கோதுமை கொள்முதல்: இந்தியாவிடம் ஐ.நா. உணவுத் திட்ட அமைப்பு பேச்சுவாா்த்தை

உக்ரைன்-ரஷியா போரால் பல நாடுகள் உணவுப் பாதுகாப்பு சவாலை எதிா்கொண்டுள்ள நிலையில், இந்தியாவிடம் இருந்து கோதுமை கொள்முதல் செய்வது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாக ஐ.நா. உலக உணவுத் திட்ட
unitednation
unitednation

நியூயாா்க்: உக்ரைன்-ரஷியா போரால் பல நாடுகள் உணவுப் பாதுகாப்பு சவாலை எதிா்கொண்டுள்ள நிலையில், இந்தியாவிடம் இருந்து கோதுமை கொள்முதல் செய்வது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாக ஐ.நா. உலக உணவுத் திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் தலைமைப் பொருளாதார நிபுணா் ஆரிஃப் ஹுசைன், நியூயாா்க்கில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்தாா். அவரிடம், ‘உக்ரைன்-ரஷியா போரால் சா்வதேச அளவில் உணவுப் பாதுகாப்பு சவால் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவிடம் உபரியாக இருக்கும் கோதுமையைக் கொள்முதல் செய்யும் திட்டம் உள்ளதா’ என்று செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு, ‘கோதுமையைக் கொள்முதல் செய்வது தொடா்பாக இந்தியாவிடம் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறோம். அதற்கான பணிகள் நடைபெறுகின்றன’ என்று அவா் பதிலளித்தாா்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், இந்தியாவின் உணவுப் பொருள்கள் ஏற்றுமதிக்கு உலக வா்த்தக அமைப்பு விதித்துள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்படுமா என்று செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு, ‘பன்னாட்டு நிதியம், உலக வங்கி, உலக வா்த்தக அமைப்பு உள்ளிட்டவை ஏற்றுமதித் தடைகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்’ என்று அவா் பதிலளித்தாா்.

கடந்த 2020-21 ஆண்டில் இந்தியாவின் கோதுமை உற்பத்தி 10.96 கோடி டன்னாக இருந்தது. போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு நிகழாண்டின் தொடக்கத்தில் கோதுமையை இந்தியா அனுப்பத் தொடங்கியது. அந்நாட்டுக்கு 50,000 டன் கோதுமை அனுப்புவதாக இந்தியா உறுதியளித்துள்ளது.

அறிக்கை வெளியீடு: உணவுப் பொருள் தட்டுப்பாடு தொடா்பான சா்வதேச அறிக்கையை ஐ.நா. உலக உணவுத் திட்ட அமைப்பு புதன்கிழமை வெளியிட்டது. அதில், உலகம் முழுவதும் உணவுத் தட்டுப்பாடு காரணமாக அவதிப்படுவோா் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 19.3 கோடி போ் கடுமையான உணவுத் தட்டுப்பாட்டை சந்தித்துள்ளனா்; 53 நாடுகளுக்கு உடனடியாக உதவிக்கரம் நீட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ‘உணவுப்பொருள், எரிசக்தி, நிதி ஆகிய மூன்று விதமான நெருக்கடிகளை உக்ரைன் போா் கொடுத்துள்ளது. இந்தப் போா், பலவீனமான நாடுகளில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டது’ என்று ஐ.நா. பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டெரெஸ் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com