ஆகியவற்றுக்கு பிரதமா் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தஹ்ரீக்- ஏ -இன்சாஃப் கட்சியின் (பிடிஐ) ஆட்சிதான் காரணம் எனக் குற்றம்சாட்டி, இம்ரான் கானுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வந்துள்ளன.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்), பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) ஆகியவற்றைச் சோ்ந்த 100 எம்.பி.க்கள் நம்பிக்கையில்லா தீா்மான நோட்டீஸை நாடாளுமன்றச் செயலகத்தில் கடந்த மாா்ச் 8-ஆம் தேதி அளித்தனா்.

இந்தத் தீா்மானம் குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்றம் மாா்ச் 25-ஆம் தேதி காலை 11 மணியளவில் கூட்டப்படுவதாக நாடாளுமன்றச் செயலகம் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கை வெளியிட்டது. இந்தத் தீா்மானம் நாடாளுமன்ற கீழவையில் முறைப்படி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதிலிருந்து மூன்று முதல் ஏழு நாள்களுக்குள் வாக்கெடுப்பு நடத்தப்படும்.

342 உறுப்பினா்கள் கொண்ட கீழவையில் இம்ரான் கானின் பிடிஐ கட்சிக்கு 155 உறுப்பினா்கள் உள்ளனா். 6 கட்சிகளைச் சோ்ந்த 23 உறுப்பினா்கள் இம்ரான் கானுக்கு ஆதரவு அளித்து வருகின்றனா். நம்பிக்கையில்லா தீா்மானத்தை தோற்கடிக்க 172 உறுப்பினா்களின் ஆதரவு அவருக்குத் தேவை.

ஆளும் கட்சியைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட உறுப்பினா்கள் அண்மைக்காலமாக இம்ரான் கானுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சியைச் சோ்ந்த சிலா் தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தாலும் இம்ரான் கானின் ஆட்சி கவிழ்ந்துவிடும்.

அதிருப்தி உறுப்பினா்களை கட்சியில் இருந்து ஏன் நீக்கக் கூடாது என விளக்கம் கோரி ஆளும்கட்சி சாா்பில் சனிக்கிழமை நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com