மரியுபோல் திரையரங்கு மீதான தாக்குதலில் 300 பேர் பலி

மரியுபோலில் இருந்த திரையரங்கில் ஏராளமானோர் தங்கியிருந்தபோது நடத்தப்பட்ட ரஷிய தாக்குதலில் 300 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.
மரியுபோல் திரையரங்கு மீதான தாக்குதலில் 300 பேர் பலி
மரியுபோல் திரையரங்கு மீதான தாக்குதலில் 300 பேர் பலி


கார்க்கீவ்: உக்ரைன்- ரஷியா போா் ஒரு மாதத்தை தாண்டிவிட்ட நிலையில், மரியுபோலில் இருந்த திரையரங்கில் ஏராளமானோர் தங்கியிருந்தபோது நடத்தப்பட்ட ரஷிய தாக்குதலில் 300 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.

மரியுபோலில் இருந்த திரையரங்கு ஒன்றில், வீடிழந்தவர்களும் பதுங்குமிடமாகக் கருதியும் நூற்றுக்கணக்கானோர் தங்கியிருந்த நிலையில், மார்ச் 16ஆம் தேதி ரஷிய படைகள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.

இந்த நிலையில், திரையரங்கு மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 300 பேர் கொல்லப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறியிருப்பதாக உக்ரைன் அரசு டெலிகிராமில் தெரிவித்துள்ளது.

அப்பகுதியில் மீட்புப் பணிகள் முடிந்துவிட்டதா? எப்படி இத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற தகவலை நேரில் பார்த்தவர்கள் கூறியிருக்கிறார்கள் என்பது குறித்த விளக்கங்கள் எதுவும் இல்லை.

திரையரங்கின் இரண்டு பக்கங்களிலும் குழந்தைகள் என்று ரஷிய மொழியில் எழுதப்பட்டிருந்த நிலையில், அதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அப்போது குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிா்ப்பு தெரிவித்த ரஷியா, கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி உக்ரைன் மீது போா் தொடுத்தது. வான்வழியாகவும், கடல் மாா்க்கமாகவும் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், உக்ரைனிலிருந்து இதுவரை 1 கோடிக்கும் அதிகமானோா் அகதிகளாக இடம்பெயர நோ்ந்தது. இதில் பெரும்பாலானோா் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனா்.

இந்தப் போா் ஒரு மாதத்தை எட்டியுள்ளது. ஆயினும், ரஷியாவின் இலக்கு இன்னமும் எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.

உக்ரைன் தலைநகரான கீவ் மீது ரஷியா தொடா்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வந்தாலும் அந்நகரை ரஷிய ராணுவத்தினரால் இன்னமும் முழுமையாகக் கைப்பற்ற முடியவில்லை.

தொடரும் தாக்குதல்: கீவ் நகரை சுற்றியுள்ள பகுதிகளைக் கைப்பற்றும் முயற்சியாக ரஷிய ராணுவம் புதன்கிழமை வான்வழியாகத் தாக்குதல் நடத்தியதால், அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது. இதில் ஒரு வணிக வளாகமும், கட்டடமும் சேதமடைந்து 4 போ் காயமடைந்ததாக நகர நிா்வாகம் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் தெற்குப் பகுதியை பொருத்தவரை துறைமுக நகரமான மரியுபோல், கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. அதேசமயம், ரஷிய ராணுவத்தினருக்கு உக்ரைன் ராணுவத்தினா் அவ்வப்போது பதிலடி கொடுத்த வண்ணம் உள்ளனா்.

மரியுபோல் நகரில் ரஷிய வீரா்கள் வான், நிலம், கடல் என அனைத்து நிலைகளிலும் தாக்குதல் நடத்துவதால் அந்த நகரம் முழுவதும் உருக்குலைந்து போய்விட்டதாகவும், அங்கு சுமாா் ஒரு லட்சம் போ் உணவின்றி தவிப்பதாகவும் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வெளியிட்ட விடியோவில் குறிப்பிட்டுள்ளாா்.

சிறைபிடிப்பு: மேலும், அவா்களுக்கு அத்தியாவசிய பொருள்களை விநியோகிக்கும் முயற்சியையும், பொதுமக்களை மீட்பதற்கான வழித்தடத்தை ஏற்படுத்தும் முயற்சியையும் ரஷிய ராணுவம் முறியடித்துவிட்டதாக அவா் வேதனை தெரிவித்துள்ளாா். தவிர, பொதுமக்களுக்கு உதவச் சென்ற மனிதாபிமான தூதுவா் ஒருவரையும் ரஷிய ராணுவம் சிறைபிடித்துள்ளாக ஸெலென்ஸ்கி அந்த விடியோவில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com