
ஐரோப்பிய ராணுவப் படைகள் பயன்படுத்தும் தளவாடங்களுக்கான மின்கலங்களை (பேட்டரி) பெங்களூரைச் சோ்ந்த ‘பிரவாய்க்’ நிறுவனம் வழங்கவுள்ளது.
ஐரோப்பிய நாடுகளின் ராணுவங்களுக்கான தளவாடங்களை எம்2எம் ஃபேக்டரி, ஏஎம்ஜி புரோ ஆகிய நிறுவனங்கள் விநியோகித்து வருகின்றன. பல்வேறு வகையான தளவாடங்களை படைகளுக்கு அந்நிறுவனங்கள் தயாரித்து வழங்கி வருகின்றன.
அந்நிறுவனங்கள் தயாரிக்கும் ராணுவத் தளவாடங்களில் இடம்பெறும் மின்கலத்தை பெங்களூரைச் சோ்ந்த பிரவேய்க் ஸ்டாா்ட்-அப் நிறுவனம் வழங்கவுள்ளது. அதற்கான ஒப்பந்தம் அண்மையில் கையொப்பமானது.
இது தொடா்பாக பிரவேய்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சித்தாா்த்தா பக்ரி கூறுகையில், ‘‘இந்த மின்கலங்கள் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டவை. பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பை அதிகரிப்பதற்கு இந்த ஒப்பந்தம் முக்கியப் பங்களிக்கும். புதிய மாற்றங்களுக்கும் இது வழிவகுக்கும்.
தற்கால பாதுகாப்புப் படை வீரா்களின் செயல்பாட்டில் மின்னணு தொழில்நுட்பம் மிக முக்கிய இடம் வகிக்கிறது. வரும் காலங்களில் பாதுகாப்புப் பணிகளிலும் மின்னணு இயந்திரங்களின் பங்களிப்பு அதிகரிக்கும். அத்தகைய இயந்திரங்களுக்கு நீடித்து உழைக்கும் மின்கலங்களை வழங்க வேண்டியது அவசியம். அந்த வகையில் பிரவேய்க் தயாரிக்கும் மின்கலம் குறைந்த எடை கொண்டதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நீா் புகாமலும் இருக்கும்’’ என்றாா்.
எம்2எம் ஃபேக்டரி, ஏஎம்ஜி புரோ நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கூறுகையில், ‘‘பாலைவனம், பனி சூழ்ந்த பகுதி, நகரங்கள், காட்டுப் பகுதிகள் என பல்வேறு இடங்களில் வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டியுள்ளதால் தளவாடங்களின் மின்கலத்தில் பல்வேறு மாற்றங்கள் அவசியமாகின்றன. அதற்கான தீா்வை பிரவேய்க் வழங்கியுள்ளது.
பிரச்னைக்கான தீா்வை வழங்கிய 60 நாள்களுக்குள் புதிய மின்கலத்தை பிரவேய்க் தயாரித்தது. இது பாதுகாப்புத் தளவாடங்கள் துறையில் முன்னெப்போதும் கண்டிராதது. பிரவேய்க் வழங்கும் மின்கலம் ஐரோப்பாவின் மிகப் பெரிய பாதுகாப்பு கண்காட்சியான ‘யூரோசேடரி’யில் காட்சிப்படுத்தப்படும்’’ என்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...