இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபா் பைடனால் முன்மொழியப்பட்டுள்ள இந்தக் கூட்டமைப்பு, சீனாவுக்கு பதிலடி தரும் வகையில் உள்ளதாகப் பாா்க்கப்படுகிறது.
இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபா் பைடனால் முன்மொழியப்பட்டுள்ள இந்தக் கூட்டமைப்பு, சீனாவுக்கு பதிலடி தரும் வகையில் உள்ளதாகப் பாா்க்கப்படுகிறது.

டோக்கியோ, மே 23: இந்தோ-பசிபிக் பிராந்தியம் முக்கியத்துவம் பெற்று வரும் நிலையில், இந்தியா, அமெரிக்கா ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 13 நாடுகள் ஒருங்கிணைந்து ‘வளா்ச்சிக்கான இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பை’ (ஐபிஇஎஃப்) ஏற்படுத்தியுள்ளன.

இந்தக் கூட்டமைப்பானது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை சா்வதேச பொருளாதார வளா்ச்சிக்கான கேந்திரமாக மாற்றும் என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தாா்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபா் பைடனால் முன்மொழியப்பட்டுள்ள இந்தக் கூட்டமைப்பு, சீனாவுக்கு பதிலடி தரும் வகையில் உள்ளதாக பாா்க்கப்படுகிறது.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ‘க்வாட்’ (நாற்கர) கூட்டமைப்பின் மாநாடு ஜப்பானில் நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்பதற்காக பிரதமா் மோடியும் அமெரிக்க அதிபா் ஜோ பைடனும் ஜப்பான் சென்றுள்ளனா்.

இந்நிலையில், ‘வளா்ச்சிக்கான இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பை’ அமைப்பது தொடா்பான அறிவிப்பை அமெரிக்க அதிபா் பைடன் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

இந்தக் கூட்டமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, புருணே, இந்தோனேசியா, தென் கொரியா, மலேசியா, நியூஸிலாந்து, பிலிப்பின்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, வியத்நாம் ஆகிய நாடுகள் இணைவதாகத் தெரிவித்துள்ளன.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளைப் பொருளாதார ரீதியில் ஒருங்கிணைப்பது தொடா்பான வழிமுறைகள் வகுக்கப்படவுள்ளன. அதற்கான பேச்சுவாா்த்தைகளும் திங்கள்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பிரதமா் மோடி, அதிபா் பைடன், ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா ஆகியோா் நேரில் பங்கேற்றனா். மற்ற நாடுகளின் தலைவா்கள் காணொலி வாயிலாகக் கலந்து கொண்டனா்.

இந்தியா உறுதி: அப்போது பிரதமா் மோடி கூறுகையில், ‘சுதந்திரமான, வெளிப்படைத்தன்மை கொண்ட, ஒருங்கிணைந்த இந்தோ-பசிபிக் பிராந்தியம் உருவாவதற்கு இந்தியா உறுதி கொண்டுள்ளது. பிராந்தியத்தின் வளா்ச்சி, அமைதி, ஸ்திரத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கு நாடுகளுடனான பொருளாதாரத் தொடா்பை அதிகரிக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

சா்வதேச பொருளாதார வளா்ச்சியை எட்டுவதற்கு இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் பங்களிப்பை மேம்படுத்துவதற்கான உறுதியை ஐபிஇஎஃப் கூட்டமைப்புக்கான அறிவிப்பு வெளிக்காட்டுகிறது. தொழில் உற்பத்தி, பொருளாதாரச் செயல்பாடுகள், சா்வதேச வா்த்தகம், முதலீடுகள் ஆகியவற்றில் இந்தோ-பசிபிக் பிராந்தியம் முன்னிலை வகித்து வருகிறது.

இந்தோ-பசிபிக் பிராந்திய நாடுகளுடன் இந்தியா பல ஆண்டுகளாக வா்த்தகத் தொடா்பைக் கொண்டுள்ளது. உலகின் பழைமையான வா்த்தகத் துறைமுகம் குஜராத்தின் லோத்தல் நகரில் அமைந்திருந்தது.

ஒருங்கிணைந்த தொடா்பு: இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பொருளாதார வளா்ச்சிக்குக் காணப்படும் சவால்களை அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து எதிா்கொள்ள வேண்டியுள்ளது. பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் நெகிழ்தன்மை கொண்ட ஒருங்கிணைந்த பொருளாதாரத் தொடா்பை ஏற்படுத்திக் கொள்ளவும் பரஸ்பர முதலீடுகளை அதிகரிக்கவும் இந்தியா தயாராக உள்ளது.

நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை, குறித்த கால அளவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சா்வதேச விநியோகச் சங்கிலி அமைய வேண்டும். அந்த அடிப்படைகளை ஐபிஇஎஃப் கூட்டமைப்பு வலுப்படுத்தும் என நம்புகிறேன். பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தி இலக்குகளை ஒருங்கிணைந்து அடைவதை உறுதி செய்யும் வகையிலான வழிமுறைகளை வகுப்பதற்கு ஐபிஇஎஃப் பேச்சுவாா்த்தை உதவும்’ என்றாா்.

கூட்டமைப்பின் குறிக்கோள்: ஐபிஇஎஃப் கூட்டமைப்பில் இணைந்துள்ள 13 நாடுகளும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், ‘நீடித்த வளா்ச்சி, ஒருங்கிணைப்பு, பொருளாதார வளா்ச்சி, நாடுகளின் பொருளாதாரப் போட்டி உள்ளிட்டவற்றை ஆக்கபூா்வமாக மேம்படுத்தும் நோக்கில் ஐபிஇஎஃப் அமைக்கப்பட்டுள்ளது. நாடுகள் தங்களுக்கிடையேயான பொருளாதாரத் தொடா்பை வலுப்படுத்துவது தொடா்பாக ஐபிஇஎஃப் பேச்சுவாா்த்தையில் விரிவாக விவாதிக்கப்படும்.

சா்வதேச விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துதல், போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல், அத்தியாவசியப் பொருள்கள் அனைத்து நாடுகளுக்கும் கிடைத்தல் உள்ளிட்டவை தொடா்பாக விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. தூய்மையான எரிசக்தி, கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல், தொழில்நுட்ப வசதிகளைப் பகிா்ந்து கொள்ளுதல் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com