இந்தியாவுக்கு வலிமையான எதிர்க்கட்சி அவசியம்

இந்தியாவில் ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு வலிமையான எதிர்க்கட்சி அவசியம் என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனரும் ஆன்மிக குருவுமான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்தார். 
இந்தியாவுக்கு வலிமையான எதிர்க்கட்சி அவசியம்

வாஷிங்டன்: இந்தியாவில் ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு வலிமையான எதிர்க்கட்சி அவசியம் என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனரும் ஆன்மிக குருவுமான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்தார். 

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் இரண்டுமாத ஆன்மிகப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு பல்வேறு நகரங்களுக்குச் செல்லும் அவர், அமைதியான வாழ்க்கையையும், கரோனா தொற்றுக் காலத்துக்குப் பிந்தைய உலகில் மனஅமைதிக்கான தேவையையும்  மக்களுக்கு எடுத்துரைத்து வருகிறார். 

அவர் செவ்வாய்க்கிழமை  அமெரிக்க எம்.பி.க்கள் குழுவைச் சந்தித்து, அவர்களுடன் மனநலப் பயிற்சி மற்றும் மன ஆரோக்கியம் பற்றி விவாதித்தார். அதைத் தொடர்ந்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: 

இந்தியாவுக்கு வலிமையான, ஆக்கபூர்வமான எதிர்க்கட்சி அவசியம். தற்போது இந்தியாவில் எதிர்க்கட்சி பலவீனமாக உள்ளது. எதிர்க்கட்சியில் சிறந்த தலைவர்கள் இல்லாததால் இந்தியாவில் ஜனநாயகம் இல்லாததுபோலவும் சர்வாதிகாரமாகவும்  தோற்றமளிக்கலாம். ஆனால் அது உண்மையல்ல.

இந்தியாவில் நடைபெறும் தேர்தல்கள் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெறுகின்றன. எந்த அரசியல் கட்சியும் அரசு நிர்வாக அமைப்புகளில் தலையிடுவதில்லை என்பதற்கு மேற்குவங்கத் தேர்தலை எடுத்துக்காட்டாகக் கூறலாம். அத்துடன் நீதித்துறையும் இந்தியாவில் வலுவாக உள்ளது. இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடு. இதில் மக்களே உச்ச அதிகாரம் படைத்தவர்கள். 

இந்தியா மீது தவறான புரிதல்: இந்திய மக்களின் மரபணுக்களில் அமைதியும் அகிம்சையும் இயல்பாகவே உள்ளன. 

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்த விவகாரத்தில் மேற்கத்திய நாடுகள் இந்தியாவைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளன.  ரஷியாவின் ஆக்கிரமிப்புக்கு இந்தியா ஆதரவளிப்பதாக அவை கருதுகின்றன. ஆனால் அது தவறு.

இந்தியாவின் நிலைப்பாடு அமைதிதான் என்பதையும் போர் அல்ல என்பதையும் உலக நாடுகளுக்கு முதலில் நாம் தெளிவுபடுத்த வேண்டும். இந்தியப்  பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் விவகாரத்தில் போர் வேண்டாம் என்றும், அமைதியைக் கையாளுமாறும் ரஷியாவிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளார். 

கரோனா தொற்று காலத்துக்குப் பிறகு மக்களிடையே அதிக மன அழுத்தங்கள் உருவாகியுள்ளன. அவர்களிடையே மன அமைதியையும் நிம்மதியையும் நிலைநாட்ட வேண்டும். அதனையே நான் செய்து வருகிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com