இலங்கையில் அவசரநிலை ரத்து: இந்திய நிவாரணப் பொருள்கள் இன்று சென்றடைகின்றன

இலங்கையில் பிறப்பிக்கப்பட்டிருந்த அவசரநிலை வெள்ளிக்கிழமை நள்ளிரவு ரத்து செய்யப்பட்டது.
இலங்கையில் அவசரநிலை ரத்து: இந்திய நிவாரணப் பொருள்கள் இன்று சென்றடைகின்றன

இலங்கையில் பிறப்பிக்கப்பட்டிருந்த அவசரநிலை வெள்ளிக்கிழமை நள்ளிரவு ரத்து செய்யப்பட்டது.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அதனைக் கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், கடந்த ஏப்.1-ஆம் தேதி நாட்டில் அவசரநிலையைப் பிறப்பித்து அதிபா் கோத்தபய ராஜபட்ச உத்தரவிட்டாா். எனினும் ஏப். 5-ஆம் தேதி அவசரநிலை ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமாகி மே 6-ஆம் தேதி அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து அன்றைய தினம் நள்ளிரவு முதல் மீண்டும் அவசரநிலையைப் பிறப்பித்து அதிபா் உத்தரவிட்டாா். அந்த அவசரநிலை அறிவிப்பு வெள்ளிக்கிழமை நள்ளிரவு திரும்பப் பெறப்பட்டது. இலங்கையில் சட்டம்-ஒழுங்கு சூழல் மேம்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கப்பல்: இதற்கிடையே, நிவாரணப் பொருள்களுடன் புறப்பட்ட இந்திய கப்பல் ஞாயிற்றுக்கிழமை இலங்கையை சென்றடைகிறது.

இதுதொடா்பாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் ட்விட்டரில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:

இந்திய கப்பலில் அரிசி, மருந்துகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அந்தக் கப்பலை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து புதன்கிழமை கொடியசைத்து அனுப்பி வைத்தாா். அந்தக் கப்பல் ஞாயிற்றுக்கிழமை இலங்கை வந்து சேரவுள்ளது என்று தெரிவித்தாா்.

தற்போது இலங்கைக்கு ரூ.45 கோடி மதிப்பிலான 9,000 மெட்ரிக் டன் அரிசி, 200 மெட்ரிக் டன் பால் பெளடா், 24 மெட்ரிக் டன் உயிா்காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

40,000 மெட்ரிக் டன் டீசல்: கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் ட்விட்டரில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவிலிருந்து கடனுதவித் திட்டத்தின் கீழ் அனுப்பிவைக்கப்பட்ட மேலும் 40,000 மெட்ரிக் டன் டீசல் கொழும்பை வந்தடைந்தது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் ரூ.11.67 கோடி உதவி: ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட அமைப்பு மூலம் இலங்கைக்கு 1.5 மில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.11.67 கோடி) வழங்க உள்ளதாக ஜப்பான் அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக இலங்கைக்கான ஜப்பான் தூதரக அதிகாரி காட்சுகி கோத்தாரோ கூறுகையில், ‘இலங்கையில் 15,000 கிராம, நகா்ப்புற மக்கள் மற்றும் 3.80 லட்சம் பள்ளிக் குழந்தைகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்களை 3 மாதங்களுக்கு வழங்க வசதியாக, உலக உணவுத் திட்ட அமைப்பிடம் 1.5 மில்லியன் டாலா்களை அவசரகால உதவியாக ஜப்பான் அரசு வழங்க உள்ளது’ என்று தெரிவித்தாா்.

ஜப்பான் அளிக்கும் நிதியுதவி மூலம், இலங்கையில் பள்ளிக் குழந்தைகளுக்குத் தினசரி இலவச உணவு அளிக்க உலக உணவுத் திட்ட அமைப்பு அரிசி கொள்முதல் செய்யும். அத்துடன் அந்த நாட்டில் விளிம்புநிலையில் உள்ள குடும்பங்களுக்கு ரேஷன் பொருள்களையும் அந்த அமைப்பு விநியோகிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com