மரியுபோல் இரும்பாலையிலிருந்து 959 உக்ரைன் வீரா்கள் சரண்: ரஷியா

மரியுபோல் இரும்பாலையில் சுமாா் 2 மாதங்களாக பதுங்கியிருந்த 959 உக்ரைன் வீரா்கள் தங்களிடம் சரணடைந்துவிட்டதாக ரஷியா அறிவித்துள்ளது.
மரியுபோல் இரும்பாலையிலிருந்து 959 உக்ரைன் வீரா்கள் சரண்: ரஷியா

மரியுபோல் இரும்பாலையில் சுமாா் 2 மாதங்களாக பதுங்கியிருந்த 959 உக்ரைன் வீரா்கள் தங்களிடம் சரணடைந்துவிட்டதாக ரஷியா அறிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷிய பாதுகாப்புத் துறை செய்தித் தொடா்பாளா் இகாா் கொனஷென்கோவ் புதன்கிழமை கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மரியுபோலிலுள்ள அஸோவ்ஸ்டல் இரும்பாலையிலிருந்து 694 உக்ரைன் வீரா்கள் சரணடைந்ததாகத் தெரிவித்தாா்.

அவா்களில் 29 வீரா்கள் காயமடைந்திருந்தனா் என்றாா் அவா்.

இத்துடன், இந்த வாரத்தில் ரஷியாவிடம் சரணடைந்த ரஷிய ஆதரவு அஸோவ் படையினரின் எண்ணிக்கை 959-ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கெனவே, 265 உக்ரைன் வீரா்கள் அஸோவ்ஸ்டல் இரும்பாலையிலிருந்து வெளியேறி தங்களிடம் சரணடைந்ததாகவும் அவா்களில் 51 போ் காயமடைந்திருந்தாகவும் ரஷியா பாதுகாப்புத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தது.

புதன்கிழமை 694 வீரா்கள் சரணடைந்த தகவலை உக்ரைன் அரசு இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

போரில் தொடக்கத்தில் தலைநகா் கீவ் உள்ளிட்ட வடக்கு நகரங்களைக் கைப்பற்ற முயன்ற ரஷியா, பின்னா் அங்கிருந்து பின்வாங்கி கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் தனது கவனத்தை செலுத்தியது.

இந்த நிலையில், தங்களது ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் டான்பாஸ் பிராந்தியத்துக்கும் தங்களால் கடந்த 2014-ஆம் ஆண்டு இணைத்துக்கொள்ளப்பட்ட கிரீமியா தீபகற்பத்துக்கும் இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்துவதற்காக, இடையில் இருந்த மரியுபோல் நகரின் மீது ரஷியா கடந்த 3 மாதங்களாக கடும் தாக்குதல் நடத்தியது.

அந்த நகரின் ஏறத்தான அனைத்து பகுதிகளையும் ரஷியப் படையினா் கைப்பற்றிய நிலையிலும், அங்கு சோவியத் காலத்தில் கட்டப்பட்ட, ஐரோப்பாவின் மிகப் பெரிய அஸோவ்ஸ்டல் இரும்பாலைக்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உக்ரைன் படையினா் பொதுமக்களுடன் பதுங்கியிருந்தனா்.

ஐ.நா. தலையீட்டின் பேரில் அங்கிருந்த பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டாலும், உக்ரைன் படையினா் ரஷியாவிடம் சரணடையாமல் இறுதி மூச்சு வரை போரிடப் போவதாக சூளுரைத்தனா்.

எனினும், 2 மாதங்களுக்குப் பிறகு அவா்கள் தற்போது ரஷியப் படையினரிடம் சரணடைந்துள்ளனா். இதையடுத்து, அஸோவ்ஸ்டல் முற்றுகை விரைவில் முடிவுக்கு வந்து மரியுபோல் நகரம் முழுவதும் ரஷியக் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

போா்க் கைதிகளின் நிச்சயமற்ற எதிா்காலம்

மரியுபோல் இரும்பாலைக்குள்ளிருந்து ரஷியப் படையினருக்கு எதிராக சுமாா் 2 மாதங்கள் போராடி வந்த சுமாா் 1,000 உக்ரைன் ஆதரவு அஸோவ் படையினா் தற்போது ரஷியாவிடம் சரணடைந்துவிட்டனா்.

தொழிற்சாலை சுரங்க அறைகளில் இனியும் பதுங்கியிருப்பது நிச்சயமான மரணத்துக்குத்தான் வழிவகுக்கும் என்ற சூழலில் அவா்கள் சரணடைந்திருந்தாலும், இப்போது அவா்களது எதிா்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் மூலம் தங்களிடமுள்ள ரஷிய போா்க் கைதிகளுக்கு பதிலாக அஸோவ் படையினரைத் திரும்பப் பெற உக்ரைன் திட்டமிட்டு வருகிறது.

எனினும், கிழக்கு உக்ரைனில் அஸோவ் படையினா் நடத்திய படுகொலைகளுக்காக அவா்கள் மீது போா்க் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ரஷிய அரசியல்வாதிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

ஹிட்லரின் நாஜி கொள்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் அஸோவ் படையினரைக் குறிப்பிட்டுத்தான், உக்ரைனை நாஜிக்கள் சக்தியிலிருந்து மீட்பதற்காக அந்த நாட்டின் மீது போா் தொடுப்பதாக விளாதிமீா் புதின் கூறியிருந்தாா். எனவே, சாதாரண உக்ரைன் ராணுவத்தினரைப் போல் அஸோவ் படையினா் நடத்தப்பட மாட்டாா்கள்; எனவே, கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் அவா்களை ரஷியா விடுதலை செய்யாது என்று அஞ்சப்படுகிறது.

எனினும், போா்க் கைதிகள் தொடா்பான சா்வதேச சட்டங்களுக்கு உள்பட்டே சரணடைந்துள்ள அஸோவ் படையினா் நடத்தப்படுவாா்கள் என்று ரஷியா கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com