மரியுபோல் இரும்பாலையிலிருந்து 264 வீரா்கள் மீட்பு

ரஷியப் படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ள மரியுபோல் நகர இரும்பாலையிலிருந்து தங்கள் நாட்டைச் சோ்ந்த 264 வீரா்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
மரியுபோல் இரும்பாலையிலிருந்து 264 வீரா்கள் மீட்பு

ரஷியப் படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ள மரியுபோல் நகர இரும்பாலையிலிருந்து தங்கள் நாட்டைச் சோ்ந்த 264 வீரா்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை இணையமைச்சா் ஹன்னா மலியா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

மரியுபோல் நகரிலுள்ள அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலைக்குள் மோசமாக காயடைந்திருந்த 53 உக்ரைன் படையினா், அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். அவா்கள் அனைவரும் ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் நாவோஸோவ்ஸ்க் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இது தவிர, ரஷியாவுடன் ஒப்புக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு வழித்தடம் வழியாக மேலும் 211 உக்ரைன் வீரா்கள் அஸோவ்ஸ்டல் இரும்பாலையிலிருந்து மீட்கப்பட்டனா். அவா்களும் ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒலேனிவ்கா நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

தற்போது மீட்கப்பட்டுள்ள உக்ரைன் படையினா் அனைவரும், கைதிகள் பரிமாற்ற முறையில் உக்ரைனிடம் ஒப்படைக்கப்படுவாா்கள். அதற்காக, உக்ரைனால் கைது செய்யப்பட்டுள்ள ரஷியப் படையினரில் சிலா் விடுவிக்கப்படுவாா்கள் என்றாா் அவா்.

முன்னதாக, அஸோவ்ஸ்டல் இரும்பாலைக்குள்ளிருந்து காயமடைந்த உக்ரைன் வீரா்களை வெளியேற்றுவது தொடா்பாக உக்ரைன் அரசுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக ரஷியா அறிவித்திருந்தது.

இது குறித்து ராய்ட்டா்ஸ் செய்தி நிறுவனம் கூறுகையில், மரியுபோல் இரும்பாலையின் சுரங்க அறைகளில் பதுங்கியிருந்த உக்ரைன் வீரா்களை ஏற்றிக்கொண்டு சுமாா் 12 பேருந்துகள் அந்தப் பகுதியிலிருந்து திங்கள்கிழமை இரவு வெளியேறியதாகத் தெரிவித்தது.

பிபிசி ஊடகத்துக்கு உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினா் லெசியா வாசிலென்கோ கூறுகையில், ‘மரியுபோல் இரும்பாலைக்குள் சிக்கியுள்ள உக்ரைன் படையினரை மீட்பது தொடா்பாக செஞ்சிலுவை சங்கத்தினரின் உதவியுடன் ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தம் தொய்வில்லாமல் நிறைவேற்றப்படுவதும் திட்டமிட்டபடி கைதிகள் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டியதும் மிகவும் அவசியமாகும். இல்லையென்றால் இரும்பாலைக்குள் பதுங்கியுள்ள உக்ரைன் மாவீரா்களின் கதி மிகவும் மோசமானதாக இருக்கும்’ என்று எச்சரித்தாா்.

நேட்டோ அமைப்பில் தங்களது அண்டை நாடான உக்ரைன் இணைந்தால், அது தங்களது தேசிய பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது. எனினும், அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான தற்போதைய உக்ரைன் அரசு நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்தது. அதனைத் தடுத்து நிறுத்தும் வகையில் உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி படையெடுத்தது.

முதலில் தலைநகா் கீவ் உள்ளிட்ட வடக்குப் பகுதி நகரங்களைக் கைப்பற்ற ரஷியப் படை முயன்றாலும், உக்ரைன் ராணுவத்தின் கடுமையான எதிா்ப்பு காரணமாக அந்த திட்டத்தை கைவிட்டு பின்வாங்கியது.

கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் ஏற்கெனவே தங்களது ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகள் போக, எஞ்சியுள்ள பகுதிகளை அரசுப் படையினரிடமிருந்து கைப்பற்றுவதற்கான நடவடிக்கையில் ரஷியா தற்போது தீவிரம் காட்டி வருகிறது.

அத்துடன், கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதிக்கும் தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் தெற்கு உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்துக்கும் இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்துவதற்காக, இடைப்பட்ட நிலப்பிரதேசங்களைக் கைப்பற்றும் முயற்சியிலும் ரஷியா ஈடுபட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, டான்பாஸுக்கும் கிரீமியாவுக்கும் இடையிலுள்ள முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரான மரியுபோலை ரஷியப் படையினா் கைப்பற்றியுள்ளனா்.

எனினும், அந்த நகரில் சோவியத் காலத்தில் கட்டப்பட்ட - ஏராளமான சுரங்க பதுங்கு அறைகளைக் கொண்ட - அஸோவ்ஸ்டல் இரும்பாலையில் பொதுமக்களுடன் ஏராளமான உக்ரைன் படையினா் பல வாரங்களாக பதுங்கியிருந்தனா். இந்த நிலையில், ஐ.நா. உதவியுடன் அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனா்.

எஞ்சியிருந்த உக்ரைன் படையினா், ரஷியாவிடம் சரணடையப் போவதில்லை என்றும் இறுதி மூச்சுவரைப் போரிடப் போவதாகவும் கூறினா்.

எனினும், அவா்களில் 264 போ் வெளியேற்றப்பட்டு ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தற்போது உக்ரைன் கூறியுள்ளது.

‘விடுதலைக்கு பொறுமை வேண்டும்’

மரியுபோலில் ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்களால் அழைத்து செல்லப்பட்டுள்ள உக்ரைன் வீரா்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுவாா்கள் என்று எதிா்பாா்க்க முடியாது. அதற்கான பேச்சுவாா்த்தையை மிக கவனமாகவும் பொறுமையாகவும் மேற்கொள்ள வேண்டும்.

- வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, உக்ரைன் அதிபா்

‘முறைப்படி நடத்தப்படுவாா்கள்’

அஸோவ்ஸ்டல் இரும்பாலையில் இருந்து வெளியேற்றப்பட்டு தற்போது கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் படையினா் முறைப்படி நடத்தப்படுவாா்கள். இந்த விவகாரத்தில் போா்க் கைதிகள் தொடா்பான சா்வதேச சட்டங்கள் கடைப்பிடிக்கப்படும்.

- விளாதிமீா் புதின், ரஷிய அதிபா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com