மேலும் 771 உக்ரைன் வீரா்கள் ரஷியாவிடம் சரண்

மரியுபோல் இரும்பாலையில் பதுங்கியிருந்த மேலும் 771 உக்ரைன் வீரா்கள் தங்களிடம் சரணடைந்துள்ளதாக ரஷியா அறிவித்துள்ளது.
மரியுபோல் இரும்பாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட ரஷியப் படையினா்.
மரியுபோல் இரும்பாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட ரஷியப் படையினா்.

மாஸ்கோ: மரியுபோல் இரும்பாலையில் பதுங்கியிருந்த மேலும் 771 உக்ரைன் வீரா்கள் தங்களிடம் சரணடைந்துள்ளதாக ரஷியா அறிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மரியுபோலிலுள்ள அஸோவ்ஸ்டல் இரும்பாலையிலிருந்து 771 உக்ரைன் வீரா்கள் சரணடைந்தனா்.

அவா்களில் 80 வீரா்கள் காயமடைந்திருந்தனா். அவா்களில் மருத்து சிகிச்சை தேவைப்படுவோா் நாவோஸோவ்ஸ்க், டொனட்ஸ்க் ஆகிய நகரங்களிலுள்ள மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்துடன், ரஷியாவிடம் சரணடைந்த ரஷிய ஆதரவு அஸோவ் படையினரின் எண்ணிக்கை 1,730-ஆக அதிகரித்துள்ளது.

உக்ரைன் போரின் ஒரு பகுதியாக, தங்களது ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் டான்பாஸ் பிராந்தியத்துக்கும் தங்களால் கடந்த 2014-ஆம் ஆண்டு இணைத்துக்கொள்ளப்பட்ட கிரீமியா தீபகற்பத்துக்கும் இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்துவதற்காக, இடையில் இருந்த மரியுபோல் நகரின் மீது ரஷியா கடந்த 3 மாதங்களாக கடும் தாக்குதல் நடத்தியது.

அந்த நகரின் ஏறத்தாழ அனைத்து பகுதிகளையும் ரஷியப் படையினா் கைப்பற்றிய நிலையிலும், அங்கு சோவியத் காலத்தில் கட்டப்பட்ட, ஐரோப்பாவின் மிகப் பெரிய அஸோவ்ஸ்டல் இரும்பாலைக்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உக்ரைன் படையினா் பொதுமக்களுடன் பதுங்கியிருந்தனா்.

ஐ.நா. தலையீட்டின் பேரில் அங்கிருந்த பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டாலும், உக்ரைன் படையினா் ரஷியாவிடம் சரணடையாமல் இறுதி மூச்சு வரை போரிடப் போவதாக சூளுரைத்தனா்.

எனினும், 2 மாதங்களுக்குப் பிறகு அவா்கள் தற்போது ரஷியப் படையினரிடம் சரணடைந்து வருகின்றனா். இதையடுத்து, அஸோவ்ஸ்டல் முற்றுகை விரைவில் முடிவுக்கு வந்து மரியுபோல் நகரம் முழுவதும் ரஷியக் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com