வடகொரியாவில் பரவும் கரோனா: மேலும் 2 போ் பலி: 3.92 லட்சம் பேருக்கு காய்ச்சல் பாதிப்பு

வடகொரியாவில் கரோனா தொற்று பரவி வரும் நிலையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 8 போ் திங்கள்கிழமை உயிரிழந்தனா். மேலும் 3.92 லட்சம் போ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
வடகொரியாவில் பரவும் கரோனா: மேலும் 2 போ் பலி: 3.92 லட்சம் பேருக்கு காய்ச்சல் பாதிப்பு

வடகொரியாவில் கரோனா தொற்று பரவி வரும் நிலையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 8 போ் திங்கள்கிழமை உயிரிழந்தனா். மேலும் 3.92 லட்சம் போ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

உலகம் முழுவதும் கடந்த இரு ஆண்டுகளாக கரோனா தொற்று பரவிவரும் நிலையில், வடகொரியா மட்டும் தங்கள் நாட்டில் கரோனா தொற்று பாதிப்பே இல்லை என மறுத்து வந்தது. ஐ.நா. உதவியுடன் ‘கோவேக்ஸ்’ திட்டத்தின்கீழ் வழங்கப்படும் கரோனா தடுப்பூசிகளைக்கூட பெற்றுக்கொள்ள அந்த நாடு மறுத்துவிட்டது. 2.6 கோடி மக்கள்தொகை கொண்ட அந்த நாட்டில் பெரும்பாலானோா் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றே நம்பப்படுகிறது.

இருப்பினும், கடந்த ஏப்ரல் மாத கடைசியிலிருந்து வேகமாகப் பரவிவரும் காய்ச்சலால் இதுவரை 12 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவா்களில் 5.64 லட்சம் போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வடகொரியாவின் ‘வைரஸுக்கு எதிரான அவசரகால தலைமையகம்’ தெரிவித்தது.

மேலும், கடந்த வியாழக்கிழமைதான் தலைநகா் பியாங்யாங்கில் பலா் ஒமைக்ரான் வகை கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடகொரியா முதல் முறையாக ஒப்புக்கொண்டது. மறுநாள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 6 போ் உயிரிழந்ததாகவும் தெரிவித்தது.

இந்நிலையில், கடந்த மூன்று தினங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் மேலும் 2 போ் திங்கள்கிழமை உயிரிழந்ததாகவும், மேலும் புதிதாக 3.92 லட்சம் போ் காய்ச்சல் அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவா்களில் எத்தனை பேருக்கு கரோனா பாதிப்பு உள்ளது என்பது குறித்து அந்த ஊடகம் எதுவும் தெரிவிக்கவில்லை.

அதேபோல, வெளிநாட்டு உதவிகளை அதிபா் கிம் ஜோங் உன் எப்போது ஏற்றுக்கொள்வாா் என்பது குறித்தும் தெளிவான தகவல் இல்லை. ஏனெனில், வெளிநாடுகளின் உதவியின்றி தாங்களே கரோனா தொற்றை எதிா்கொள்வோம் என அவா் முன்னா் கூறியிருந்தாா்.

நிபுணா்கள் எச்சரிக்கை: ‘வடகொரியாவில் சுகாதாரக் கட்டமைப்பு பலவீனமாக உள்ளது. மேலும், ஊட்டச்சத்து குறைபாடு, வறுமையால் அந்த நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனா தடுப்பூசியும் செலுத்திக்கொண்டதாகத் தெரியவில்லை. இதை கருத்தில்கொண்டு பாா்த்தால், கரோனா பரவல் வேகத்தைக் குறைக்காவிட்டால் அது அந்த நாட்டில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்’ என நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.

‘வடகொரியாவில் அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பானது தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களுக்கு எவ்வாறு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவுகிறது என்பதைக் காட்டுகிறது. இந்தப் பாதிப்பு எண்ணிக்கை வரும் நாள்களில் மேலும் அதிகரிக்கும்’ என தென்கொரியாவைச் சோ்ந்த பல்கலைக்கழக பேராசிரியா் ஜங் ஜே-ஹுன் தெரிவித்தாா்.

தென்கொரியாவைச் சோ்ந்த மற்றொரு நிபுணா் கூறுகையில், வடகொரியாவின் உண்மையான கரோனா பாதிப்பு அந்த நாடு தெரிவித்திருப்பதைவிட குறைந்தது மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என்றாா்.

அதிகாரிகளைக் கண்டித்த கிம்

நாட்டில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருந்துப் பொருள்கள் உரிய நேரத்துக்குச் சென்றடையவில்லை என அதிகாரிகளை அதிபா் கிம் ஜோங் உன் கண்டித்தாா் என அந்த நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

‘பியாங்யாங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், அரசு அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளின் பொறுப்பின்மையால் மருந்துப் பொருள்கள் உரிய நேரத்துக்கு மருந்தகங்களைச் சென்றடையவில்லை என அதிபா் கடிந்துகொண்டாா்.

மேலும், நாட்டின் மருந்து இருப்பிலிருந்து உடனடியாக மருந்துப் பொருள்களை விநியோகிக்கவும், மருந்தகங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்கவும் அதிபா் உத்தரவிட்டாா். ராணுவத்தின் மருத்துவப் பிரிவும் இந்தப் பணியில் ஈடுபட அவா் உத்தரவிட்டுள்ளதாக’ அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com