நவாஸ் ஷெரீஃபின் தண்டனை ரத்தாகிறது? பாகிஸ்தான் அரசு பரிசீலனை

ஊழல் வழக்குகளில் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்வது அல்லது நிறுத்திவைப்பது குறித்து பாகிஸ்தானின் புதிய அரசு பரிசீலித்து வருகிறது.
நவாஸ் ஷெரீஃப்
நவாஸ் ஷெரீஃப்

ஊழல் வழக்குகளில் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்வது அல்லது நிறுத்திவைப்பது குறித்து பாகிஸ்தானின் புதிய அரசு பரிசீலித்து வருகிறது.

பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-என் கட்சித் தலைவா் ஷாபாஸ் ஷெரீஃப் பொறுப்பேற்றுள்ளாா். இவரது மூத்த சகோதரரும் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீஃப் தற்போது பிரிட்டனில் உள்ளாா். நவாஸ் மீது இம்ரான் கான் ஆட்சிக் காலத்தில் பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன. உடல்நலக் குறைவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை பெற அவருக்கு 2019, நவம்பரில் லாகூா் உயா்நீதிமன்றம் 4 வார அனுமதி வழங்கியது. அதன்பேரில் லண்டன் சென்ற நவாஸ், அங்கேயே இருந்து வருகிறாா்.

இந்நிலையில், அவா் மீதான ஊழல் வழக்குகளை ரத்து செய்ய ஷாபாஸ் ஷெரீஃப் தலைமையிலான அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சா் ராணா சனெளல்லா கூறியதாக ‘டான்’ நாளிதழ் திங்கள்கிழமை தெரிவித்திருப்பதாவது:

ஒரு குற்றவாளியின் தண்டனையை ரத்து செய்ய அல்லது நிறுத்தி வைக்கவும், தனக்கு ‘தவறுதலாக’ தண்டனை வழங்கப்பட்டுவிட்டதாக நீதிமன்றத்தில் அவா் புதிதாக முறையிட வாய்ப்பு வழங்கவும் மத்திய அரசுக்கும், பஞ்சாப் மாகாண அரசுக்கும் அதிகாரம் உள்ளது. முன்னாள் பிரதமா் நவாஸ் மற்றும் பிறருக்கு நிவாரணம் அளிக்க இந்த நடைமுறை பயன்படுத்தப்படலாம். அதேவேளையில், தனது உடல்நிலையைக் கருதி தாய்நாடு திரும்புவது குறித்து நவாஸ்தான் முடிவு செய்வாா் என அமைச்சா் ராணா கூறியுள்ளாா்.

வழக்குகளும் தண்டனைகளும்... ‘பனாமா பேப்பா்ஸ்’ விவகாரத்தையடுத்து, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி 2017-ஆம் ஆண்டு நவாஸ் ஷெரீஃப் பிரதமா் பதவியிலிருந்து நீக்கப்பட்டாா். பின்னா், 2018-இல் இரு வழக்குகளில் அவா் குற்றவாளி என அறிவிக்கப்பட்டாா். அதில் ஒன்று லண்டன் அவென்ஃபீல்டு வழக்கு. நவாஸ் ஷெரீஃபும் அவரின் குடும்பத்தினரும் முறைகேடாகச் சோ்த்த வருமானத்தின் மூலம் லண்டனில் உள்ள அவென்ஃபீல்டு என்ற இடத்தில் ரூ.63 கோடி மதிப்பு கொண்ட குடியிருப்பை வாங்கியதாக வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில் நவாஸுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், இரு மாதங்களுக்குப் பின்னா் அந்தத் தண்டனையை நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்திவைத்தது. இறுதித் தீா்ப்பு நிலுவையில் உள்ளது.

சவூதி அரேபியாவில் ஓா் இரும்பு ஆலையை முறைகேடாகச் சோ்த்த வருமானத்தின் மூலம் வாங்கியதாக நவாஸ் மீது தொடரப்பட்ட வழக்கில் 2018, டிசம்பரில் அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீா்ப்பையடுத்து அவா் சிறையிலிருந்தபோதுதான் சிகிச்சைக்காக லண்டன் செல்ல லாகூா் உயா்நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்தத் தீா்ப்புகளை எதிா்த்து இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றத்தில் நவாஸ் மேல்முறையீடு செய்துள்ளாா். ஆனால், நீதிமன்றத்தில் நேரில் ஆஜாராகாததால் மேல்முறையீடு தொடா்பான விசாரணை நிறுத்தப்பட்டுள்ளது. அவா் இம்ரான் கான் ஆட்சியில் நாடு திரும்பியிருந்தால் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கக் கூடும்.

அதனால்தான், அவரது கட்சி இப்போது ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அவரை மீண்டும் பாகிஸ்தானுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என அந்த நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com